ஸிட்ஸ் என்பது ஒரு கணநேர அலட்சியம் இல்லை. வாழ்நாள் முழுவதும் நினைவில் வைக்க வேண்டிய மருத்துவ எச்சரிக்கை.
நமது வீடுகளில், “கோழி மிதித்துக் குஞ்சு சாகுமா?” என்று பேச்சுவழக்கில் கேட்பதுண்டு. உண்மையில் கோழியின் உடல் அழுத்தத்தால் குஞ்சு இறப்பதற்கு வாய்ப்பிருப்பதைப் போலவே, பெரியவர்கள் தூங்கும்போது குழந்தையின் மீது புரண்டு படுப்பதால் பிள்ளையின் உயிருக்கு ஆபத்துவர வாய்ப்பு உண்டு.
குழந்தையின் தாய், அதன் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொள்கிறார். இரவில் பலமுறை கண் விழித்து பால் கொடுக்கிறார். குழந்தை அழுதால் உடனே தூக்குகிறார். காய்ச்சல் வந்தால் பதறுகிறார். ஆனால், அந்தத் தாயே கடும் சோர்வில் ஆழ்ந்த தூக்கத்துக்குச் செல்லும்போது, குழந்தையின் பாதுகாப்பில் சில ஆபத்துகள் ஏற்படலாம்.
இது தாய்மார்களைக் குற்றம் சாட்டுவதற்கான விஷயம் அல்ல. மாறாக, ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான மருத்துவ விழிப்புணர்வு.
திடீர் மரணங்கள்
சிட்ஸ் SIDS (Sudden Infant Death Syndrome) என்பது, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை தூக்கத்தின்போது அல்லது தூக்கச் சூழலில் எதிர்பாராத விதமாக இறந்துவிடும் நிலையைக் குறிக்கிறது. குறிப்பாக முழுமையான மருத்துவ விசாரணை, உடற்கூறாய்வு மற்றும் இறப்பு நிகழ்ந்த சூழலை ஆய்வு செய்த பிறகும் தெளிவான காரணம் கண்டறியப்படாத மருத்துவ நிலை எனலாம்.
ஆனால், தூக்கத்தில் இறக்கும் எல்லா குழந்தைகளின் மரணமும் சிட்ஸ் அல்ல. சில குழந்தைகள் தற்செயலான மூச்சுத்திணறலால் இறக்கலாம். சில குழந்தைகள் படுக்கை இடுக்கில் சிக்கிக்கொள்ளலாம். சிலருக்கு வேறு மருத்துவக் காரணங்கள் இருக்கலாம். காரணம் கண்டறியப்படாத சில மரணங்களே ஸிட்ஸ் என வகைப்படுத்தப்படுகின்றன.
தூக்கத்துடன் தொடர்புடைய எதிர்பாராத குழந்தை மரணங்களுக்கான பொதுவான பெயர் SUID (Sudden Unexpected Infant Death). இதில் சிட்ஸ் மட்டுமின்றி, தற்செயலான மூச்சுத்திணறல் உள்ளிட்ட வேறு காரணங்களால் நிகழும் மரணங்களும் அடங்கும்.

அமெரிக்காவில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 3,500 குழந்தைகள் தூக்கத்தின்போது எதிர்பாராத விதமாக இறப்பதாக அமெரிக்கக் குழந்தை மருத்துவக் கழகம் தெரிவிக்கிறது. இவற்றில் ஸிட்ஸ் மற்றும் தற்செயலான மூச்சுத்திணறல் அல்லது கழுத்து நெரிதல் போன்ற காரணங்கள் அடங்கும்.
இந்த எண்ணிக்கை நமக்கு உணர்த்துவது என்னவென்றால், குழந்தையின் தூக்கம் என்பது வெறுமனே ஓய்வுக்கான நேரமல்ல, அது பாதுகாப்பாக அமைக்கப்பட வேண்டிய சூழல். குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகக்கூடிய சூழல்களில் கவனமாக இருக்க வேண்டும்.
