தனிமை என்பது தீர்வல்ல
கவலை தோய்ந்த முகத்துடன் ஒரு தம்பதியர் ஞானகுரு முன்னே வந்து நின்றனர். ‘ஏராளமான வரன்களைத் தேடி, அவர்களில் இருந்து பொருத்தமான ஒருவரை என் மகளுக்குத் திருமணம் முடித்துவைத்தோம். ஆனால், அவர்கள் இருவருக்குள்ளும் தினமும் ஏதேனும் ஒரு காரணத்தால் சண்டை வந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் உறவு நிலைக்காதோ என்ற பயம் வருகிறது” என்றனர். அவர்களுக்குப் பின்னே ஒளிந்திருந்த, மகளை முன்னே வரவழைத்துப் பேசினார் ஞானகுரு.
‘’திருமணம் முடிக்கும் பெண்ணுக்குக் கூறவேண்டிய ஒரே ஒரு அறிவுரை என்ன தெரியுமா? ‘நீ உன் கணவனுக்குத் தாயாக இரு” என்பதுதான். ஏன் இப்படி சொல்கிறார்கள்..?
ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு பெண் மிகுந்த சிரமங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறாள். தூக்கம், உணவு, மகிழ்ச்சி, ஓய்வு போன்றவற்றை விட்டுத்தருகிறாள். குழந்தை எத்தனை முறை தவறு செய்தாலும் மீண்டும் மீண்டும் மன்னிக்கிறாள். இவற்றை எல்லாம் ஒரு பெண் தன்னுடைய எல்லா குழந்தைக்காகவும் சந்தோஷமாகவே செய்கிறாள். அப்படி ஒரு குழந்தையாகத்தான் கணவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால், ஒவ்வொரு கணவனும் மனைவியிடம் தன்னுடைய அம்மாவைத்தான் தேடுகிறான். தான் என்ன செய்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் அம்மாவாக, அவள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். மேலும், தன்னுடைய குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்றும் அளவுக்கு ஒழுக்கம் நிறைந்தவளாக, அடக்கமான பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறான்.
ஆனால், இன்றைய பெண்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை மிக்கவர்களாக இருக்கிறார்கள். ஆண், தன்னை, தன்னுடைய குணத்துக்காகவே நேசிக்கவேண்டும் என்று நினைக்கிறாள். அதாவது, இன்னொருவனுடைய தாயாக மாறுவதற்கு எந்த பெண்ணும் விரும்புவதில்லை, அதற்காக எந்தவொரு முயற்சியும் எடுப்பதில்லை.
தன்னுடைய தாயைப் போன்று மனைவி இல்லை என்ற அதிர்ச்சியை பெரும்பாலான ஆண்களால் தாங்கிக்கொள்ள இயலுவதில்லை. அப்படி மாறுவதற்கு மனைவியிடம் விருப்பமும் இல்லை என்பது மேலும் அதிர்ச்சி தருகிறது. ஆகவே, திருமணத்தில் ஏமாந்துவிட்டதாக நினைக்கிறான். இந்த உறவு நிலைக்குமா என்ற சந்தேகம் கொள்கிறான்.
அதேபோல், பெண்ணுக்கும் நிறைய விருப்பங்கள் இருக்கின்றன. அதாவது, தான் பார்த்து ரசித்த, வியந்த ஆண் போன்று தன்னுடைய கணவன் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள். எல்லா நேரமும் தன்னை காதலிக்க வேண்டும், தன்னுடைய மகிழ்ச்சிக்கு எந்த வகையிலும் இடையூறு தரக்கூடாது என்று நினைக்கிறாள். குறைந்தபட்சம் தன்னுடைய தன்னுடைய தந்தையைப் போன்றாவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். ஆனால், எந்த ஓர் ஆணும் தன்னுடைய குணத்தை திருமணத்திற்குப் பிறகும் மாற்றிக்கொள்வது இல்லை. அதனாலே, பெண்ணும் கடுமையான ஏமாற்றத்துக்கு ஆளாகிறாள்.
ஆக, திருமணம் என்பது ஏமாந்துபோன இருவரின் சங்கமமாக இருக்கிறது. எந்த ஒரு செயலும், பேச்சும் சண்டையை நோக்கியே அழைத்துச் செல்வதாக அமைகிறது. தேவையே இல்லாமல் ஒரு பெண்ணிடம் தன்னுடைய எதிர்காலத்தை இழந்துவிட்டதாக ஆண் வருத்தப்படுகிறான். தன்னுடைய சுதந்திரம், சந்தோஷம் முழுமையாக பறிபோனதாக பெண் ஆத்திரமடைகிறாள். ஆகவே, இருவரும் ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சண்டைக்கோழியாக மாறிவிடுகிறார்கள்.
ஒருவருமே தங்கள் சந்தோஷமும் எதிர்காலமும் பறிபோனதாக நினைத்து, ஒருவரையொருவர் குற்றம் சாட்டவும், சண்டை போடவும் செய்கிறார்கள். இனிமேல், சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை, பிரிவதுதான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இவர்களுக்குள் எரியும் நெருப்பில், பெற்றவர்கள் எண்ணெய் ஊற்றினால், அடுத்து விவாகரத்துதான், வாழ்க்கையில் மிகப்பெரிய தீர்வு என நினைக்கிறார்கள்.
