கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதும் எல்லா நேரமும் உண்மையில்லை

மந்திரச்சொல்

நாம் கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்பதையும் முழு உண்மை என்று நம்புகிறோம். உண்மை என்னவென்றால், நமது மனம் எப்படி விரும்புகிறதோ, அப்படித்தான் நாம் இந்த உலகத்தைப் பார்க்கிறோம்.

.நிலவு தேய்வதை நம் கண்கள் பார்க்கின்றன. ஆனால் நிலவு தேய்வதில்லை. சூரியன் உதிப்பதை தினமும் பார்க்கிறோம்; ஆனால் சூரியன் உதிப்பதில்லை. கானல் நீரை பார்க்கிறோம். ஆனால் அங்கே தண்ணீர் இல்லை.

செல்போன் அழைப்பு வந்தது போல் கேட்கும், எடுத்துப் பார்த்தால் அப்படி எதுவும் இருக்காது. இரவு தனிமையில் இருக்கையில் கொலுசு சத்தம் கேட்கும், ஆனால், யாரும் இருப்பதில்லை. காதுகள் ஒலியைக் கேட்கின்றன என்றாலும் அதற்கு அர்த்தம் கொடுப்பது மனம். அந்த மனம் தவறாகப் புரிந்துகொள்ளும்போது, உண்மையும் பொய்யாகத் தோன்றலாம், பொய்யும் உண்மையாகத் தோன்றலாம்.

ஒரே சம்பவத்தை ஐந்து பேர் பார்த்தால், ஐந்து விதமான கதைகள் கிடைக்கும். ரோட்டில் விழுந்து கிடப்பவரை ஒருவர் குடிகாரர் என்று சொல்வார். இன்னொருவர் விபத்து என்று நினைப்பார். அனாதை என்று ஒருவர் சொல்வார். இங்கு ஒவ்வொருவரும் பார்த்தது ஒரே நிகழ்வு என்றாலும், அவரவர் மனதின் வழியாகப் புரிந்துகொண்டனர்.

கண்ணால் பார்ப்பதற்கும் மனதால் புரிந்துகொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒருவர் உங்களைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்கிறார் என்றால், ‘அவருக்கு கோபம்’ என்று நினைக்கலாம். உண்மையில் அவர் உங்களைப் பார்க்காமலே போயிருக்கலாம்.

ஒருவர் பேசிய வார்த்தையை நாம் கேட்கும்போது, அவரது குரல், முகபாவனை, சூழ்நிலை, நமது முன்கோபம், முன்அனுபவம் ஆகிய அனைத்தும் சேர்ந்து அந்த வார்த்தைக்கு ஒரு அர்த்தம் உருவாக்குகின்றன. உதாரணமாக கணவர் செல்போனில், “சரி, உன் விருப்பம்!” என்று சொல்கிறார். அதை மனைவி எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது உன் விருப்பப்படி செய் என்று கோபப்படுவதாக நினைக்கலாம், சந்தோஷமாக சம்மதிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

எப்போதும் மனிதர்கள் உண்மையைப் பார்ப்பதில்லை, அவர்கள் நம்பிக்கையைப் பார்க்கிறார்கள் என்கிறது உளவியல். அதாவது எதை நம்புகிறோமோ, அதற்கு ஆதரவான விஷயங்களைக் கவனிக்கிறார்கள். ஒருவர் மதிக்கவில்லை என்று நினைக்கத் தொடங்கினால், அவர் செல்போனை எடுக்கவில்லை என்றாலே, நினைப்பது சரி என்று முடிவுக்கு வருகிறார்கள், இதுதான் மனதின் விசித்திரமான விளையாட்டு.

ஒரு விஷயம் பலமுறை கேட்கப்பட்டால், அது உண்மையாக இருக்கலாம் என்ற உணர்வு மனித மூளைக்கு உருவாகிறது. கரடி ரோட்டில் போனது என்று ஒருவர் சொல்வதை நம்ப மாட்டோம். அதே விஷயத்தை நான்கு பேர் சொல்லும்போது நம்பிவிடுவோம்.

அதனால் எந்த விஷயத்தையும் பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் முடிவெடுக்காமல் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். நான் பார்த்தது உண்மையா அல்லது நான் அதற்கு அர்த்தம் கொடுத்தேனா என்று யோசித்தால் பல குடும்பச் சண்டைகளைத் தடுக்கலாம். பல நட்புகளை காப்பாற்றலாம். பல உறவுகளை உடையாமல் பாதுகாக்கலாம். பல தவறான முடிவுகளைத் தடுக்கலாம்.

நடந்த சம்பவம் நம்மை அதிகம் காயப்படுத்துவதில்லை. அந்த சம்பவத்தைப் பற்றி நமது மனம் உருவாக்கும் கதைதான் நம்மை அதிகம் காயப்படுத்துகிறது. இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால் வாழ்க்கை மிகவும் அமைதியாகிவிடும்.

அதனால், கண்களால் பார்த்ததை, காதால் கேட்டதை நம்பாதீர்கள். தீரயோசித்து முடிவெடுங்கள். அதுவே முழு உண்மை.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment