யார் இந்த பத்மஸ்ரீ சந்திரமோகன்..?

Image

தொழிலதிபருக்கு விருது

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. கல்வி, இலக்கியம். அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள். குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த வருடம் தமிழ்நாட்டின் பெருமைமிகு 13 சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.  1. நல்லி குப்புசாமி செட்டியார் (நல்லி சில்க்ஸ்) 2.அஜித் குமார் (திரைபட நடிகர், ரசிகர்களை சுயநலத்திற்காக பயன்படுத்தாத நல்ல மனிதர்) 3. ஷோபனா சந்திரகுமார் பிள்ளை (நடன கலைஞர்) 4.லட்சுமிபதி ராமசுப்பையர் (பத்திரிக்கையாளர்) 5. ஶ்ரீனிவாஸ் (அறிவியல்) 6. தாமோதரன் (சமையல் கலை) 7. வேலு ஆசான் (பறை இசை கலைஞர்) 8.அஸ்வின் (கிரிக்கெட் வீரர்) 9.சீனி விஸ்வநாதன் (கல்வி) 10.குருவாயூர் துரை (தவில் கலைஞர்) 11.சந்திரமோகன் (ஆரோக்கியா பால், அருண் ஐஸ்கீரிம், ஐபேகோ ஐஸ்கிரீம் – இந்தியாவின் இரண்டாவது பெரிய பால் பொருட்கள் நிறுவனத்தை உருவாக்கிய தொழிலதிபர்) 12.புரிசை கண்ணப்ப சம்பந்தன் (கலைத்துறை) 13.ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி (கலைத்துறை).

இவர்களில் சந்திரமோகன் பற்றி வெளியாகியிருக்கும் சமூகவலைதளப் பதிவு இது. அருண் ஐஸ் கிரீமை சுவைக்காதவர் நம்மில் யாரும் இருக்கமுடியாது. அருண் ஐஸ் கிரீம் மட்டுமல்ல ஆரோக்யா பால், கோமாதா பால், Hatsun Dairy பொருட்கள், Oyalo Gravy & snacks, சந்தோசா கால் நடை தீவனம் மற்றும் நம்மை கவர்ந்திழுக்கும் Ibaco Ice Cream  என்று நாம் எல்லோரும் கேட்டு வாங்கும் படியான பிராண்டை உருவாக்கியவர் ஆர். ஜி. சந்திரமோகன்.

இந்தியாவின் மிகப்பெரிய பால் சார்ந்த பொருள்கள் நிறுவனமான ஹட்சன் (Hatsun Agro Product) நிறுவனத்தை நிறுவியவர் சந்திரமோகன் (R.G. Chandramogan). இந்த ஆண்டு வருமானம் ரூ . 3,600 கோடிக்கும் மேல் ஆகும். இத்தனைக்கும் இங்நிறுவனம் வெறும் 13,000 ரூபாயில்தான் தொடங்கப்பட்டது.

சந்திரமோகன் சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கல் என்கிற ஊரில் பிறந்தார். தந்தை ஆசிரியர். இவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவரில்லை. பியுசி தேர்வில் தோல்வியடைந்தவர். சிறு வயதில் ஐஸ் கிரீம் என்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகவே இருந்திருக்கிறது. அதை வாங்குவதற்காக சில்லறைகளை சேர்த்து வைப்பாராம். இந்த விருப்பமே பிற்காலத்தில் ஐஸ் கிரீம் சார்ந்த மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க தூண்துதலாக இருந்திருக்கிறது. தன் குடும்ப சொத்துக்கள் சிலவற்றை விற்று, அதன்மூலம் கிடைத்த 13,000-ரூபாயில் ஆர். ஜி. சந்திரமோகன் அன் கோ., என்ற நிறுவனத்தை 1970 ல் நிறுவினார். அருண் ஐஸ் கிரீம் என்று பெயர் வைக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 21. 

