ரெஸ்ட்லிங் சூப்பர்ஸ்டார்

Image

அண்டர்டேக்கர்

மரணமே இவரை பார்த்தா செத்துப் போயிடும், இவருக்கு ஏழு உசுர் இருக்கு, அதனால சாகவே மாட்டார், சவப்பெட்டியில்தான் இவர் படுத்துத் தூங்குவார், அதனால இவர்தான் உண்மையான டெட் மேன் – இதெல்லாம் யாரைப் பற்றி சொல்லப்படுவது என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும், ஆம், அவர் ஒன்லி ஒன் சூப்பர் ஹீரோ என்று சொல்லப்படும் அண்டர்டேக்கர்.

இத்தனை காலம் இள வயதினரை மகிழ்வித்த அண்டர்டேக்கர், ‘இனிமேல் ஜெயிப்பதற்கோ, சாதிப்பதற்கோ எனக்கு எதுவும் இல்லை. ஆட்டம் மாறிவிட்டது. புதியவர்களுக்கான நேரம் இது’ என்று ஓய்வை அறிவித்திருக்கிறார்.

யார் இந்த அண்டர்டேக்கர்?  

1990ம் ஆண்டு உலக ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கில் (WWE) ரெஸ்ட்லராக அறிமுகமான இவர், கடந்த 30 ஆண்டுகளில் 27 போட்டிகளில் பங்கேற்று 25ல் வெற்றிபெற்றுள்ளார். களத்தில் சண்டை போடுவதற்காக, இவர் பைக்கில் வரும்தொனியே கொஞ்சம் மிரட்டலானது. அது மட்டுமல்லாது, சண்டையின்போது தன் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த அவர் ஒருபோதும் தவறியது  

ஃப்ராங்க் காம்ப்டன் கேலவே என்ற அமெரிக்கருக்கு, 1965ம் ஆண்டு ஐந்தாவது ஆண் குழந்தையாகப் பிறந்தவர்தான் அண்டர்டேக்கர். மார்க் வில்லியம் கேலவே என்பது இவரது இயற்பெயர். அண்டர்டேக்கர் என்றால் இறுதிச் சடங்குகளைச் செய்பவர் என்று அர்த்தம். சிறுவயதில் இருந்தே அண்டர்டேக்கருக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருந்தது. அதனால், அவர் தன்னுடைய சகோதரர்களுடன் இணைந்து விளையாடுவார். இதனால் பள்ளிக் காலத்திலேயே  கால்பந்து மற்றும் கூடைப்பந்து அணிகளில் நட்சத்திர ஆட்டக்காரராக சிறந்து விளங்கினார்.  அந்தத் தகுதி, கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும் வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தது. தொடர்ந்து டெக்சாஸ் வெஸ்லியான் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுத் துறை சம்பந்தமாக படித்த அண்டர்டேக்கருக்கு, மல்யுத்தம் மீது ஈடுபாடு வர ஆரம்பித்தது.
இதையடுத்து, டெக்சாஸ் மாகாணத்தில் இயங்கிவந்த பிரபல ரெஸ்லிங் நிறுவனமான WCCWவில், டெக்ஸாஸ் ரெட் என்ற பெயரில் 19 வயது இளைஞனாக அறிமுகமானார். முதல் போட்டி தோல்வி என்றாலும், கவலைப்படாமல் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார். இந்த நிலையில், WCCW நிறுவனத்திலிருந்து வெளியேறி CWA நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கே, மாஸ்டர் பெய்ன் என்ற பெயரில் மல்யுத்தம் செய்துவந்த அண்டர்டேக்கர், அப்போதைய சாம்பியன் ஜெரி லாலரை எளிதில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மல்யுத்தப் போட்டிகளில் அவர் பெற்ற முதல் சாம்பியன்ஷிப் பட்டம் அது. அதன்பிறகு மளமளவென பிரபலமானார். இதையடுத்து, உலகின் மிகப்பெரிய தொழில்முறை மல்யுத்த நிறுவனங்களில் ஒன்றான   WWF/WWE அவரை அழைத்துக்கொண்டது.
1990ம் ஆண்டு, சர்வைவர் சீரிஸ் போட்டியில் அறிமுகமான அண்டர்டேக்கர், அதற்கு அடுத்த ஆண்டு நடந்த சர்வைவர் சீரிஸ் போட்டியில், அப்போதைய WWE சூப்பர் ஸ்டார் ஹல்க் ஹோகனை தோற்கடித்து, உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். அன்று ஆரம்பித்த அவருடைய வெற்றிப் பயணம், இன்றுவரை நீடிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அண்டர்டேக்கர் இல்லையேல் WWE இல்லை என்றாகிவிட்டது. உலக ஹெவி வெயிட் சாம்பியன்ஷிப், ஹார்ட்கோர் சாம்பியன்ஷிப், WWE சாம்பியன்ஷிப் என எல்லாவற்றிலும் சாதனை படைத்திருக்கிறார், அண்டர்டேக்கர்.

ரெஸில்மேனியா போட்டிகளில் வேறெந்த வீரரும் செய்யாத சாதனையாக 27 முறை சண்டையிட்டுள்ளார். ஆம், தொடர்ச்சியாக 21 போட்டிகளில் வென்றிருக்கிறார். நான்கு தலைமுறை வீரர்களை வீழ்த்திப் புதைத்திருக்கிறார். ரெஸ்லிங் வரலாற்றில் இனி எவராலும் எட்டமுடியாத சாதனை இது.
WWE போட்டிகளில் ரே மிஸ்டிரியோ, ஜான் செனாவுக்கு நிகராக, தன்னையும் குழந்தைகள் விரும்பும்படிச் செய்தார். அதற்காக, கறுப்பு நிறங்களில் ஆடைகள் அணிந்துகொண்டும், பயமுறுத்தும் உடல்மொழிகளைக் கொண்டும் குழந்தைகளைக் கவர்ந்தார். அதேபோல், வளரும் இளம் மல்யுத்த வீரர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களுடன் சண்டையிட்டு, அவர்களை வளர்த்துவிடவும் செய்தார். ப்ராக் லெஸ்னர், ரேன்டி ஆர்டன், பட்டிஸ்டா உள்ளிட்ட வீரர்கள் அண்டர்டேக்கரின் சிஷ்யர்கள் என்றுகூடச் சொல்லலாம்.

அண்டர்டேக்கர், தன் எதிரியிடம் அதிகபட்சமாக 30 நிமிடம் சண்டை போட்டிருக்கிறார். அதேநேரத்தில், 18 நொடிகளிலும் போட்டியை முடித்து வைத்திருக்கிறார். இப்படி அண்டர்டேக்கரை பற்றிப் பேச நிறையவும் இருக்கிறது. புத்தகங்களில் நிறைந்தும் இருக்கிறது. என்றாலும் எல்லோருடைய உதடுகளாலும் அதிகம் உச்சரிக்கப்பட்ட, பல எட்டமுடியாத சாதனைகளைப் புரிந்த அண்டர்டேக்கர், இனி மல்யுத்த களத்துக்கு விடுதலை கொடுத்துவிட்டார் என்பதுதான் பலகோடி ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.
ரெஸில்மேனியா போட்டிகளில் 21 வருடங்களாக வெற்றிவாகை சூடிவந்த அண்டர்டேக்கர், சில ஆண்டுகளுக்கு முன்னர்  ஒரு தோல்வியைத் தழுவினார். அப்போதே தன்னுடைய தடுமாற்றத்தை புரிந்துகொண்டார். இன்னும் சில ஆண்டுகள் களத்தில் நீடிக்கமுடியும் என்று தெரிந்தாலும், பழைய மிரட்டலுடன் பவனிவர முடியாது என்பது புரிந்ததும் சட்டென ஓய்வை அறிவித்துவிட்டார்.

ஓய்வு பெற்றுவிட்டாலும் ரெஸ்லிங் உலகில் என்றென்றும் அண்டர்டேக்கர்தான், சூப்பர் ஸ்டார். 

Leave a Comment