ஞானகுரு பதில்கள்
கேள்வி : அரசியலில் நாகரிகம் என்று இருக்கிறதா..?
- பி.முனியாண்டி, அல்லம்பட்டி.
ஞானகுரு :
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்
– என்று திருக்குறளில் வள்ளுவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது, எல்லோரும் விரும்பக்கூடிய நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு விருப்பமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்துகொண்டாலும், அதை முகம் கோணாமல் பருகிவிடுவார் என்கிறார். அரசியல் என்பது அதிகாரப் போட்டிக்கும் செல்வம் சேகரிக்கவும் இயங்கும் இன்றைய அரசியலில் நாகரிகத்தை எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை.
கேள்வி : நெஞ்சுவலி எனும் ஹார்ட் அட்டாக் இப்போது அதிகமாக வருகிறதே ஏன்..?
- ஜி.சுடலைமுத்து, உலகநாதன் தெரு.
ஞானகுரு :
எல்லா காலகட்டத்திலும் இள வயது மரணம் இருக்கவே செய்தது, இருக்கவே செய்யும். இன்னும் சொல்லப் போனால், இன்றைய காலகட்டத்தைவிட மிக அதிக அளவில் முந்தைய தலைமுறையினர் இள வயது மரணத்தை தழுவினார்கள். ஆனால், அதற்கான காரணம்தான் அவர்களுக்குத் தெரியாது. உறக்கத்திலே உயிர் போய்விட்டது, பேய் அடித்துவிட்டது, திடீர்ன்னு வியர்வை அதிகரிச்சு செத்துட்டார், கையும், கழுத்தும் வலிக்குதுன்னு சொன்னார், மருந்து போட்டு தேய்ச்சும் செத்துப் போயிட்டார் என்றெல்லாம் விதவிதமாக சொல்வார்கள். இவை எல்லாமே ஹார்ட் அட்டாக் மரணம் என்பது அறியாமலே இருந்தனர். இப்போது, மரணத்திற்கு காரணம் தெரிவதால், எண்ணிக்கையில் அதிகம் போல் தோன்றுகிறது.
அதேநேரம், லைஃப் ஸ்டைல் மாற்றம் மிகப்பெரும் விளைவுகளை உருவாக்கிவருகிறது. அதாவது, லேட்டாகத் தூங்குவது, அதிகம் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் எடுத்துக்கொள்வது, செல்போன் பார்வை நேரம் போன்றவையும் தேவைக்கும் அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதும் பல பக்கவிளைவுகளை உருவாக்குகிறது. இதனாலே இளம் வயதிலேயே ரத்தம் பாய்வதில் பல்வேறு சிக்கல்கள் உண்டாகிறது. இரவில் தூங்கும் நேரத்தை அதிகரியுங்கள் இதய வலியில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.