பிராண்ட் என்பதன் மகத்துவத்தை உணர்ந்து அருண் ஐஸ் கிரீம் என்று அதனை மாற்றி அதனை ஒரு நிறுவனம் ஆக்கினார். 80களின் மத்தியில் தமிழ்நாடு முழுவதுமே முக்கிய நகரங்களில் குறிப்பாக ரயில் சேவை இருக்கும் நகரங்களில் கிடைக்கும் படி செய்தார். ஞாயிற்றுக்கிழமை காலை விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் சென்னையிலிருந்து ஃப்ரீசர் பாக்ஸ்களில் ஐஸ்கிரீம்கள் இறங்கும். ஞாயிற்றுக்கிழமை மதியம் என்பது குடும்பத்தோடு சாப்பாட்டிற்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிடும் நிகழ்வாக பல ஊர்களில் மாறத் துவங்கியது.

ஐஸ் கிரீம் செய்வதற்கு பாலை கொள்முதல் செய்யவேண்டும் என்பதால் பாலையும் விற்கலாம் என்று தோன்றவே, 1995 ல் ஆரோக்கிய பால் தொடங்கப்பட்டது. எந்த ஒரு தொழிலையும் வெற்றி பெற சிறந்த ஐடியா முக்கியம். அந்த வகையில்  “அர்ஜூன் அம்மா யாரு?” என்ற வித்தியாசமான விளம்பரத்தை பயன்படுத்தி ஆரோக்கியா பாலினை மக்களிடம் கொண்டு சேர்த்தது ஹட்சன் நிறுவனம். இன்று ஆரோக்கியா பால் மட்டும் வருடத்திற்கு ரூ.1400 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகிறது.

பால் மட்டுமல்ல மோர், தயிர்,வெண்ணெய், நெய் மற்றும் பிற பால் பொருட்களையும் உற்பத்தி செய்கிறது ஹட்சன் நிறுவனம். 2012 ல் Hatsun நிறுவனம் மற்றொரு ஐஸ் கிரீம் பிராண்டான Ibaco ஐ தொடங்கியது. 8000 கிராமங்களில் உள்ள 3.5 இலட்சம் விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்கிறது. இதன் பணியாளர்கள் பாலை கொள்முதல் மற்றும் விற்பனை செய்ய தினசரி 402500 கி.மீ. பயணிக்கின்றனர்.தொடர்ச்சியாக தரத்தை மெயின்டைன் செய்தது, நம்பி வாங்க செய்தது. அதன்பின் அவர்கள் துவங்கிய ஆரோக்கியா பால் நிறுவனம், அர்ஜுன் அம்மா யாரு என்ற விளம்பரத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் வலுவாக சென்று சேர்ந்தது.

ஒரு குடும்பத்தின் ஏன் ஒரு கிராமத்தின் வாழ்க்கை தரத்தை திடீரென மாற்ற வேண்டும் என்றால், ஒரு அரசால் உடனே முடியாது. அதற்கென புரொசீஜர்கள் இருக்கின்றன. எல்லோருமே அதற்கு கைகொடுக்க வேண்டும். ஆனால் ஒரு தொழிலதிபர் என்பவர் நினைத்தால், உடனடியாக பல குடும்பங்களை வாழ வைக்க முடியும். தங்களுடைய சேவைகள் மூலம் தங்களை வளர்த்த மண்ணிற்கு நிறைய செய்ய முடியும். காலம் காலமாக தொடர்ந்து செய்து கொண்டிருக்கவும் முடியும். அதனால்தான் தமிழ்நாட்டிற்கு தொழில் முனைவோர்கள் அதிகம் தேவை, பின் அந்த தொழிலை நிலைநிறுத்த வேண்டும், அதனை ஒரு பிராண்டாக மாற்ற வேண்டும் என்று எல்லோரும் சொல்வது. தற்போது இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிற சந்திரமோகன் அவர்கள், தன்னுடைய தொழில் ஊக்கத்தின் மூலம் எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்திருக்கிறார். நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி மூலம் (CSR Fund) விருதுநகர் மாவட்டத்திற்கு நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார்.

விருதுநகர் மாவட்டத்தில் கல்வி, மருத்துவம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக அவர் கொடுத்த நன்கொடைகள் ஏராளம். சந்திரமோகன் அவர்களைப் போன்ற தொழில் முனைவோர்கள் தமிழ்நாட்டில் அதிகம் உருவாக வேண்டும். அதற்கு அவருக்கு தற்போது கிடைத்திருக்கும் பத்மஸ்ரீ விருது எல்லோருக்கும் தூண்டுகோலாக இருக்கட்டும்.

Leave a Comment