மகிழ்ச்சி எனும் புதையல்
’’மகிழ்ச்சியைத் தேடி ஒவ்வொருவரும் எங்கெங்கோ செல்கின்றனர். சினிமா, பார்க், பீச், சர்க்கஸ், சுற்றுலா என்று அவர்கள் செல்லாத இடமே இல்லை. உண்மையில் மகிழ்ச்சி எங்கு உள்ளது என்று ஆராய்வோமானால், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, அதைத் தேடி ஊர் முழுக்க அலையும் கதையாகத் தான் இருக்கிறது…” என்றார் ஞானகுரு.
‘’அப்படியென்றால் எல்லோராலும் மகிழ்ச்சி அடைய முடியுமா?’’
’’நிச்சயமாக. சின்னச்சின்ன விஷயங்களையும் சந்தோஷமாகப் பார்ப்பவர்கள், மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதனால் தான் குழந்தைகள் அடிக்கடி சிரிக்கிறார்கள். எதை செய்தாலும், அதை அழகுணர்ச்சியுடனும் திருப்தியாகவும் செய்பவர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கதை, கவிதை, ஓவியம், சிற்பம், சினிமா, உணவு என ஏதேனும் ஒன்றை ரசிக்கும்போது, மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஆனால், நிறைய பேர் சிரிப்பதற்கு ஒரு காமெடி சேனல் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், நிறைய கலைஞர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஏனென்றால், தன்னால் இதைவிட, சிறப்பான ஒன்றை தரமுடியவில்லை என்று ஆதங்கத்தில் ஆழ்கிறார்கள். இது, தேவையில்லாத சுமை.
இந்த சுமையை அகற்ற வேண்டும் என்றால் சுயதிருப்தி அடையும் கலையை அனுபவிக்க வேண்டும். கலைஞன் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியத் தேவை சுய திருப்தி. தனக்கு திருப்தி கிடைத்தால் போதும் என்று எழுதுகிறவன் சிறந்த எழுத்தாளனாகிறான்.
தன் மனம் நிறைவடையும் வகையில் படம் வரைகிறவன் ஓவியனாகிறான். தானே ஒரு இசையைக் கேட்டு, மெய்மறக்கும் வரை, மனமொன்றி பாடுகிறவன் இசைக் கலைஞனாகிறான். பிறர் திருப்தியடைய வேண்டும் என்று செய்யப்படும் எந்த செயலும் வெற்றி அடைவதில்லை.
சுய திருப்தி அடைந்த ஒருவன் பிறருடைய பாராட்டுக்கு ஏங்க மாட்டான். விமர்சனத்தைக் கண்டு அஞ்சவும் மாட்டான். அப்படி சுய திருப்தி அடைந்தவனே உண்மையான கலைஞனாகிறான். உலக மக்களின் விருப்பத்தை ஒரு பொருட்டாக கருதாமல், தனது திறமையை திறம்பட வளரப்பவன் காலபோக்கில், உலக மக்களின் விருப்பமாகவே மாறிவிடுகிறான்.
நாம் நம்மை கெட்டிக்காரர் என்று நினைத்துக் கொண்டு பிறரை ஏமாற்ற முயன்றால், வசமாக மாட்டிக் கொள்ள நேரும். நம்மை விடக் கெட்டிக்காரர்கள் உலகில் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.
உழைத்து வாழும் போது தான் ஒரு மனிதனுக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கிறது. உழைப்பை போல சிறந்த நண்பன் உலகில் எவரும் இல்லை என்றே சொல்லலாம். புன்முறுவல், துணிவு, நம்பிக்கை, நாணயம், ஒற்றுமை போன்றவைகளைக் கொண்டு சிறப்பாக தொழில் செய்பவர்களையே உலகம் வியந்து போற்றுகிறது. `எல்லாம் என் தலையெழுத்து’என்று அழுதுகொண்டு தொழில் செய்பவர்களை யாரும் விரும்புவதில்லை. அவர்கள் முன்னேறுவதுமில்லை. எப்படி இருந்தார்களோ, அப்படியே தான் இருப்பார்கள்.
நம்மிடம் எது இல்லையோ, அதை மற்றவர்களுக்குத் தர முடியாது. அழுது கொண்டே இருப்பவர்களால் மற்றவர்களுக்கு எந்த ஒரு மகிழ்ச்சியையும் தந்து விட முடியாது. எனவே, ஒருவருக்கு மகிழ்ச்சியை யாரால் தர முடியும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஆம், நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுங்கள். மகிழ்ச்சியானவர்களால் இந்த உலகம் பெரும் மகிழ்ச்சி அடையட்டும்…” என்றார்.
மகிழ்ச்சி அடைந்தார் மகேந்திரன்.