ரமணரும் வாரியாரும் ஞானிகளா..?

ஞானகுரு தரிசனம்

கேள்வி : இரண்டு, மூன்று நாள் வெள்ளத்திலேயே மாடி வீட்டுக்காரர்களும் உணவுக்கு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுவிடுவது எதைக் காட்டுகிறது..?

– என்.தனசேகரன், முத்தால்நகர்.

ஞானகுரு :

இவற்றை விபத்து என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் எத்தனை முன்னெச்சரிக்கையுடன் சென்றாலும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்துச் சென்றாலும், ஒரு குடிகாரனால் அல்லது வாகனத்தின் பழுதால் விபத்து நேர்ந்துவிடலாம். நாம் சரியாகப் போயும் விபத்தில் மாட்டிக்கொண்டோமே என்று கவலைப்படுவதைவிட, உயிர் பிழைத்தோமே என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும். புயலும் வெள்ளமும் ஏழை, பணக்காரர் பார்த்து அடிப்பதில்லை. ஆகவே, நடப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கேள்வி : ரமண மகிரிஷி, கிருபானந்த வாரியார் போன்ற ஆன்மிகவாதிகள் குறித்து தங்கள் கருத்து என்ன..?

– எஸ்.கனகராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஞானகுரு :

எத்தனை பெரிய கூட்டத்தையும் தன்னுடைய சொற்பொழிவால் கட்டிப்போடும் திறன் வாரியாருக்கு உண்டு. மெளனமாக இருந்தே ஒரு பெரும் கூட்டத்தை கட்டிப் போட்டவர் ரமணர். வாரியார் துட்டுக்காகப் பேசியவர் என்பதால் அவரை யாரும் வழிகாட்டியாக ஏற்கவில்லை. ரமணரின் மெளனத்தை தங்களுக்குப் பிடித்த வகையில் எல்லாம் மக்கள் மொழி பெயர்த்துக்கொண்டதால், அவரை ஒரு ஞானியாக கருதினார்கள்.

இரண்டு பேரும் எளிய மக்களை தேடிச் சென்றதில்லை. அவர்கள் வாழ்க்கைக்கு எந்த வழியும் காட்டியதில்லை, தங்களைத் தேடி வந்தவர்களுக்கு ஆசிர்வாதம் கொடுத்தார்கள். எந்த ஒரு மனிதனாலும் இன்னொருவருக்கு ஆசிர்வாதம் தர முடியாது என்பதே உண்மை. அப்படி வழங்கப்படும் ஆசிர்வாதத்தில் எந்த உண்மையும் இருப்பதில்லை.

Leave a Comment