காந்தி யாருக்கு அடிமையாக இருந்தார்..?

Image

பழக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்

எதையும் முறைப்படி செய்ய வேண்டும், எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும், சரியான நேரத்தில் திட்டமிட்டபடி தொடங்கவேண்டும் என்று நிறைய விஷயங்களில் பிடிவாதம் பிடித்தவர் மகாத்மா காந்தி. அவரது வெற்றிக்கு இந்த பிடிவாதம் காரணமாக இருந்தது போலவே, அவருக்கு நிறைய நேரங்களில் இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, எதையும் பழக்கப்படுத்திக்கொள்ளக் கூடாது என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். நல்லது, கெட்டது என்ற பாகுபாடு பாராமல் இயல்பாக வாழ்பவரே இன்பமாக வாழ முடியும் என்கிறார்கள். இது குறித்து ஞானகுருவுடன் சிறு உரையாடல்.

?  எதுவுமே நல்ல பழக்கம் கிடையாதா?

நன்மை செய்வது நல்ல பழக்கம், தீமை செய்வது கெட்ட பழக்கம் என்றுதான் மனிதன் பிரித்துப்பார்க்கிறான். அதனால் நல்ல பழக்கங்களை வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டும் என்றும் தீய பழக்கங்களை தூக்கி வீசவேண்டும் என்றும் முயற்சிக்கிறான். எந்த ஒரு பழக்கத்தையும் தூக்கியெறியும் திறனை வளர்த்துக்கொண்டால் எல்லா பழக்கமும் நல்லதாகவே மாறிவிடும்.

? பழக்கத்தை கைவிடுவது எப்படி?

நீயே உருவாக்கிய பழக்கம். அதனால் உன்னால் நிச்சயம் அதை கைவிடவும் முடியும். எந்த ஒரு பழக்கத்தையும் முற்றிலும் கைவிடுவது உடனடியாக நடவாத காரியம். அதனால் அந்த பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக முறைப்படுத்த வேண்டும். சிகரெட்டை நிறுத்த கொஞ்ச நாட்கள் பாக்கு பயன்படுத்துவது போல் பழக்கத்தை சீரமைப்பு செய்யவேண்டும். ஆனால் இவை எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், உண்மையிலே உள்மனதில் பழக்கத்தை கைவிடுவதற்கான ஆசையும் ஆர்வமும் இருக்கவேண்டும். பிறருக்காக அல்லது தன்னை ஏமாற்றிக்கொள்ள பழக்கத்தை கைவிடுபவன் மீண்டும் அந்தப் பழக்கத்திற்கு  அடிமையாவது உறுதி.

? எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறேன், இதை நிறுத்தமுடியுமா?

இதை வெகு எளிதாக நிறுத்தலாம். உன்னைவிட வலிமையானவன், பணக்காரன், மேலதிகாரி போன்றவர்களிடம் மட்டுமே கோபப்படுவது என்று முதலில் உன் வட்டத்தை சுருக்கிக்கொள். இதை மட்டும் உறுதியாக கடைப்பிடித்தால் நிச்சயம் கோபம் அடங்கிவிடும். நாய் வாலை சுருட்டிக்கொண்டு ஓடுவதுபோல் உன் கோபமும் தானாக ஓடிவிடும்.

 ? என்னிடம் பொறாமை குணம் ரொம்பவே இருக்கிறது, நான் மீண்டுவர நினைத்தாலும் முடியவில்லையே?

உன்னால் முடியவில்லை என்ற சமாதானம் இருக்கும்வரை நிச்சயம் அந்தக் குணத்தில் இருந்து வெளிவர மாட்டாய். பொறாமைப்படுவது ஒரு சாதாரண பழக்கம், அதைக்கூட விடமுடியாதா என்று உன்னையே நீ கேட்டுப்பார். பொறாமை குணம் உன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை உணர்ந்துகொள். அதை நீ அடிமைப்படுத்துவதா அல்லது நீ அதன் அடிமையாகவே இருப்பதா என்பதை முடிவு செய். உன்னால் பொறாமைப்படும் பழக்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை என்றால், நீ அந்த குணத்தை ரொம்பவே ரசிக்கிறாய், விரும்புகிறாய், தலைவணங்குகிறாய் என்றுதான் அர்த்தம்.

? பழக்கம் எப்படி தோன்றுகிறது?

உன்னுடைய ஆசை அல்லது உன்னுடைய பெற்றோரின் ஆசை உன்னிடம் பழக்கமாக மாறுகிறது. உன்னிடம் தோன்றும் ஆசைகளை ஆரம்பகட்டத்தில் நிராகரிக்கத் தொடங்கினால் எந்தப் பழக்கமும் குறிப்பாக கெட்ட பழக்கங்கள் உன்னிடம் தோன்றாது. அழகான பெண்ணைப் பார்த்ததும் ஆசைப்படுவது ஒரு போதை. ஆரம்ப காலங்களில் இது ஒரு சாதாரண போதையாகத் தெரியும். இந்த ஆசையை உனக்குள் வளர்த்துக்கொண்டே சென்றால், தாழ்வான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அழகான பெண்ணை அடைவது எப்படி என்று மனம் குறுக்குவழியில் ஓடும். அக்கம்பக்கத்தில் அழகான பெண் இருந்தால் அவளை எப்படி கவிழ்க்கலாம் என்று மனம் திட்டம் போடும். சாதாரண ஆசையே, போதையாக மாறி காம இச்சையாக மாறி வெறியனாக மாற்றி உன்னை தவறுகள் செய்யத்தூண்டும். அழகான பெண்ணை அடைந்துவிட்டால், அதுபோல் இன்னும் வேறு யாரை அடையலாம் என்று தேடுவாய். அழகான பெண்களை கெடுப்பது அதன்பிறகு உனக்கு பழக்கமாகிவிடும். என்றேனும் ஒரு முறை நீ சமூகத்தில் மாட்டிக்கொள்ளும்போது, பெண் வாடையே கிடைக்காத சிறையில் தங்கவேண்டிய அவலம் நேர்ந்துவிடும். அதனால் ஆசைகளை அடக்கினாலே பழக்கம் எனும் சிறையில் இருந்து விடுபடலாம்.

? பழக்கத்தில் இருந்து அனைவரும் விடுபட முடியுமா?

ஒரு தேர்ச்சி பெற்ற நீச்சல்காரனால் ஆறு, குளம், கண்மாய், கடல் என்ற அனைத்து நீர்நிலைகளிலும் நிச்சயம் நீந்தி கரைசேர முடியும். அதுபோல் நீயும் மனதை திடமாக்கி வைத்திருந்தால் எத்தகைய பழக்கத்தில் இருந்தும் வெளிவர முடியும்.

? பழக்கத்தின் பிடியில் அவஸ்தைப்பட்ட தலைவர் யாராவது உண்டா?

இந்திய நாட்டின் தந்தையாகவும், அஹிம்சை நாயகனாகவும் அறியப்படும் மகாத்மா காந்தி ஒருவகையில் பழக்கத்தின் அடிமை என்றும் சொல்லலாம். வாழும் கடைசி காலம் வரையிலும் அவருக்கென பிரத்யேக உணவு உட்கொள்வதில் மிகவும் பிடிவாத பழக்கம் கொண்டவராக இருந்தார். இந்தியாவை விட தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதும் பழக்கத்தை அவர் விடவே இல்லை. தென்னாப்பிரிக்காவில்தான் காய், கனிகளை அப்படியே உட்கொள்ளும் முறைகளை கற்றுக்கொண்டார். அசைவம் கலந்துவிடக்கூடாது என்பதற்காக தானே சமைக்கவும் கற்றுக்கொண்டார். சைவம் சாப்பிட்டால் மட்டும்தான் உடல் தூய்மையாக இருக்கும் என்று நம்பினார். அவர் நம்பியது மட்டுமின்றி, அவரை சார்ந்தவர்களையும் இந்த உணவுப் பழக்கத்திற்கு மாற்ற விரும்பினார் என்பதுதான் வேடிக்கை. நாட்டுக்கு சுதந்திரம் வாங்குவதற்கு போராடிய காந்தி, மற்றவர்கள் மீது தன்னுடைய விருப்பங்களை திணிக்கவும் செய்திருக்கிறார்.

உடல் தூய்மையாக இருப்பதுதான் ஆரோக்கியம் என்று நம்பினார் காந்தி. அதனால் இனிமா எடுத்துக்கொள்வது காந்தியின் வழக்கம். அவரது சீடர்களுக்கும் எனிமா கொடுப்பது காந்தியின் வழக்கம். காந்தி உண்ணாவிரதம் ஆரம்பித்ததும் உணவுப் பழக்கத்தின் ஒரு கட்டம் என்றுதான் சொல்லவேண்டும். தன்னுடைய பழக்கம்தான் சரியானது என்பதை நிலைநாட்டுவதற்கு கடைசி வரை போராடினார் காந்திஜி. அதனால்தான் அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. காந்தி அவருக்கே அடிமையாக இருந்தார். இந்த மனநிலையை நீக்கியிருந்தால், அவர் இன்னும் மகிழ்ச்சியான மனநிலையுடன் வாழ்ந்திருப்பார்.

Leave a Comment