மாநகராட்சிக்கு 26,910 மணி நேரம் உழைப்பு

என்ன செய்தார் சைதை துரைசாமி – 457

சென்னை மாநகராட்சிக்கு மேயர் சைதை துரைசாமி போன்று எந்த ஒரு மேயரும் கடுமையாக உழைத்தது இல்லை. ஏனென்றால் இவர் மேயர் பதவியை தனக்கு சேவை செய்வதற்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாகவே கருதினார்.

பொதுவாக மேயர் பதவியை அலங்காரப் பதவியாகவும், தங்கள் இமேஜை உயர்த்திக்கொள்ளும் பகுதி நேரப் பணியாகவும் மட்டுமே கருதினார்கள். அதனால் மன்ற விழாக்கள், மாமன்றக் கூட்டம், கள ஆய்வுக்கு மட்டுமே அலுவலகம் வருவார்கள். இவர்களுக்கு மத்தியில் சைதை துரைசாமி மட்டும்தான், மேயர் பணியை முழுநேரப் பணியாக மேற்கொண்டவர்.

சைதை துரைசாமி அக்டோபர் 11-ம் தேதியன்று மேயராகப் பொறுப்பேற்பதற்கு முன்னரே, அதுவரை செய்துவந்த சொந்த வணிக நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக வெளியேறி முழுநேர பொதுவாழ்வுக்கு தன்னை அர்ப்பணித்தார். அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை பொதுமக்கள் சந்திப்பு, கள ஆய்வு, அதிகாரிகள் சந்திப்பு, ஆலோசனைகள் என்று முழுக்கமுழுக்க பொதுநல சிந்தனையுடன் செயல்பட்டார்.

பதவி ஏற்ற நாள் தொடங்கி பதவி முடிவுக்கு வந்த நவம்பர் 16-ம் தேதி வரை கிட்டத்தட்ட 26,910 மணி நேரங்கள் உழைத்திருக்கிறார். அதாவது அரசு விடுமுறை நாட்கள், வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா நாட்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் விதிகள் காரணமாக அலுவலகம் வருகை தராத நாட்கள் தவிர்த்து, 1337 நாட்கள் அலுவலகம் வருகைதந்து சாதனை படைத்திருக்கிறார்.  அலுவலகம் வராமல் வீட்டில் இருந்து சேவையாற்றிய 158 நாட்களும் சேர்த்து, அதாவது 1,495 நாட்களில் தினமும் 18 மணி நேரம் என 26,910 மணி நேரம் மக்கள் சேவைக்கு உழைத்திருக்கிறார்.

பொதுமக்கள் சந்திப்பு, கள ஆய்வு, கலந்தாய்வு, அலுவகப்பணி, திட்டப்பணிகள், திறப்பு விழாக்கள், பொதுநல அமைப்புகளின் நிகழ்ச்சிகள், அரசு மற்றும் மாநகராட்சி நிகழ்ச்சிகள், கல்வி நிகழ்ச்சிகள், அனைத்து சமுதாய மக்களின் திருமணம், துக்க நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என தினமும் காலை 5:30 மணி முதல் இரவு 11 மணி வரை சோர்வின்றி உழைத்தார்.

அதிகாரிகள் சுட்டிக்காட்டும் கோப்புகளில் கையெழுத்துப் போட்டு, அவர்கள் சொல்வதை மட்டும் செய்யும் தலையாட்டி மேயராக இல்லாமல், மக்கள் மற்றும் நகர மேம்பாட்டுக்கு இன்னும் எப்படியெல்லாம் பணியாற்றலாம் என்று சிந்தித்த மேயராகத் திகழ்ந்தார். அதனால்தான் இவரது மேயர் கால வளர்ச்சிப் பணிகள், இன்றும் தனித்தன்மையுடன் திகழ்கின்றன.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment