டாக்டர் ஜோ.ஜாய்ஸ் திலகம்
மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடலமைப்புகளும் உள்ளுறுப்புகளும் அமைந்திருக்கின்றன என்றாலும், ஒவ்வொரு உடலுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. எனவே நோயாளியை ஆய்வு செய்து அறிவதன் மூலமே சிகிச்சை அளிக்க முடியும் என்கிறார் மருத்துவர்.
‘பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்’ என்ற பழைய பாடலைக் கேட்டிருப்பீர்கள். ஒரு வகையில் இது அக் மார்க் உண்மை. பறவைகள் மட்டுமின்றி ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது.

மனிதர் என்றால் கை, கால், தலை என்று வெளியுறுப்புகளும் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என்று உள்ளுறுப்புகளும் அனைவருக்கும் பொதுவாக இருந்தாலும், ஒவ்வொரு நபரின் அடிப்படைக் குணம், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், பழகும் விதம், விருப்பு, வெறுப்பு, புத்திக்கூர்மை, குணம் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசப்படுகிறது.
எனவே, ஒவ்வொரு மனிதரை தாக்கும் நோயின் தன்மையும் வேறுபாடாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. குரிப்பாக டைபாய்டு காய்ச்சலுக்கு சால்மனெல்லா என்ற பாக்டீரியா காரணமாக இருக்கிறது. இந்த பாக்டீரியா தாக்குதலுக்கு ஆளாகும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு வகையில் பாதிப்பு தென்படுகிறது. அதாவது அந்த நபரின் நோய் எதிர்ப்புத்தன்மை, உடல் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வீரியமும் பாதிப்பும் உண்டாகிறது.
இதனால் ஒரே மருந்து, ஒரே அளவில் எல்லோருக்கும் கொடுப்பது சரியாக இருக்காது. ஒவ்வொரு நபருக்கும் அவர் உடல் தன்மை மற்றும் நோய் பாதிப்புக்கு ஏற்ப ஒரு தனி மருந்து தேர்ந்தெடுப்பது அவசியம். இதுவே, ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவம்.
ஹோமியோபதி மருத்துவத்தில் வியாதிகளை அலசுவதை விட, நோய்க்கு ஆளான மனிதரை அலசி ஆய்வு செய்து தீர்வு காணப்படுகிறது. இப்படி நோயாளிகளை அலசி ஆய்வு செய்து சிகிச்சை அளிப்பது, ஹோமியோபதியில் கேஸ் டேக்கிங் என்று அழைக்கப்படுகிறது. இதனை சிறப்பாக செய்து முடிப்பதில் தான் நிபுணத்துவம் இருக்கிறது.
இதற்கு உதாரணமாக ஒரு நபரைக் குறிப்பிடுகிறேன். அவரது பெயர் அனுராதா என்று வைத்துக்கொள்வோம். சேலத்தைச் சேர்ந்த அனுராதாவுக்கு 27 வயது. அவரது கணவர் இன்ஜினியராக பணியாற்றிவருகிறார். க்ரோனிக் க்ரானியோல்ஜியா எனப்படும் நாட்பட்ட தலைவலியால் அவதிப்பட்டு வந்தார் அனுராதா.
எங்கள் கிளினிக்கிற்கு வந்ததும் அனுராதாவின் கணவரே பேசினார். ‘’டாக்டர் என் மனைவிக்கு 21 வயதில் திருமணமானது. அன்று முதல் இன்று வரையிலும் தாங்கமுடியாத தலைவலியினால் அவ்வப்போது துடித்து வருகிறார். எங்களுக்கு 7 மாத குழந்தை இருக்கிறது. இவள் நன்றாகவே குழந்தையைப் பார்த்துக்கொள்கிறாள். ஆனால், தலைவலி வந்துவிட்டால் குழந்தையைத் தூக்கி வீசும் அளவுக்கு கோபமாகி விடுகிறாள். அவளை மீறி ரொம்பவே கோபப்படுகிறாள். கையில் கிடைக்கும் பாத்திரங்களை எல்லாம் தூக்கி வீசுகிறாள்’’ என்றார்.
‘’அவருக்கு எந்த நேரங்களில் எல்லாம் தலைவலி வருகிறது?’’
‘’அவள் ஏதேனும் கேட்டு அதற்கு நான் மறுப்பு தெரிவித்தால் உடனே கோபமாகிவிடுகிறாள். உர்ரென்று முகத்தை வைத்துக்கொள்கிறாள். அதன் பிறகு தலைவலியினால் அவதிப்படுகிறாள்…’’
‘’திருமணத்திற்கு முன்பு தலைவலி இருந்ததா…’’
‘’இல்லை என்று தான் அவளுடைய குடும்பத்தினர் சொல்கிறார்கள். அவளுடன் பிறந்த அண்ணன்கள் 4 பேர் இருக்கிறார்கள். இவள் எல்லோருக்கும் செல்லமாக கடைக்குட்டியாக வளர்ந்திருக்கிறாள். திருமணத்துக்காக வரதட்சனை எல்லாம் வாங்கியிருக்கிறேன். அதனால் இவளை நான் ரொம்பவே அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டியிருக்கிறது. பல்லைக் கடித்துக்கொண்டு தான் குடும்பம் நடத்துகிறேன்…’’
‘’டாக்டரிடம் காட்டினீர்களா..?’’
‘’பார்க்காத டாக்டர் இல்லை. இவள் தலைவலிக்காக மட்டும் ஏராளமான பணம் செலவழித்திருக்கிறேன். பொதுவாக டாக்டர்கள் வலி என்றதும் தூக்க மாத்திரை போன்று வலி மாத்திரை கொடுப்பார்கள். அதை போட்டுக்கொண்டு தூங்கிவிடுவாள்.
காலையில் எழுந்ததும் மாறிவிடுவாள். நான் என்ன சொன்னாலும் கேட்பாள். என் மீது அவளுக்கு வெறுப்பு, கோபம் எல்லாம் கிடையாது. எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வாள். ஆனால், தலைவலி வந்தால் கோபத்தைக் காட்டிவிடுகிறாள்..’’
‘’மாமியார், மாமனாருடன் உறவுகளிடம் எப்படி நடந்துகொள்கிறார்..?’’
‘’எல்லோரிடமும் நன்றாகவே நடந்துகொள்கிறாள். அவளுடைய கோபத்தை எல்லாம் என் மீது மட்டுமே காட்டுவார். அதனாலே நான் அலுவலகத்தில் இருந்து லேட்டாகவே வீட்டுக்குச் செல்வேன். லேட்டாகச் செல்வதால் சாப்பிட்டதும், அவளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிடுவேன்’’
’’சரி, இனி அனுராதா பேசட்டும்’’ என்று அவளிடம் கேட்டேன்.
‘’முன்பு எனக்கு தலைவலி வந்ததே இல்லை. கல்யாணத்திற்குப் பிறகு தலைவலி வராத நாளே இல்லை. இவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேநேரம், எனக்கு அவர் ஏதாவது செய்யவில்லை என்றால் கோபம் வந்துவிடும். அந்த நேரத்தில் மட்டும் அவரை எனக்குப் பிடிக்காது. வருவார், சாப்பிடுவார், தூங்கிடுவார். என் கூட உட்கார்ந்து பேசவே மாட்டார்’’ என்றவள் ஃபைலில் இருந்து ஒரு கட்டு பேப்பரை எடுத்துக் காட்டினார்.
ரத்தப் பரிசோதனை தொடங்கி பல்வேறு பரிசோதனை முடிவுகளைப் பார்த்தபோது, எல்லாமே நார்மலாகவே இருந்தன. எல்லாமே சரியாக இருக்கும் போது ஒருவருக்கு தாங்கமுடியாத அளவுக்கு தலைவலி ஏன் வர வேண்டும் என்பதை ஆய்வு செய்ய வேண்டி இருந்தது.
எனவே, அனுராதாவிடம் நிறைய பேச வேண்டியிருந்தது. அதன் பிறகே அனுராதாவின் தீராத தலைவலிக்கு மூன்று காரணங்கள் இருப்பதை அறிய முடிந்தது.
எக்ஸைட்டிங் காஸ், மெயிண்டெயினிங் காஸ், ஃபண்ட்மெண்டல் காஸ் அதாவது தினமும் உறுத்திக்கொண்டு இருப்பது, தொடர்து உறுத்தலாக இருப்பது மற்றும் அடிப்படைக் காரணமாக உறுத்தல்.
முதலாவது இல்லை என்பதை தாங்கிக்கொள்ள முடியாத ஒரு மனநிலை. அடுத்தது எதிர்பார்த்த அன்பு கணவனிடம் இருந்து கிடைக்கவில்லை என்ற ஏக்கம். இந்த இரண்டையும் தினம் தினம் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். அனுராதா எதிர்பார்த்த தாம்பத்திய வாழ்க்கை கூட அவருக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது புரியவந்தது. இவை எல்லாமே சேர்ந்து அமுக்கப்பட்ட நிலையில் தீராத தலைவலியாக அது மாறியிருப்பது தெரியவந்தது.
காரணம் கண்டுபிடித்துவிட்டால் அதன்பிறகு மருந்து கொடுப்பது எளிது. அவர்களுக்கு என்ன விஷயத்தினால் தலைவலி வருகிறது என்பதை இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்து புரிய வைத்து, அந்த நிலையிலிருந்து வெளிவருவதற்கு வழி காட்டியதுடன் அவருக்கு நேட்ரம் மூர் எனப்படும் மருந்தையும் கொடுத்து அனுப்பினேன். அதன் பிறகு அனுராதாவுக்கு தலைவலி வரவே இல்லை. இப்போது இருவரும் நல்ல ஜோடியாக இருக்கிறார்கள்.
தொடர்புக்கு : 98415 55955