ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : இளமை, முதுமை எது இனிது?
– எஸ்.பூங்காவனம், பெரியகுளம்
ஞானகுரு :
இளமை, முதுமை என்பதெல்லாம் உடலுக்குத்தானே தவிர மனசுக்கு இல்லை. மனதை இளமையாக வைத்திருப்பவரால் முதுமையையும் இனிமையாக அனுபவிக்க முடியும்.
ஒவ்வொரு வயது அதிகரிக்கும்போதும், அனுபவங்கள் அதிகரிக்கிறது என்ற சந்தோஷம் வரவேண்டுமே தவிர, இளமை பறிபோகிறது என்ற அச்சம் வரக்கூடாது. இளமையைப் போலவே முதுமையையும் கொண்டாட முடியும்.
……………………….
கேள்வி : பிறர் சொத்தை அபகரிப்பதற்கு நிறைய பேர் துடிக்கிறார்களே..?
– எஸ்.சாந்தி, உசிலம்பட்டி.
ஞானகுரு :
இந்த பூமியில் யாருக்குமே சொந்தமாக எந்த சொத்தும் கிடையாது. வெறும் கையுடன் பிறந்த மனிதர்கள் அனைவரும் வெறும் கையுடனே திரும்புகிறார்கள். அதனால் சொத்து என்று அபகரிப்பதும், என்னுடைய சொத்து என்று பெருமைப்படுவதும் அறியாமை என்பதை அவர்களுடைய முதுமை நிச்சயம் உணர்த்திவிடும்.
