உண்மை காதல் எதையும் எதிர்பார்க்காது. காதலிக்க வேண்டும் என்றும் யாசிக்காது.

மந்திரச்சொல்

காதலை விரும்பாத மனிதர் இல்லை. காதலுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர்களும் காதலின் உண்மையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை.

காதல் என்பது ஒருவரை நம் வாழ்க்கைக்குள் கட்டாயப்படுத்தி கொண்டுவருவது இல்லை. அவர் விரும்பும் சுதந்திரத்துடன் அவரை நேசிப்பதுதான் காதல்.

நான் உன்னைக் காதலிக்கிறேன், எனவே நீயும் என்னைக் காதலிக்க வேண்டும். நான் உனக்காக இவ்வளவு செய்திருக்கிறேன்; எனவே நீயும் எனக்காக இதைச் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட கணக்குகள் அன்பை வியாபாரமாக மாற்றிவிடுகின்றன. அன்பு கணக்குப் பார்க்காது.

ஒருவர் நம்மை விரும்பவில்லை என்றால், அவருடைய மனதை மாற்றுவதற்கு கெஞ்சிக்கொண்டிருப்பது காதலின் அடையாளமல்ல. உண்மையான காதல் ஒருவரை நேசிக்கக் கற்றுக்கொடுக்கும். அதே நேரத்தில், அவர் நம்மை நேசிக்கவில்லை என்றாலும் அவருடைய எண்ணத்தை மதிப்பதற்கும் கற்றுக்கொடுக்கிறது.

ஒருவரைக் காதலிப்பதால் அவர் நமக்குச் சொந்தமாகிவிடுவதில்லை. அவருடைய விருப்பங்கள், கனவுகள், சுதந்திரம், தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தையும் மதிப்பதுதான் ஆரோக்கியமான காதல்.

நீ என்னுடன் பேச வேண்டும், என்னைப் பார்க்க வேண்டும், என்னை மட்டுமே நினைக்க வேண்டும் என்று கட்டளையிடுவது காதல் இல்லை. அது பாதுகாப்பின்மை, பயம் ஆகியவற்றின் வெளிப்பாடு. அன்பு என்பது ஒருவரைக் கட்டிப்போடுவதல்ல; அவருடன் இருக்கும்போது அவர் சுதந்திரமாக உணர்வதற்கு வழிவகுப்பது.

நம்முடைய மகிழ்ச்சிக்காக மட்டுமே ஒருவரைக் காதலிப்பது சுயநலமான அணுகுமுறை. ஆனால் அவருடைய மகிழ்ச்சியிலும் நம்மால் பங்கெடுக்க முடிகிறபோது காதல் ஆழமடைகிறது.

ஒருவருக்காகத் தியாகம் செய்வது காதலாக இருக்கலாம். ஆனால் அவருக்காக நம்முடைய வாழ்க்கையையே அழித்துக்கொள்வது ஆரோக்கியமான காதலாகாது. உண்மை காதலில் மற்றவரின் நலனும் முக்கியம். நம்முடைய நலனும் முக்கியம்.

உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகர் ஜானி கேஷ் (Johnny Cash) மற்றும் பாடகி ஜூன் கார்டர் கேஷ் (June Carter Cash) ஆகியோரின் காதல் இதற்கு அழகான உதாரணம்.

1968-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஜானி கேஷ் தனது வாழ்க்கையில் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட காலத்தில் ஜூன் கார்டர் அவரை விட்டு விலகவில்லை.

அவரைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர் தனது வாழ்க்கையைச் சீரமைத்துக்கொள்ள போராடினார். இருவரும் இணைந்து இசைப் பயணத்தையும் குடும்ப வாழ்க்கையையும் தொடர்ந்தனர். 2003-ஆம் ஆண்டு ஜூன் கார்டர் மறைந்தார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜானி கேஷும் மறைந்தார்.

இவர்களுடைய வாழ்க்கையில் காதல் என்பது வெறும் வார்த்தையாக இருக்கவில்லை. ஒருவருடைய பலவீனங்களையும் அறிந்துகொண்டு, அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் துணையாக இருப்பதிலும் வெளிப்பட்டது.

உண்மையான காதல் ஒருவரை அடையத் துடிக்கும்; ஆனால் அவரை அடைவதற்காகத் தன்னையே இழக்காது. ஒருவருடைய அன்புக்காகக் கெஞ்ச வேண்டிய நிலை வந்துவிட்டால், அந்த உறவைவிட முதலில் உங்களுடைய சுயமரியாதையைக் காப்பாற்றுங்கள்.

ஏனெனில், காதல் என்பது யாரோ ஒருவர் நம்மைத் தேர்ந்தெடுப்பதில் மட்டும் இல்லை, நம்மையும் நாம் மதித்துக்கொள்வதில்தான்  இருக்கிறது.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment