சென்னை பெருவெள்ளம் உண்மை காரணம் இதுதான்

 என்ன செய்தார் சைதை துரைசாமி – 447

சென்னையை மிரட்டிய 2015 பெருவெள்ளத்திற்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு மட்டுமே காரணம் இல்லை என்பதை ஆதாரபூர்வமாக மாமன்றக் கூட்டத்தில் பேசினார் மேயர் சைதை துரைசாமி.

இது குறித்து அவர், ‘’அன்றைய தினம் செம்பரம்பாக்கம் ஏரி தவிர வண்டலூர், ஊரப்பாக்கம், இரும்புலியூர், ஆதனூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம், நாட்டரசன்பட்டு, ஓரத்தூர், கண்ணந்தாங்கல், மாம்பாக்கம், வெங்காடு, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், பூந்தண்டலம், பழந்தண்டலம், சீக்ராயபுரம், சோமங்கலம், அமரமேடு, குன்றத்தூர், கோவூர், மாங்காடு, பெரியணிச்சேரி ஆகிய ஏரிகளுக்கும்  அடையாறு நதியே வடிகாலாகும்.  இவைகள் தவிர காட்டங்குளத்தூர் ஏரி, பொத்தேரியில் உள்ள காவனூர் ஏரி ஆகியவற்றின் உபரி நீரும் அடையாற்றில் தான் கலக்கிறது.

மேற்குறிப்பிட்ட ஏரிகள் மட்டுமின்றி, பாப்பான் கால்வாய், மண்ணிவாக்கம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், ராமாபுரம் கால்வாய், திருமுடிவாக்கம்  இணைப்புக் கால்வாய், ஊரப்பாக்கம் இணைப்புக் கால்வாய், ஓரத்தூர் ஓடை ஆகியவற்றில் இருந்தும்  தண்ணீர் அடையாற்றுக்குத்தான்  வந்து சேர்கின்றன.

டிசம்பர் 1-ம் தேதி பெய்த கன மழையின்போது ஆதனூர் ஏரி,  மணிமங்கலம் ஏரி,  செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றின் உபரி நீர் திருநீர் மலைப்பகுதியில் ஒன்று சேர்ந்தபோது, அடையாற்றில் மிகப் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை செம்பரம்பாக்கம் ஏரி நோக்கி வருவதைப்  போல் தென்சென்னையில் பெய்த மழைநீர் முழுக்க அடையாறில்  கலக்கிறது. மதுரவாயல், விருகம்பாக்கம்,  ஆலந்தூர் , பல்லாவரம் மழைநீர் முழுக்க அடையாறில் தான் கலக்கிறது.  இப்படி  மூன்று மாவட்டங்களில் பெய்த பெருமழையின் நீரும், முன்பு குறிப்பிட்ட இரண்டு மாவட்ட ஏரிகளின் உபரி நீரும் மற்றும் சென்னையில் வரலாறு காணாத பெரும் மழையால் கிடைத்த நீரும் அடையாற்றில் கலந்துள்ளது.

இப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டுமின்றி, அதன் சுற்றுப் பகுதியில் பெய்த 100 ஆண்டு வரலாறு காணாத பேய் மழையாலும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சார்ந்த  பல ஏரிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்ட அதிக அளவிலான உபரி நீராலும் அடையாற்றில் அன்றைய தினம் பெருவெள்ளம் வந்து கரையோரப் பகுதிகளையும் தாண்டி பல குடியிருப்புகளைச் சூழ்ந்து, சென்னைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது…’’ என்று கூறினார்.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment