ஞானகுரு தரிசனம்
இந்த உலகில் நூற்றுக்கு எண்பது சதவிகித காதல் திருமணம் வரை வருவதே இல்லை. சுமார் 20 சதவிகித காதல் மட்டுமே திருமணத்தை எட்டிப் பிடிக்கிறது. அப்படி நடந்த திருமணங்களிலும் சுமார் 10 சதவிகிதம் வரை தோல்வி அடைகிறது. திருமணத்துக்குப் பிறகு, தான் விரும்பியவரைக் காதலியாக அல்லது காதலனாக பார்ப்பதுதான், தோல்விக்கு முக்கியக் காரணமாகிறது.
ஏனென்றால் காதல் பொறுப்புகள் இல்லாதது. பொருளாதார நிர்ப்பந்தங்கள் தராதது. நேரம், காலம் என்ற கட்டுப்பாட்டுக்குள் சிக்காதது. ஆனால் கணவன், மனைவி உறவுக்கு என்று சில விதிகள் இருக்கின்றன. அதனால் திருமணத்துக்குப் பிறகு இருவரும் கணவன், மனைவி என்ற வேடத்திற்குப் பொருத்தமாக மாறவேண்டும். பணம் சம்பாதிப்பது, சேமிப்பது, வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, குழந்தை வளர்ப்பது, பதவியில் உயர்வது என்ற சமூக காரணங்களுக்காக வாழ வேண்டும். இந்த தம்பதி வேடத்திற்குப் பொருத்தமாக தங்களை மாற்றிக்கொள்ளும் காதலர்களே வாழ்வில் வெற்றி அடைய முடியும்.
திருமணத்துக்குப் பிறகும் காதலில் கிடைத்த பொறுப்பற்ற இன்பத்தை எதிர்பார்க்கும் போது ஏமாற்றமும், வேதனையும், வலியுமே கிடைக்கும்.
காதல் இனிமையானது என்றால் தாம்பத்தியம் அதை விட இனிமையானது. ஏனென்றால், இங்கே சாய்ந்துகொள்ளத் தோள்கள் உண்டு. பொறுப்புகளை எடுத்துக்கொள்ள துணை உண்டு. ஆறுதலுக்கும் ஆட்கள் உண்டு.
ஆதலினால் காதல் செய்வீர்… கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன்!