பெரும்பாலான திருமண பந்தத்தில் மிகப்பெரும் குற்றவாளியாக ஆணே இருக்கிறான். ஏனென்றால், அவன் மனைவியைத் தேடாமல் தன்னுடைய தாயைத் தேடுகிறான் ஒவ்வொரு பெண்ணும் காதலியாக, மனைவியாக வாழ்த்தான் விரும்புவாளே தவிர, ஒருவன் செய்யும் தவறுகளை எல்லாம் பொறுத்துக்கொள்ளும் தாயாக மாற விரும்புவதில்லை.
பெண்ணை தன்னுடைய காதலியாகவும், மனைவியாகவும் ஒருவன் ஏற்றுக்கொண்டால், அதன்பிறகு அவளே தாயாகவும் மாறுவாள். அதுவரை ஆண் காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு பெண்ணும் அடிப்படையில் ஒரு தாய். மேலும், குடும்ப வாழ்வில் பெண்ணைவிட ஆணுக்குத்தான் கூடுதல் அனுகூலம் இருக்கிறது. அதன்படி, திருமணம் செய்துகொண்ட ஆண்களும், திருமணம் செய்துகொள்ளாத பெண்களும்தான் அதிக சந்தோஷமாக இருப்பதாக உணர்கிறார்கள்.
இன்னொரு உண்மையை ஆணும், பெண்ணும் புரிந்துகொள்ள வேண்டும். ஆணும், பெண்ணும் தனித்தனியே வாழ்ந்துவிட முடியும் என்றாலும், இயற்கை அவர்களை அப்படி படைக்கவில்லை. ஒருவருக்கொருவர் நிரப்பிக்கொள்ளும் வகையில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் சிறப்பான வாழ்க்கையாக கருதப்படுகிறது. எனவே, இன்று இருவரும் பிரிந்தாலும், வேறு ஒருவருடன் பின்னர் இணையத்தான் வேண்டும். எனவே, உடைந்துபோயிருக்கும் உறவை முடிந்த வரையிலும் சீர்படுத்தும் வேலையில் இருவரும் இறங்கவேண்டும்.
.
எந்த வயதில் இருந்தாலும் பெண்களை விட ஆண்கள்தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக சுகமும், சந்தோஷமும் அடைகிறார்கள் என்பதும் உண்மை. இன்னொரு உண்மையையும் ஆண் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது, மனைவி இறந்துவிட்டால், ஆணால் அத்தனை எளிதாக தனியே வாழ்ந்துவிட முடிவதில்லை. மீண்டும் திருமணம் செய்துகொண்டால் மட்டுமே அவர்களால் வாழ்க்கையை நடத்த முடிகிறது. ஆனால், கணவனை இழந்த பெண்களால் எளிதில் தனித்து வாழ்ந்துவிட முடிகிறது. எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்திவிடுகிறாள். எனவே, ஆணுக்குத்தான் பெண் அதிகம் தேவைப்படுகிறாள் என்பதால், ஆரம்ப காலங்களில் அவனே அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டும்.
திருமண வாழ்க்கை சிறப்பாகத் தொடங்கவேண்டும் என்றால், முதலில் கட்டாயக் கல்யாணத்தை நிறுத்த வேண்டும். திருமணம் வேண்டாம், இந்த பெண் வேண்டாம், இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்பவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் முடித்துவைத்தால், அவர்கள் அத்தனை எளிதில் தங்கள் மனதை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். சண்டை போடுவதற்கு சாக்கு பார்த்துக்கொண்டே இருப்பார்கள். எனவே, இதனை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிடுவது நல்லது.
திருமணம் முடித்தவர்களுக்கு இடையில் பொய், சந்தேகம் நுழைந்துவிடக் கூடாது. ஒருவரிடம் ஒருவர் தோற்பதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். விட்டுத்தரும் மனப்பான்மைதான் திருமண உறவை நிலைக்கச் செய்கிறது. சின்னச்சின்ன சண்டைகளால் தங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதாக முடிவு எடுத்துவிடக் கூடாது. ஏனென்றால், ஒவ்வொரு நபரும் மகிழ்ச்சியாக வாழ்வது அவரவர் கையில்தான் இருக்கிறதே தவிர, வேறு ஒருவரிடம் அல்ல.
இறுதியில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. உலகெங்கும் தம்பதியருக்கு இடையில் சண்டை நடக்கிறது, விவாகரத்து நடக்கிறது என்றாலும், அதைவிட அதிகமாக ஏன் திருமணம் நடக்கிறது..?
ஏனென்றால், மனித வாழ்க்கையில் இதைவிட சிறந்த உறவு வேறு எதுவும் கண்டறியப்படவில்லை என்பதுதான். இந்த உறவுக்குத்தான் பலரும் காத்துக்கிடக்கிறார்கள். எனவே, கையில் இருக்கும் உறவின் மகிமையை அறியாமல் உடைத்துவிட வேண்டாம். ஆனால், பெரும்பாலோருக்கு ஒரு பொருள் உடைந்தபிறகுதான், காணாமல் போன பிறகுதான் அந்த பொருளின் அருமை தெரிகிறது. அப்படியொரு நிலைக்கு ஆணும் பெண்ணும் போய்விட வேண்டாம்
முட்கள் நிரம்பியிருந்தாலும், திருமண உறவு என்பது ஒரு ரோஜாவைப் பறிப்பது போன்றதுதான். பழகிவிட்டால் முட்களைத் தொடாமல் ரோஜாவை மட்டும் பறித்து மகிழ முடியும். அதுவரை பொறுமையாக காத்திருக்கவும், விட்டுக்கொடுக்கவும் கற்றுக்கொள்” என்றார் ஞானகுரு.
பெண்ணின் முகத்தில் தெளிச்சி தென்பட்டது.