புது கல்யாண ஜோடிக்கு எது முக்கியம்..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கிய உடல், அமைதியான மனம், போதிய பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைக்க வழி காட்டுபவர் ஞானகுரு. வாசகர்கள் கேள்விக்கு அவரது பதில்கள் இங்கே….

கேள்வி : இல்லற பந்தத்தில் நுழையும் தம்பதிகளுக்கு முக்கியமான அறிவுரை என்ன..?

  • கே.முரளி சங்கர், அல்லம்பட்டி.

ஞானகுரு :

விட்டுக் கொடுத்து வாழ்வதற்கும், தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவரும் மட்டுமே திருமண பந்தத்திற்குள் நுழைவதற்குத் தகுதி பெற்றவர். வரவுக்குள் செலவழிக்கும் சாமர்த்தியத்தையும், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இருவருக்கு இடையில் மனக்கசப்பு வரும் நேரங்களில் அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களால் முடியவில்லை என்றால் கவுன்சிலிங், மருத்துவர் போன்றவர்களிடம் பேச வேண்டும். உறவுகளின் ஆலோசனையை கேட்கவே வேண்டாம்.

குழந்தை பிறக்கும் வரை, இருவருக்கும் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாகத் தான் வாழ்க்கை இருக்கும். இத்தனை சிரமங்களுக்கு இடையிலும் திருமணம் முடித்துக்கொள்ளவே வேண்டும். ஏனென்றால், எப்போது ஒருவரையொருவர் எப்போது புரிந்துகொள்கிறார்களோ, அப்போது எதிர்பார்ப்புகள் இல்லாத புதியதோர் உலகம் உருவாகிவிடும். இல்லறம் நல்லறமாக மாறிவிடும்.

கேள்வி : இந்த உலகில் பந்தயக் குதிரையாக இருந்தால் தானே வெற்றி பெற முடியும்..?

  • சி.கிருஷ்ணவேணி, அருப்புக்கோட்டை.

ஞானகுரு :

வெற்றி பெற்ற குதிரைக்கும் தோற்றுப்போன குதிரைக்கும் ஒரே அளவு தீவனமே கொடுக்கப்படுகிறது. எனவே, பந்தயக் குதிரையாக ஓடிக்கொண்டே இருப்பதற்கு ஆசைப்படாதீர்கள். இலக்கை நோக்கி நிதானமாகப் பயணிப்பதே போதும். அதுவே, மகிழ்ச்சி தரும்.

Leave a Comment