• Home
  • மனம்
  • மனம் எப்போது ஓய்வு எடுக்கும்..?

மனம் எப்போது ஓய்வு எடுக்கும்..?

Image

மகிழ்ச்சி எனும் தத்துவம்

ஓய்வு எடுப்பது எதற்கு, எப்படி ஓய்வு எடுப்பது என்றெல்லாம் தெரியாமல் நிறைய மனிதர்கள் தவிக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த கேள்வி பதில்.

  • ஓய்வு நிஜமாகவே மனிதருக்கு அவசியமா?

ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் ஓய்வு எடுக்கவேண்டும். உடலுக்கு தூக்கம் எத்தனை அவசியமோ அந்த அளவுக்கு மனசுக்கு ஓய்வு அவசியம். அதனால்தான் ஆறு நாட்கள் உழைப்பு, ஒரு நாள் ஓய்வு என்று கட்டமைப்பு உலகெங்கும் நிலவுகிறது. அலுவலக வேலை செய்பவர்கள் மட்டுமின்றி வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கும் காட்டு வேலை செய்யும் விவசாயிகளுக்கும் ஓய்வு நிச்சயம் தேவை. அப்போதுதான் உடலும் மனமும் நலம் பெறும்.

  • மனம் ஓய்வு எடுக்குமா?

ஒரு நொடியும் சும்மா இருப்பதில்லை மனம். எதையும் நினைக்கக்கூடாது என்று கட்டளை போட்டாலும், அந்த கட்டளையைப் பற்றி நினைக்கத்தான் செய்யும். சிந்தனைகள், ஞாபகங்கள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள், எரிச்சல்கள், குரூரம், கோபம் என்று மனதிற்கு ஏராளமான வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். உடலை தூங்க வைப்பதுபோல் மனதை ஓய்வெடுக்கச் சொல்ல முடியாது. ஆனால் மனதை குஷிப்படுத்த முடியும். மனதிற்கு சந்தோஷம் தரும் விஷயங்களை செய்வதுதான் ஓய்வு.

  • சுற்றுலா செல்வது ஓய்வு கிடையாதா?

ஆனந்தமாக சுற்றுலா செல்வது நிச்சயம் நல்ல ஓய்வுதான். ஆனால் ஒரே நாளில் எட்டு இடங்களை சுற்றிப்பார்த்து, அத்தனையையும் பார்த்துவிட்டேன் என்று சொல்லிக்கொள்வதால் மனதிற்கு நிம்மதியும் திருப்தியும் நிச்சயம் கிடைக்காது. ஆக்ராவிற்கு போய் தாஜ்மஹாலை விறுவிறுவென சுற்றிப்பார்த்து, அதன் எதிரே நின்று போட்டோ எடுத்துக்கொள்வதால் மனம் சந்தோஷம் அடையாது. அந்த இடத்தில் நீ ஷாஜகானாக அல்லது மும்தாஜாக மாற வேண்டும். இத்தனை பெரிய கல்லறை கட்டுவதற்கு எப்படி சிந்தனை ஏற்பட்டது, அந்த அளவுக்கு ஷாஜகான் மனதில் மும்தாஜ் எப்படி இடம் பிடித்தாள், எப்படியெல்லாம் கட்டியிருப்பார்கள், எந்த ஆண்டு கட்டப்பட்டது, எத்தனை பேர் கட்டினார்கள் என்றெல்லாம் தேடிப்படித்தும், கேட்டும் தெரிந்துகொள். அப்போதுதான் தாஜ்மஹாலின் ஆழமும் அர்த்தமும் உனக்குப் புரியவரும். கண்களை மூடிப்பார்த்தாலும் உன் மனதில் தாஜ்மஹால் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டு அளப்பரிய சந்தோஷம் கொடுக்கும். அந்த சந்தோஷம் உன் மனம் முழுவதும் நிரம்பிவழியும்போது… பரிபூரண ஓய்வு கிடைக்கும்.

  • இன்றைய சூழலில் இப்படியெல்லாம் ஆராய்வது சாத்தியமா?

எதையும் ஆழமாக ஆராய்ந்து பார்க்க விருப்பமில்லை என்றால் செய்யவேண்டாம். இப்படித்தான் ஓய்வு எடுக்கவேண்டும் என்று யாரும் யாருக்கும் வரைமுறை கொடுக்கமுடியாது. ஏனென்றால் உழைத்துக்கொண்டே இருப்பதும்கூட ஒருசிலருக்கு ஓய்வாக இருக்கலாம்.

அதேபோல் ஓய்வு எடுப்பதற்கு ஊர் சுற்றிப்பார்க்கத்தான் வேண்டும் என்பது அவசியமில்லை. தனியறைக்குள் அமர்ந்தும் நீ ஓய்வெடுக்கலாம். உன் மனசுக்கு முழுமையாக சந்தோஷம் தரும் காரியத்தை செய்வது எல்லாமே ஓய்வுதான். உனக்கு சந்தோஷம் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை என்றால், உன் குடும்பத்தினருக்கு, உன் நண்பர்களுக்கு சந்தோஷம் தரும் செயலை செய்யத்தொடங்கு.

விடுமுறை தினத்தில் மனைவி, குழந்தைகளுக்கு ஆசை ஆசையாக சமையல் செய்துகொடு. அவர்கள் சிரிப்பில், சந்தோஷத்தில் உன் மனதிற்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும். உன்னை தலை மீது வைத்து கொண்டாடுவார்கள். இந்த சந்தோஷத்திற்கு ஈடாக உலகில் எந்த ஓய்வும் கிடையாது என்ற உண்மை புரியும்.

  • ஓய்வுக்கு இலக்கணம் உண்டா?

என்ன செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்பவர் புத்தர். அனுபவித்து சாப்பிடுவதுபோல், தூங்குவதையும் விரும்பி செய்வார். அப்படியே ஓய்வையும் விரும்பி ஏற்றுக்கொள். உனக்குள் மாற்றம் பூவாக மலரும்.

Leave a Comment