மைதாவும் கோதுமையே
கோதுமையை ஆரோக்கிய தானியம் என்று உறுதியாக நம்புகிறவர்கள் கூட, அதே கோதுமையில் இருந்து கிடைக்கும் மைதாவை அபாய உணவு என்று தவிர்ப்பது தான் ஆச்சர்யம். மைதாவில் தயாரிக்கப்படும் பரோட்டாவை ஆபத்து என்று விலக்குபவர்கள், கோதுமை பரோட்டாவை மகிழ்ச்சியாக சாப்பிடுகிறார்கள். அந்த கோதுமை பரோட்டாவிலும் மைதா கலந்திருப்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
உடல் நலமில்லை என்று மருத்துவரை சந்தித்தால், ‘மூணு நாளைக்கு காரமா எதுவும் சாப்பிடாதீங்க, பால், பிரெட் சாப்பிடுங்கள்’ என்று ஆலோசனை கூறுவதுண்டு. மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் பிரெட்கள் மைதாவில் தான் செய்யப்படுகின்றன. பிரெட் மட்டுமல்ல, ரஸ்க், பப்ஸ், கேக், சமோசா, பீட்ஸா, பர்கர், பாஸ்தா, நூடுல்ஸ், குலோப் ஜாமூன், சோன் பப்டி போன்ற எத்தனையோ சுவையான உணவுப் பொருட்களுக்கு மைதாவே மூலப் பொருள். பரோட்டா எடுத்துக்கொள்ளாதவர்கள் இந்த உணவு எடுத்துக்கொள்வதற்குத் தயங்குவதே இல்லை.
நிறைய பேர் மைதா என்பது மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று நம்புகிறார்கள். மண்ணுக்கு அடியில் விளையும் அத்தனை கிழங்குகளும் உடலுக்குக் கேடு என்று சிலர் சொல்வதைக் கேட்டு மைதாவை பார்த்து அச்சப்படுகிறார்கள். இன்னும் சிலர், கோதுமையின் கழிவு தான் மைதா. அதில் கெமிக்கல் சேர்த்து வெண்மையாக்குகிறார்கள். அதனால் உடலுக்கு ஆபத்து என்கிறார்கள்.
உண்மையில், மைதா என்பது நேரடியாக கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுவது தான். அதாவது, பட்டை தீட்டப்பட்ட அரிசி போன்று பட்டை தீட்டப்பட்ட கோதுமையை அரைத்தால் அது மைதா. பட்டை தீட்டப்படாத கோதுமையை அரைத்தால் அது கோதுமை மாவு. கோதுமையை கொஞ்சம் சன்னமாக அரைத்தால் அது ரவை.
ஆனாலும், மைதாவின் வெண்மைக்காக பிளீச் செய்யப்படுகிறது, அதில் ரசாயனம் சேர்க்கப்படுவதே ஆபத்து என்கிறார்கள். இது உண்மையா..?
கோதுமையின் பழுப்பு நிறம் மைதாவில் வரக்கூடாது என்பதற்காக பிளீச் எனப்படும் ஆக்ஸிஜனேற்றம் (Oxidation) செய்யப்படுவது உண்மையே. இதற்காக குளோரின் வாயு, பென்சாயில் ஃபெராக்ஸைடு போன்ற சில ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனம் கலக்கப்படுவதால் உருவாகும் அலோக்ஸன் மனிதர்களுக்கு நீரிழிவை உருவாக்குகிறது என்று சொல்வது உண்மை இல்லை.
மைதா மாவில் இருக்கும் அலோக்ஸன் அளவு குறித்து நீதி மன்றத்தில் உணவுத் துறையினர் இந்த ரசாயனங்கள் ஆபத்தான அளவு இல்லை என்று உறுதியளித்திருக்கிறது என்பதால் யாரும் அச்சப்படுவதற்கு அவசியம் இல்லை.
இது உண்மை என்றால், தொடர்ந்து பரோட்டா சாப்பிடும் அத்தனை பேரும் நீரிழிவு நோயாளியாக மாறியிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் இன்று வரை நடக்கவில்லை.
அப்படியென்றால் பரோட்டா ஆரோக்கியமான உணவா..?
கோதுமையை விட மைதாவில் மாவுச்சத்து அதிகம் என்பதால் கோதுமையை விட ஆரோக்கியம் குறைவான பொருள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பொதுவாகவே மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அனைவருமே மிகவும் குறைவாக சாப்பிடுவது நல்லது. எனவே ஒருசில பரோட்டா சாப்பிடலாம். ஒரே நேரத்தில் வயிறு நிரம்பும் வகையில் நான்கைந்து பரோட்டா எடுத்துக்கொண்டால், அது நிச்சயம் உடலுக்குச் சிக்கல் தான்.
பரோட்டாவில் இன்னொரு பிரச்னை இருக்கிறது. நிறைய ஊர்களில் எண்ணெய்யில் பரோட்டாவை பொரித்து எடுக்கிறார்கள். தரமற்ற எண்ணெய் பயன்படுத்துகிறார்கள். பழைய எண்ணெய் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள். இங்கு தான் ஜீரண உறுப்புகளுக்குச் சிக்கல் ஆரம்பமாகிறது
ஒரே நேரத்தில் நிறைய பரோட்டாவை தயாரித்து ஸ்டாக் வைத்து, அதை மீண்டும் மீண்டும் சூடு படுத்திக் கொடுக்கிறார்கள். ஸ்டாக் வைக்கப்படும் பரோட்டோ எல்லாமே ஆபத்தானவையே. மேலும், கடினத் தன்மையுள்ள பரோட்டாவை விழுங்குவதற்கு ஊற்றப்படும் சால்னா காரமாகவும் அதிக எண்ணெய் ஊற்றியும் தயாரிக்கப்படுகிறது. இப்படி அதிக மாவுச்சத்துள்ள மைதா உணவில் பல்வேறு துணைப் பொருட்கள் சேர்வது தான் அஜீரணத்தை உருவாக்கி பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிவிடுகிறது.
எனவே, பரோட்டா எப்போதாவது ஒரு முறை குறைந்த அளவு சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து இல்லை. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்கள் மைதாவில் தயாராகும் பரோட்டா மட்டுமின்றி அனைத்துப் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. பரோட்டா சாப்பிடுவதற்கு ஆசை வந்தால் வீட்டில் தயார் செய்து, அளவுடன் சாப்பிடுங்கள்.
மைதாவை கண்டு அச்சப்படும் அவசியம் வராது.