1. புரண்டு படுத்தல்
தாய் அல்லது தந்தை குழந்தையுடன் ஒரே படுக்கையில் உறங்கும்போது, தூக்கத்தில் தெரியாமல் குழந்தையின் மீது புரண்டு படுக்கலாம். இதனால் குழந்தையின் மூக்கு, வாய் அல்லது மார்பு பகுதியில் அழுத்தம் ஏற்படலாம்.
சிறிய குழந்தைகளால் தலையைத் திருப்பி விலகுவதற்கோ, தங்கள் உடலைத் தள்ளி நகர்த்துவதற்கோ போதுமான வலிமை இருக்காது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். இதனை மருத்துவத்தில் ஓவர்லே Overlay என்பார்கள். பெற்றோருடன் படுத்திருந்தபோது இறந்துவிட்டது என்பதற்காக, பெரியவர் குழந்தை மீது புரண்டு படுத்தார் என்று உடனடியாக முடிவுசெய்ய முடியாது. இறப்பின் காரணத்தை மருத்துவ விசாரணைதான் தீர்மானிக்க வேண்டும்.
2. தலையணை, போர்வை
பெரியவர்களுக்கு வசதியாக இருக்கும் தலையணை, தடிமனான போர்வை, மென்மையான மெத்தை ஆகியவை குழந்தைகளுக்கு ஆபத்தாகலாம். குழந்தையின் முகம் தலையணைக்குள் புதைந்துவிட்டாலோ, போர்வை மூக்கு மற்றும் வாயை மூடிவிட்டாலோ, காற்று செல்வது தடைப்படலாம். இதனை ஷாஃப்ட் பெட்டிங் சபோகேஷன் Soft Bedding Suffocation என்கிறார்கள்.
குழந்தைக்கு குளிர் பிடித்துவிடக் கூடாது என்பதற்காக முகம் வரை போர்வையை இழுத்துவிடுவது, தலையைச் சுற்றி மென்மையான துணிகளை வைப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
3. படுக்கை இடுக்கில் சிக்குதல்
மெத்தை மற்றும் சுவர் இடையில், படுக்கையின் ஓரத்தில் அல்லது இரண்டு பொருட்களுக்கு இடையில் குழந்தை சிக்கிக்கொள்வதை வெட்ஜிங் Wedging அல்லது Entrapment என்கிறார்கள். படுக்கையில் குழந்தையைத் தனியாக விட்டுச் செல்வதும் ஆபத்தானது. குழந்தை உருண்டு விழுவதோ, இடுக்கில் சிக்கிக்கொள்வதோ ஏற்படலாம்.
4. சோபாவில் தூக்கம்
குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது தாய் சோபாவில் அமர்ந்தபடியே தூங்கிவிடலாம். குழந்தையை மார்பில் வைத்துக்கொண்டு தந்தையும் தூங்கிவிடலாம். சோபா, மென்மையான நாற்காலி போன்ற இடங்களில் குழந்தையின் முகம் உடலுக்கும் மெத்தைக்கும் இடையில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து அதிகம்.
சோபா அல்லது மென்மையான நாற்காலியில் ஒருவருடன் சேர்ந்து தூங்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் தூக்கம் தொடர்பான மரண அபாயம், பாதுகாப்பான தூக்கச் சூழலுடன் ஒப்பிடும்போது 67 மடங்கு வரை அதிகமாக இருக்கலாம். எனவே, குழந்தையுடன் சோபாவில் தூங்குவது பாதுகாப்பானது இல்லை.
5. கடுமையான சோர்வு
பிரசவத்துக்குப் பிறகு தாய்க்கு போதிய தூக்கம் கிடைக்காமல் இருக்கலாம். இரவில் அடிக்கடி விழிப்பது, குழந்தைக்குப் பால் கொடுப்பது, உடல் வலி, மன அழுத்தம் போன்றவை கடுமையான சோர்வு ஏற்படுத்தலாம். தந்தையும் வேலைப்பளு காரணமாக ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கலாம்.
அதிக சோர்வு, மது அருந்திய நிலை அல்லது தூக்கத்தை ஏற்படுத்தும் சில மருந்துகளின் தாக்கத்தில் இருப்பவர் குழந்தையுடன் ஒரே படுக்கையில் உறங்கும்போது ஆபத்து அதிகரிக்கலாம். இதற்காக பெற்றோரைக் குற்றம் சாட்ட வேண்டியதில்லை. அவர்களுக்குப் பாதுகாப்பான தூக்க ஏற்பாடுகள் தேவை என்பதைப் புரியவைக்க வேண்டும்.
அலட்சியம் அபாயம்.
இரவில் குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருக்கும் தாய் களைப்பில் தூங்கிவிடலாம். குழந்தையை மார்பில் வைத்துக்கொண்டே தூங்குவது அவருடைய எண்ணமில்லை என்றாலும், சோர்வினால் அவர் ஆழ்ந்த தூக்கத்துக்குச் சென்றிருக்கலாம். அந்த நேரத்தில் குழந்தையின் முகம் போர்வையால் மூடப்படலாம் அல்லது அதன் உடல் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கிக்கொள்ளலாம். எனவே, நல்ல பெற்றோராக இருப்பது மட்டுமே போதாது, குழந்தையின் தூக்கச் சூழலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மருத்துவ முன்னெச்சரிக்கைகள்
குழந்தையின் பாதுகாப்பான தூக்கத்திற்கு பெற்றோர் பின்பற்ற வேண்டிய முக்கியமான மருத்துவக் குறிப்புகள் இவை.
1. குழந்தையை நேராகப் படுக்கவையுங்கள்
பகல் தூக்கமாக இருந்தாலும், இரவு தூக்கமாக இருந்தாலும், குழந்தையை நேராக அதாவது மல்லாந்து முதுகு படுக்கையில் இருக்கும் வகையில் படுக்கவைக்க வேண்டும்.
குப்புறவாக்கில், பக்கவாட்டில் படுக்கவைப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தை நேராகப் படுத்தால் பால் மூச்சுக்குழாய்க்குச் சென்றுவிடும் என்ற அச்சம் உண்மையில்லை. குழந்தை தானாகவே இரு திசைகளிலும் புரண்டு படுக்கக்கூடிய வளர்ச்சியை அடைந்திருந்தால், ஒவ்வொரு முறையும் அதன் நிலையை மாற்றிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால், தூங்க வைக்கும்போது மல்லாக்கவே படுக்கவைக்க வேண்டும்.
2. தனிப் படுக்கை
குழந்தையைப் பெற்றோரின் படுக்கையில் படுக்கவைக்காமல், பெற்றோர் தூங்கும் அதே அறையில் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தனித் தொட்டில் அல்லது படுக்கையில் படுக்கவைக்க வேண்டும். குறிப்பாக, முதல் ஆறு மாதங்களாவது ஒரே அறையில் தனித்தனி படுக்கையில் தூங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இது குழந்தையின் தேவைகளைக் கவனிக்கவும் வசதியாக இருக்கும். அதோடு ஒரே படுக்கையைப் பகிர்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் குறைக்கும்.
3. தலையணை, பொம்மை
குழந்தை தூங்கும் இடத்தில் தலையணை, மென்மையான பொம்மைகள், தடிமனான போர்வைகள், மெத்தைத் திணிப்புகள் வைக்காதீர்கள். குழந்தையின் படுக்கையில் உறுதியான, சமதளமான மெத்தை மற்றும் அதற்குப் பொருந்தும் விரிப்புத்துணி மட்டுமே இருக்க வேண்டும்.
4. குழந்தைக்கு அதிக வெப்பம்
குளிரும் என்று நினைத்து குழந்தைக்கு அதிகமான ஆடைகளை அணிவிப்பதும், பல போர்வைகளால் சுற்றுவதும் ஆபத்தாகலாம். குழந்தையின் மார்புப் பகுதி அதிகமாகச் சூடாக இருக்கிறதா, வியர்க்கிறதா என்பதைக் கவனியுங்கள். தேவையான அளவு ஆடைகளை அணிவித்து உடலைச் சூடாக வைத்துக்கொள்ளுங்கள்.
5. பால் கொடுக்கும் நேரம்
இரவில் பால் கொடுக்கும் போது தாய் தூங்கிவிடும் வாய்ப்பு இருந்தால், குழந்தையைச் சோபா அல்லது மென்மையான நாற்காலியில் வைத்துக்கொண்டு பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பால் கொடுத்த பிறகு குழந்தையை அதன் தனிப் படுக்கையில் படுக்கவையுங்கள்.
படுக்கையில் பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது தூங்கிவிட்டால், விழித்தவுடன் குழந்தையைத் தனது பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுங்கள். குழந்தையைப் படுக்கையில் வைத்தபடியே பெரியவரும் தூங்குவது பாதுகாப்பானது அல்ல.
6. புகையிலை
கர்ப்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகும் புகையிலை புகைக்கு ஆளாவது ஸிட்ஸ் அபாயத்துடன் தொடர்புடையது. எனவே, வீட்டுக்குள் புகைபிடிக்காதீர்கள். குழந்தைக்கு அருகில் புகைபிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
7. மருத்துவப் பரிசோதனைகள்
குழந்தையின் வளர்ச்சி, உடல்நிலை, தடுப்பூசிகள் ஆகியவற்றைக் கண்காணிக்க குழந்தை நல மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். முன்கூட்டிப் பிறந்த குழந்தைகள், குறைந்த பிறப்பு எடையுள்ள குழந்தைகள் அல்லது வேறு மருத்துவச் சிக்கல்கள் உள்ள குழந்தைகளுக்குத் தனிப்பட்ட ஆலோசனைகள் தேவைப்படலாம்.

தாயைக் குற்றவாளியாக்காதீர்கள்!
ஒரு குழந்தை தூக்கத்தின்போது இறந்துவிட்டால், அம்மா குழந்தையைச் சரியாகப் பார்த்துக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுவது மிகவும் தவறான அணுகுமுறை. ஒவ்வொரு குழந்தை மரணத்துக்கும் ஒரே காரணம் கிடையாது. பாதுகாப்பற்ற தூக்கச் சூழல் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம். மருத்துவக் காரணத்தால் மரணம் நிகழ்ந்திருக்கலாம். சில நேரங்களில் முழுமையான விசாரணைக்குப் பிறகும் காரணம் கண்டறியப்படாமல் இருக்கலாம்.
எனவே, மருத்துவ ஆதாரமின்றித் தாயையோ தந்தையையோ குற்றம் சாட்டுவது தவறு. குழந்தையை இழந்த பெற்றோர் ஏற்கெனவே தாங்க முடியாத துயரத்தில் இருப்பார்கள். அவர்களைக் குற்ற உணர்ச்சிக்குள் தள்ளுவது அவர்களின் மனநலத்தையும் குடும்ப உறவுகளையும் பாதிக்கலாம்.
மருத்துவர்களும் செவிலியர்களும் கர்ப்ப காலத்திலிருந்தே பாதுகாப்பான தூக்க முறைகளைப் பெற்றோருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். பாட்டி, தாத்தா, குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் உறவினர்கள், பணிப்பெண்கள் எனக் குழந்தையைக் கவனிக்கும் அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு தேவை.
குழந்தையை நேசிப்பது அதன் கைகளைப் பிடிப்பதில் மட்டுமல்ல; அது தூங்கும் இடத்தைப் பாதுகாப்பாக அமைப்பதிலும் இருக்கிறது. குழந்தைகள் பூ போன்றவர்கள். அவர்களை அன்புடன் வளர்ப்போம். அதே நேரத்தில், நமது அறியாமையாலும் பாதுகாப்பற்ற பழக்கங்களாலும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம்.
