தமிழர்களுக்கு எது புத்தாண்டு..?

Image

சித்திரை வருடப்பிறப்பு

குடும்பத்தில் யாராவது ஒருவருக்குப் பிறந்த நாள், திருமண நாள் என்றாலும், எல்லோரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். அதே போல இனம், மொழி, நாடுங்கிற பிரிவினை இல்லாமல் எல்லா பண்டிகைகளையும் எல்லோரும் கொண்டாடுவது நல்லது.  இதுவே மகிழ்ச்சி தரும்.

அதேநேரம், தமிழர் புத்தாண்டு என்பது சித்திரை மாதமா அல்லது தை மாதத்தில் தொடங்குகிறதா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது.

இதற்கு விடை மிகவும் எளிது.

தமிழ் மொழி பழைமையானது மட்டுமில்லீங்க, செழுமையானது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று இடங்களைப் பிரித்து வைத்தார்கள். வீசும் திசையை வைத்து வாடை, தென்றல், கொண்டல், கச்சான் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இப்படி எல்லாவற்றுக்கும் தமிழ் பெயர் சூட்டிய தமிழர்கள், ஆண்டுகளுக்கு மட்டும் சமஸ்கிருதப் பெயர் சூட்டியிருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே, சித்திரை மாதம் என்பது தமிழர் புத்தாண்டு இல்லை. ஆனால், சித்திரை என்பது வசந்த காலத்திற்கு வரவேற்பு. இந்த 2025ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு விசுவாசுவ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் விசுவாசுவ என்றால் நிறைவு என்று அர்த்தம். இதையும் கொண்டாடுவது நல்லது.  


ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது, சித்திரை முதல் நாள். சூரியன் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை. பல்குண-சைத்ர மாதமாகிய சித்திரை ‘வசந்த ருது’ என்று அழைக்கப்படுகிறது. சூரியன் இம்மாதத்தில்தான் உச்சநிலையினை அடைந்து, அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. மொத்தம் 31 நாட்களைக் கொண்டுள்ள சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.


ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.  ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.

புத்தாண்டு அன்று நம் தமிழர்கள், வீடு வாசலைச் சுத்தம் செய்து அலங்கரிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்களைப் பூஜையறையில் வைத்து, அதைப் புத்தாண்டு அன்று அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. அன்றைய தினம் அதிகாலை நித்திய கடமைகளை முடித்து கோயில்களுக்குச் சென்று எல்லா வளங்களும் பெற இறைவனை வழிபடுகின்றனர். மதிய வேளையில் உறவினர் மற்றும் நண்பர்களுடன் விருந்து உண்டு மகிழ்கின்றனர். பெரியவர்கள் சிறியவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். பகிர்ந்து உண்ணல், பரிசு வழங்குதல், உறவுகளுடன் மகிழ்ந்திருத்தல் ஆகியவை தமிழ்ப் புத்தாண்டின் நிகழ்ச்சிகளாகும்.

கேரள மாநிலத்தில் சித்திரை முதல் நாளானது, சித்திரை விசு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதக் கடைசி நாள் இரவில் தங்க, வெள்ளிப் பொருட்கள், நவரத்தினங்கள், பழவகைகள், காய்கனிகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர். மறுநாள் அதிகாலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற‌ நம்பிக்கை மக்களிடம் உள்ளது.


இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். பொ.பி 1310இல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய,  ‘சரஜோதி மாலை’ எனும் நூலில் வருடப்பிறப்பின்போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கையின் திருக்கோணேச்சரம், 1622ஆம் ஆண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கீசர் குறிப்புகள் சொல்வதையும் நாம் ஊன்றி நோக்கலாம்.


இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை, இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.

ஆனால், குழப்பம் தரும் தமிழ் ஆண்டு, சமஸ்கிருத ஆண்டுகளை கடைப்பிடிக்க வேண்டாம். உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஆங்கில நாட்காட்டியை கடைப்பிடிப்பதே எளிமையானது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment