என்ன செய்தார் சைதை துரைசாமி – 446
டிசம்பர் என்றாலே சென்னை மக்களுக்கு அச்சம் வருவதுண்டு. ஏனென்றால் அந்த அளவுக்கு 2015 டிசம்பர் மழை வெள்ளமாகப் பொழிந்து பேரழிவைக் கொடுத்தது. அந்த நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததே வெள்ளத்துக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறின. அது உண்மையல்ல என்று தெளிவான விளக்கம் கொடுத்தார் மேயர் சைதை துரைசாமி.
அவர் பேசுகையில், ‘’பூகோள ரீதியாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆறுகளின் நீர்வரத்து பகுதிகளின் உயரம் கடல் மட்டத்தைவிட இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. தாம்பரம் கடல் மட்டத்திலிருந்து 32 மீட்டர் உயரம். குரோம்பேட்டை கடல் மட்டத்திலிருந்து 30 மீட்டர் உயரம். பல்லாவரம் கடல் மட்டத்திலிருந்து 24 மீட்டர் உயரம். மீனம்பாக்கம் 18 மீட்டர் உயரம். மாம்பலம் 13 மீட்டர் உயரம். கிண்டி, பழவந்தாங்கல் இவை இரண்டும் 12 மீட்டர் உயரம். பரங்கிமலை 11 மீட்டர் உயரம். அதனால் ஆற்று நீர் செல்லும் வேகம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. சென்னை நகரைச் சுற்றியும், நகர் வழியாகவும் அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு ஆகிய 3 நீர்வழிகள் செல்கின்றன. சென்னை நகரில் பெய்யும் மழை நீரானது இந்த ஆறுகளின் வழியாகச் சென்று கடைசியாக கடலில்தான் கலந்தாக வேண்டும். இதுதான் இயற்கையின் வடிகால் அமைப்பு.
சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு, பகலாக பெய்த கன மழையின் காரணமாக இம்மூன்று மாவட்டங்களில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பின. காஞ்சிபுரத்தில் மட்டும் அந்நாளில் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. இது வரலாறு காணா பெரு மழையாகும். தாம்பரத்தில் 49.4 செ.மீ. மழையும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 47 செ.மீ. மழையும் பெய்தது.
இம்மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 பெரும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியும் அதன் முழு கொள்ளளவை (3600 மில்லியன் கனஅடி) எட்டியது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஒலிபெருக்கி மூலம் பலமுறை எச்சரிக்கை செய்யப்பட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு அந்த ஏரியில் இருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்ட தண்ணீர் அதிகபட்சமாக 29000 கன அடி திறந்துவிடப்பட்டது…’’ என்று விளக்கம் கொடுத்தார்.
- நாளை பார்க்கலாம்.
