அவரவர் வாழ்க்கையில் அவரவர் பெரியவர்
திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்வார்கள். 1,330 குறள்களில் திருவள்ளுவர் கூறிவந்த வாழ்க்கைத் தத்துவத்தை ஒரே ஒரு பாடல் மூலம் அற்புதமாக விளக்கியிருக்கிறார் கணியன் பூங்குன்றனார்.
ஆனால் அவரது பாடலில் முதல் வரியான, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது மட்டுமே நம் மக்களுக்கு ரொம்பவும் பரீட்சயம். திருக்குறளை பாராட்டிப் பேசுவது போன்றும், மாணவர்களிடம் பரப்புவது போலவும் இந்த பாடலை பலரும் முன்னிறுத்தவில்லை என்பதால் இந்த பாடலின் அடர்த்தியும் முழுமையான தத்துவமும் இன்னமும் மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை.
இதோ, அந்த முழு பாடல்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
கொஞ்சம் ஆழ்ந்து படித்தால் இதன் அர்த்தத்தை அத்தனை பேரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். இந்த பாடலின் அர்த்தத்தைக் கேளுங்கள். ஒவ்வொரு வரியிலும் உலக மக்களுக்கான வாழ்க்கைத் தத்துவம் நிரம்பி வழிகிறது.
- எல்லா ஊரும் எனது ஊர் எல்லா மக்களும் எனக்கு உறவினர்களே என்று மனிதர்கள் எண்ணுதல் வேண்டும். உலக மக்கள் அனைவரும் உறவினர் என்ற எண்ணம் எழுந்துவிட்டால் இங்கே பிரிவினைக்கு அவசியம் இல்லை.
- உங்களுக்கு வரும் தீமை என்றாலும் நன்மை என்றாலும் அது அடுத்தவரால் வருவதில்லை. அவற்றின் அடிப்படை காரணம் நீங்கள் மட்டுமே என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
- மனக் கவலையும் ஆறுதலும் மற்றவரால் கிடைப்பது இல்லை, மனம் பக்குவம் அடைந்துவிட்டால் எந்த கவலையும் பக்கத்தில் நெருங்காது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
- இறப்பு என்பது இந்த உலகிற்கு புதிய தகவல் அல்ல. அது இயற்கையானது. எல்லோருக்கும் பொதுவானது.
- வாழ்க்கையில் ஏற்படும் இனிய நிகழ்வுகளைக் குறித்து பெருமகிழ்ச்சி கொள்ளவும் வேண்டாம். அதுபோலவே, துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம். இன்பமும் துன்பமும் இணைந்தே வாழ்க்கை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
- இந்த வானம் வெப்பமான மின்னல் தருகிறது. குளிர்ச்சியான மழை தருகிறது. கற்களைப் புரட்டிச் செல்லும் காட்டாற்று வெள்ளத்தில், முட்டிமோதிச் செல்லும் படகு போன்று துன்பங்களும் இன்பங்களுமாக வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கும். இது வாழ்க்கையின் இயல்பு, எல்லோருக்கும் பொதுவானது என்ற மனத் தெளிவு அடையுங்கள்.
- இந்த தெளிவு வரப் பெற்றால், உயர்ந்த நிலையில் உள்ளவர்களைப் பார்த்து வியந்து நிற்கவும் வேண்டாம். சிறிய நிலையில் உள்ளவர்களைப் பார்த்து இகழ்வதும் வேண்டாம். அவரவர் வாழ்வில் அவரவர் பெரியவர் என்பது அடிப்படை.
ஒவ்வொரு வரியிலும் எத்தனை அடர்த்தியான தத்துவம் என்பதை ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள். கீதையிலும், புத்தர் போதனைகளிலும் திருக்குறளிலும் வரும் அத்தனையும் இதில் அடக்கம்.