யாரிடமும் சிரித்துப் பேசலாம். ஆனால் எல்லோரிடமும் அழுதுவிட முடியாது.

மந்திரச்சொல்

சிரிப்பதற்கு நாம் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதும். பக்கத்தில் நன்கு  அறிமுகமான நபர்கள் இருப்பதற்கு அவசியமில்லை. கடைக்காரர், பேருந்தில் சக பயணி, அலுவலகத்தில் வேலை செய்பவர் என தெரிந்தவர், தெரியாதவர்களிடம் புன்னகையைப் பகிர்ந்துகொள்ளலாம்.

ஆனால், மனம் உடையும் தருணங்களில் எல்லோரிடமும் அழுதுவிட முடியாது. அப்போது ஒரு தோள் மட்டும் போதாது. நம்மைப் புரிந்துகொள்ளும் ஒரு மனம் அவசியமாகிறது. மனம்விட்டு அழுவதற்கு பாதுகாப்பான நபர் தேவை.

நம் துயரத்தைச் சொன்னால் கேலி செய்வார், குறை கூறுவார், மற்றவர்களிடம் சொல்லிவிடுவார், நம்மைத் தவறாகப் புரிந்துகொள்வார் என்ற சந்தேகம் இருந்தாலே, மனம் தன்னுடைய உண்மையான உணர்வுகளை மறைத்துக்கொள்ளும். அதனால்தான் சிலருடன் மணிக்கணக்கில் பேச முடிந்தாலும், மனக்கவலையைப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை.

ஒவ்வொரு மனிதருக்கும் பல முகங்கள் உண்டு. குடும்பத்திற்கு வலிமையானவராக இருக்கிறோம். பிள்ளைகளுக்காகக் கவலைகளை மறைக்கிறோம். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகளைப் பொறுத்துக்கொள்கிறோம்.

இத்தனை முகங்களுக்குப் பின்னால் ஒவ்வொரு நபருக்கும் சோர்வடைந்த ஒரு மனம் இருக்கும். அந்த மனம் எப்போதும் தீர்வுகளை எதிர்பார்ப்பதில்லை. சில நேரங்களில், தான் அனுபவிக்கும் வேதனையை யாராவது புரிந்துகொள்ள வேண்டும் என்று மட்டும் விரும்புகிறது. அதனால்தான் நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரிடம் பேசத் தொடங்கியதும் அழுகை எட்டிப் பார்க்கிறது. அழுகை தனிமை உணர்வைக் குறைக்கவும், மன அழுத்தத்தைச் சமாளிக்கவும் உதவுகிறது.

அதேநேரம், அழுவதால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்த்துவிடாது. ஆனால், அழும்போது நம்மை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் அருகில் இருப்பது, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனவலிமை தரும். அந்த நம்பிக்கைதான் ஆழமான உறவு கொடுக்கிறது.

உங்களிடம் ஒருவர் வேதனையைப் பகிர்ந்துகொண்டால், உடனே அறிவுரை கூறத் தொடங்காதீர்கள். அழுகையை நிறுத்தச் சொல்லி அவசரப்படுத்தாதீர்கள். அவர் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது என்று சொல்லுங்கள். உங்கள் பேச்சைக் கேட்கத் தயாராக இருக்கிறேன் என்று உணர்த்துங்கள். அவர் பகிர்ந்துகொண்ட தனிப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் கேட்காதபோது தேவையற்ற அறிவுரைகளை வழங்காதீர்கள். அவருடைய பிரச்சினையை மற்றவர்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட்டுக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

ஒருவருடைய கண்ணீரை உடனடியாக நிறுத்த முடியாமல் போகலாம். ஆனால், அந்தக் கண்ணீரை அவர் தனியாகச் சுமக்க வேண்டியதில்லை என்ற நம்பிக்கையை கொடுக்க முடியும். அதுவே அன்பின் மிக அழகான வடிவங்களில் ஒன்று.

சிரிப்பைப் பார்த்து மகிழ்பவர்கள் உங்களை விரும்பலாம். வெற்றியைப் பார்த்துப் பெருமைப்படலாம். அதேநேரம், உங்கள் கண்ணீரைப் பார்த்தும் உங்களைத் தாழ்வாக நினைக்காமல், உங்கள் வலியைக் கேட்டும், உங்களைத் தவறாகத் தீர்ப்பளிக்காமல், பேச முடியாமல் மௌனமாக இருக்கும்போதும் உங்களுக்குத் துணையாக இருப்பவர்களே மனதுக்கு நெருக்கமானவர்கள்.

அப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் கிடைத்தால், அவர்களை அலட்சியப்படுத்தாதீர்கள். அவர்களுடைய அன்பை மதியுங்கள். ஏனென்றால், சிரிப்பைப் பகிர்ந்துகொள்ள ஆயிரம் உறவுகள் கிடைக்கலாம். ஆனால் கண்ணீரைப் பகிர்ந்துகொள்ளும் பாதுகாபான உறவு கிடைப்பது வரம். அதைப் போற்றுங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment