என்ன செய்தார் சைதை துரைசாமி – 488
புரட்சித்தலைவி ஜெயலலிதா மறைந்ததும் அவருக்கு நினைவிடம் அமைப்பதில் குழப்பம் நிலவியது. கடலோர ஒழுங்காற்று மண்டல விதிமுறைகளின்படி கடற்கரையோரம் புதிய கட்டிடங்கள் கட்ட முடியாது என்ற காரணத்தினால் அடையாறு காந்தி மண்டபம், சஃபையர் தியேட்டர் அல்லது நேரு விளையாட்டு மைதானம் ஆகிய மூன்று இடங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யும் சூழல் நிலவியது.
இதனால் பதறிப்போன சைதை துரைசாமி, ’புதிய கட்டிடங்களுக்கு மட்டுமே அந்த விதி பொருந்தும். அதனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சமாதி அமைந்திருக்கும் இடத்துக்குள் புரட்சித்தலைவிக்கு சமாதி அமைப்பதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை’ என்று தெரிவித்தார்.
அடுத்து நடந்தது குறித்து சைதை துரைசாமி, ‘’அன்றைய தினம் தலைமை செயலாளராக இருந்த ராமமோகன்ராவ், முதல்வரின் செயலாளர் வெங்கட்ராமன், திட்டக்குழுத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் ஆகியோரிடம் மெரினா கடற்கரையில்தான் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று கூறினேன்.
இதையடுத்து பரமத்திவேலூர் தமிழ்மணி, கரூர் வழக்கறிஞர் பழனிசாமி ஆகியோர் திவாகரன் மூலம் சசிகலாவுக்கும் இந்தத் தகவலை தெரிவித்தேன். மெரினா கடற்கரையில் புரட்சித்தலைவிக்கு நினைவிடம் அமைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவேன் என்றும் உறுதியாகச் சொன்னேன்.
அதன் பிறகே, புரட்சித்தலைவர் நினைவிடத்தில் புரட்சித்தலைவிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றியே கலைஞர் கருணாநிதிக்கும் அண்ணா சமாதிக்குள் நினைவிடம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு அடையாளம் கொடுத்த இருபெரும் தலைவர்கள் நினைவிடத்திலும் எனக்கு பங்கு இருப்பது எனக்கு ஆத்மதிருப்தியளிக்கிறது…’’ என்றார்.
