நேற்றை சரி செய்ய முடியாது. ஆனால், நாளையை செம்மையாக்க முடியும்.

மந்திரச்சொல்

ஒரு மரத்தின் கிளை புயலில் உடைந்துவிடலாம். அதற்காக மரம் வளர்வதை நிறுத்திவிடுவதில்லை. அது உடைந்த இடத்திலிருந்து மீண்டும் வளரத் தொடங்கும்.

மனித வாழ்க்கையும் அப்படித்தான் மாற வேண்டும். நேற்று சில தவறுகள் நடந்திருக்கலாம். உறவுகள் உடைந்திருக்கலாம். கனவுகள் சிதைந்திருக்கலாம்.
முயற்சிகள் தோல்வியடைந்திருக்கலாம். தவறான மனிதரை நம்பி ஏமாந்திருக்கலாம்.
தேர்வில் தோற்றிருக்கலாம். தொழிலில் நஷ்டமடைந்திருக்கலாம்.

ஆனால், வாழ்க்கை மிச்சமிருக்கிறது. வாழ்க்கையின் வேர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. நேற்றைய காயத்தை மாற்ற முடியாது என்பது உண்மைதான். ஆனால் நாளைய வாழ்க்கையை மாற்ற முடியும்

மனிதர்களிடம் மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது. அதாவது நடந்த தவறுகளை நினைத்து நினைத்து, இன்னும் நடக்காத எதிர்காலத்தைக் கெடுத்துக்கொள்கிறார்கள். நேற்று என்பது ஒரு பாடம் என்றால் நாளை என்பது ஒரு வாய்ப்பு. அதனால் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும்.

கார் ஓட்டும்போது முழுநேரமும் பின்புறக் கண்ணாடியை பார்த்துக்கொண்டே ஓட்டினால் விபத்துதான் நடக்கும். பின்னே நடப்பதை அறிய மட்டுமே பின்புறக் கண்ணாடி இருக்கிறது. அதனால் தேவையில்லாத நேரங்களில் அதை பார்க்கத் தேவையில்லை. அதேபோல் வாழ்க்கையிலும் கடந்த காலத்தைப் பார்க்கலாம்; ஆனால் அதையே பார்த்துக்கொண்டு வாழ்க்கையை நடத்தக்கூடாது.

ஒரு மாணவன் தோல்வியடைந்தவுடன் என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தால், அடுத்த ஆண்டையும் இழந்துவிடுவான். ஆனால், அவனே மீண்டும் படித்து தேர்ச்சி பெற்று. உயர்கல்வி முடித்து வாழ்க்கையில் முன்னேற முடியும்.  காலத்தை சிறையாக மாற்றுகிறீர்களா, அல்லது பயிற்சியாக மாற்றுகிறீர்களா என்பதுதான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.

அப்போது நான் அந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது, அவனை நம்பியிருக்கக் கூடாது, அந்த வேலையை விட்டிருக்கக் கூடாது, இன்னும் முன்பே முயற்சி செய்திருக்க வேண்டும் என்று கடந்த காலத் தவறுகளை ஆயிரம் முறை நினைத்தாலும் மாறப்போவதில்லை. காலத்தை யாராலும் பின்னோக்கி நகர்த்த முடியாது. ஆனால் இன்று எடுக்கும் ஒரு நல்ல முடிவு, நாளைய வாழ்க்கையை நல்லதாக மாற்றலாம்.

கடந்த காலத்தை மாற்றும் டைம் மிஷின் யாரிடமும் இல்லை. ஆனால், எதிர்காலத்தை உருவாக்கும் மனம் இருக்கிறது. எனவே, முதலில் நடந்ததை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். ஏன் இப்படி நடந்தது என்று தொடர்ந்து கேட்பதை விட, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதுதான் மனதை பலவீனத்திலிருந்து வலிமைக்குக் கொண்டு செல்லும்.

நாளைய வாழ்க்கையை மாற்றுவதற்குப் பெரிய திட்டம் போட வேண்டியதில்லை. சின்னச்சின்ன மாற்றங்களை உருவாக்குங்கள். சிறிய மாற்றங்களால் மிகப்பெரிய எதிர்காலம் உருவாகிறது. நேற்று உங்கள் கையில் இல்லை. ஆனால் இன்று உங்கள் கையில் இருக்கிறது. இன்று சரியாகப் பயன்படுத்தப்பட்டால், நாளை உங்கள் விருப்பப்படி உருவாகும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment