டாக்டர் மாலா பாலகோபால், சூர்யா மருத்துவமனை
கண் பாதுகாப்பிற்கு என தனியாகப் பயிற்சிகள் ஏதேனும் உள்ளதா? கண்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
முக்கியமாக, நல்ல வெளிச்சத்தில் கண் பார்வையைச் செலுத்துவது நல்லது. கம்ப்யூட்டரில் வேலை செய்வோர், கம்ப்யூட்டரை, நம் கண் பார்வையில் இருந்து, 20 முதல் 26 இன்சுகள் தள்ளியிருக்கிற மாதிரி அமைத்துக்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் இருக்கும் அறையில், வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மங்கலான வெளிச்சம் கூடாது. கம்ப்யூட்டர் பணியின்போது, ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒருமுறையும், திரையில் இருந்து கண்களை அகற்றி, 20 மீட்டர் தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும். இப்படிச் செய்யும்போது கண்களுக்கு இயல்பான பாதுகாப்பு கிடைக்கும். இதை 20க்கு 20 என்றுகூடச் சொல்வர்.
கம்ப்யூட்டரால், கண்கள் உலரும் பாதிப்பு ஏற்பட்டால், கண் டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். சிலர் கண்களில் நீரை முகத்தில் அடித்துக் கழுவுகிறார்கள். அப்படிச் செய்யும் அவர்கள், தூய்மையான நீரைப் பயன்படுத்த வேண்டும். மற்ற நீரைப் பயன்படுத்தும்போது அதில் கிருமிகள், தூசிகள் இருக்கலாம். அதனால், கண்களுக்குப் பாதிப்புகள் நேரிடலாம். கண் பார்வையை அதிகரிக்க கீரைகள், சத்தான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், முட்டை, மீன், பாதாம், வால்நட் போன்றவற்றைச் சாப்பிடுவதாலும் கண் பார்வையை அதிகரிக்க முடியும். முக்கியமாக, உடலில் சர்க்கரையளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
கண் தானத்தின் அவசியம் குறித்து சொல்லுங்கள்? நீரிழிவு உள்ளவர்கள்கூட கண் தானம் செய்யலாமா?
இன்று, கருவிழியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள், அறுவைச்சிகிச்சை மூலம் பார்வை பெற முடியும். இதற்கு, இறந்தவர்களின் கண்களைப் பயன்படுத்தலாம். கண் தானம் செய்ய விரும்புவோர், அதற்கான மையத்துக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். ஒருவர் இறந்தபின் 6-8 மணி நேரத்திற்குள் கண்களை எடுத்தால்தான் அவற்றைப் பயன்படுத்த முடியும். ஆகையால், கண் மருத்துவர் வந்து கண்களை எடுக்கும்வரை விழித்திரை உலராமல் இருக்க கண்தானம் செய்ய விரும்புபவர், இறந்தபின் அவர் கண்களின் மேல் நீரினைத் தேங்க வைக்க வேண்டும். இல்லையேல், நீரில் நனைத்த பஞ்சை வைக்க வேண்டும்.
ஒருவர் அளிக்கும் கண் தானத்தால், இருவர் கண் பார்வை பெற முடியும். ஆனால், தற்போது நால்வருக்குக்கூட பார்வையைக் கொடுக்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. தவிர, நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்தம் உள்ளவர்கள், கண் அறுவைச்சிகிச்சை செய்தவர்கள் என யார் வேண்டுமானாலும் கண் தானம் செய்ய முடியும். இதனால் எந்தப் பிரச்சினையும் பாதிப்புகளும் வர வாய்ப்பில்லை.
