சீட்டிங் கணவன், சாடிஸ்ட் மனைவி

உறவுக் குழப்பத்துக்கு தீர்வு

அது ஓர் அறிவுள்ள மரமாக இருந்தாலும் சரி… ஆறறிவு உள்ள மனிதனாக இருந்தாலும் சரி, உயிர்களின் நோக்கம் இரண்டே இரண்டுதான். ஒன்று… இயன்றவரை ஜீவித்திருப்பது. அடுத்தது, தனது சந்ததியைப் பெருக்குவது. புல், பூண்டில் இருந்து பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என அத்தனை உயிர்களும் இதைத்தான் செய்கின்றன. ஆனால், மனிதன் மட்டும்தான் சந்ததி பெருக்குவதைத் திட்டமிட்டு செயல்படுத்துகிறான்.

திருமண பந்தம்

ஆம்… திருமணம் என்ற பந்தம் மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானது. ஒருவனுக்கு ஒருத்தி என்று சட்டம் போட்டு, கணவன் – மனைவி பந்தத்தைப் பாதுகாக்கிறான். இந்தப் பந்தத்தின் மூலம் ஓர் உயிர் உருவானதும், பேரானந்தம் கொள்கிறான். தங்கள் வம்சம் தழைக்கும் என்று ஆனந்தப்படுகிறான். அந்த உயிரை வளர்ப்பதற்காக தன்னுடைய உழைப்பையும் காலத்தையும் முழுமையாக செலவழிக்கிறான்.

தங்களது சுகங்களை எல்லாம் மறந்து, தங்கள் வாழ்நாள் முழுவதையும் அந்தப் புதிய உயிருக்காக அர்ப்பணிக்கிறார்கள். அந்த மனநிலையைத் தூண்டும் தம்பதி எனும் உறவு எத்தனை புனிதமானது… இனிமையானது? ஆனால் இப்போது கணவன், மனைவி உறவுக்குள் விதவிதமான பிரச்னைகள் எட்டிப் பார்க்கின்றன. கோர்ட்களில் விவாகரத்து வழக்குகள் நிரம்பி வழிகின்றன. எல்லாவற்றுக்கும் காரணம், சுய நலம் பெருத்துப்போனதுதான்.

சீட்டிங் கணவன்

கணவன் மனைவி எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு இரண்டு உதாரணங்கள்.  

கணவன் வீட்டுக்கு வரும்போது ஆங்காரத்துடன் இருந்தார் மனைவி. ‘உங்களுக்கு ஏற்கெனவே ராணின்னு ஒரு மனைவி இருக்கிறதை என்கிட்ட ஏன் சொல்லவே இல்லை. என்னை ஏமாத்தி கல்யாணம் முடிச்சிட்டீங்க’ன்னு சத்தம் போட்டாள்.

உடனே அவர், ‘கல்யாணத்துக்கு முன்னாடியே உன்கிட்ட தெளிவா விஷயத்தைச் சொல்லிட்டேன். இப்போ நீ கோபிக்கிறதுல அர்த்தமே இல்லை’னு சொன்னார்.

உடனே அந்தப் பொண்ணுக்குக் கோபம் அதிகமாயிடுச்சு. ‘நீங்க எப்ப சொன்னீங்க என்று கேட்டாள்.

‘என்னை கல்யாணம் முடிச்சிக்கிட்டா, உன்னை ராணி மாதிரி வைச்சுக் காப்பாத்துவேன்’னு சொன்னேன் என்றாராம்.

சாடிஸ்ட் மனைவி

இது நகைச்சுவை மட்டும் அல்ல… நிஜமாகவே நடக்கத்தான் செய்கிறது. ஆண்களின் உண்மைக் குணம் அறியாமல் பல பெண்கள் ஏமாறுகிறார்கள். இப்படிப்பட்ட ஆண்களிடம் இருந்து பெண்கள் எச்சரிக்கையாக தப்பிக்க வேண்டும்.

ஆண்களிடம் மட்டுமல்ல சில பெண்களிடமும் தவறு இருப்பதுண்டு. தத்துவ மேதை சாக்ரடீஸின் மனைவி ஜாந்திபியைப் பற்றி எல்லோருமே கேள்விப் பட்டிருப்போம்.

தன்னைத் தேடி வருபவர்களுக்கு உபதேசம் செய்துகொண்டே இருப்பது சாக்ரடீஸின் பணி. அதைப் பொறுக்காமல் திட்டிக்கொண்டே இருப்பது அவரது மனைவியின் குணம். சாக்ரடீஸ் பேச்சைக் குறைக்கவில்லை என்ற கோபத்தில், அவர் தலையில் தண்ணீரைக் கொண்டுவந்து கொட்டினாராம் ஜாந்திபி.

அப்போதுகூட சாக்ரடீஸ் அசராமல், ‘இதுவரை இடி இடித்தது… இப்போது மழை கொட்டுகிறது’ என்றாராம்.

சாக்ரடீஸ் போன்று அனைத்து ஆண்களும் பொறுமையாக இருக்கவேண்டும் என்பதல்ல… பெண்கள் அளவுக்கு மீறி கோபப்படுவது நல்லதல்ல. அதனால் புனிதமான உறவு முறிந்துபோகும் அபாயம் உள்ளது.

வாழ்வது கொஞ்ச காலம்தான். எனவே, கணவனும் மனைவியும் இணைந்து ஆனந்தமாக வாழும்போதுதான், இந்த உலகிற்கு வரும் உயிரானது உன்னதமான நிலையை அடையும். குழப்பங்களை தீர்த்துக்கொள்ள முடியவில்லை என்றால், கவுன்சிலிங் செல்லுங்கள். வாழ்க்கை மாறிவிடும்.

Leave a Comment