துன்பம் வரும்போது சிரிக்க முடியுமா..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : தர்மம் செய்வதில் இன்று கர்ணன் போல வாழ்வதா அல்லது தர்மர் போல் வாழ்வதா?

எஸ்.கண்ணன், பாண்டிச்சேரி

ஞானகுரு :

நாட்டு சொத்தை எடுத்து தானம் செய்வது என்றால் நீ கர்ணனாக இருந்தாலும், தர்மனாக இருந்தாலும் சரிதான். உழைத்து சம்பாதித்த பணத்தை தானம் செய்வதாக இருந்தால், நிதானமாக யோசியுங்கள். கோயிலுக்குத் தர்மம் செய்வது மகா பாதகம். அதாவது கடவுளுக்கு பிச்சை போடுவது போன்ற அவமதிப்பு.

கண்ணுக்குத் தெரிந்து கஷ்டப்படும் நபர்களுக்கு கேட்காமல் கொடுங்கள். அதுவும், கஷ்டத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், சமாளிக்கச் சிரமப்படுகிறார்கள் என்று தெரிந்தால் தேடிப் போய் உதவி செய்யுங்கள். இதுவே சரியான தர்மம்.

கேள்வி : துன்பம் வரும் வேளையில் சிரிக்கச் சொல்கிறார்களே, அது சாத்தியமா?

பி.மதிவாணன், விளவங்கோடு.

ஞானகுரு :

ஏதோ ஒரு நாட்டில் நடந்த விமான விபத்தில் 80 பேர் பலி என்ற செய்தியை, தேநீர் அருந்தியபடி எந்த சலனமும் இல்லாமல் உங்களால் படிக்க முடியும். இது ஏன் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா..?

அவர்களுக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அதனால் அவர்களுடைய மரணம் பாதிக்கவில்லை. முகம் தெரியாத மூன்றாம் மனிதர்கள் போன்று உங்கள் உறவுகளையும், சொந்தத்தையும், நண்பர்களையும் தள்ளி வைப்பதுதான் உண்மையான துறவு நிலை. இந்த நிலையைத்தான் ஒவ்வொரு மனிதரும் அடைய வேண்டும்.

வாழ்க்கையில் துன்பம், இன்பம் என எதுவுமே நிஜம் இல்லை, நிலைத்திருக்கப் போவதும் இல்லை. இந்த உண்மை புரியாமல்தான் துன்பம் வந்ததும் மக்கள் அழுது புலம்புகிறார்கள். இந்த துன்பம் நிலைத்து நிற்கக்கூடியது இல்லை என்று புரியாமல் அழுது புலம்பும் மனிதர்களைப் பார்த்துத்தான் சிரிக்கச் சொல்கிறார் திருவள்ளுவர். துறவு நிலை அடைந்தவருக்கு இது நிச்சயம் சாத்தியமே..!

Leave a Comment