மோசடிகளில் இருந்து தப்பிக்கும் 7 வழிகள்
நவீன காலத்தில் நடைபெறும் இணையதள பண மோசடியில் இருந்து உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க 7 சிறந்த யோசனைகள்.
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் பொருளாதார கட்டமைப்பில். வங்கி, நிதி சேவைகள் சார்ந்த பரிவர்த்தனைகளை பாதுகாப்பானவை என உறுதி செய்வதற்கான சில பயிற்சிகள் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நிதி பரிவர்த்தனைகள் மற்றும் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதில், குறிப்பாக இந்தியா போன்ற வேகமாக முன்னேறி வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மோசடி, இணைய திருட்டு மற்றும் உங்கள் முக்கியமான தகவல்களை அங்கீகாரமற்ற இணைப்புகள் மூலமாக திருடும் அபாயங்களைக் குறைக்க தனிநபர்கள் பல்வேறு அடுக்கு பாதுகாப்புகளை செயல்படுத்த வேண்டியது அவசியம். பாதுகாப்பான நடைமுறைகளை நாம் கற்றது மட்டுமின்றி நமக்கு தெரிந்தவற்றை சுற்றியுள்ளவர்களுக்கும் எடுத்துச் சொல்வது மிக முக்கியம்.
- வங்கி பரிவர்த்தனை தொகை வரம்புகளை வரையறுக்கவும்.
வங்கி வர்த்தக பாதுகாப்புக்கான முதல் படியாக, உங்கள் சேமிப்பு மற்றும் கடன் அட்டைகளை எங்கு; எப்படிப் பயன்படுத்தலாம் என்கிற வங்கிகள் வழங்கும் உள்ளமைக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கவனமுடன் செயல்படுத்துவது அவசியம். ஆன்லைன் பரிவர்த்தனையில் ஒரு பரிவர்த்தனையின் அதிகபட்ச தொகை வரம்புகளை நிர்ணயம் செய்து கொள்வது அவசியம். இணைய திருட்டுகள் நடைபெறும் போது குறிப்பிட்ட தொகைக்கு மேலாக இழப்புகளை சந்திக்காமல் பணத்தை பாதுகாத்து கொள்ள இது வழி வகுக்கும். வெளிநாட்டு ஆன்லைன் பரிவர்த்தனைகளை முடிந்தவரை முடக்கி வைப்பது சாலச்சிறந்தது.
- வங்கி பரிவர்த்தனை சார்ந்த முக்கியமான தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம்.
கிரெடிட் கார்டு டெபிட் கார்டு விவரங்கள், கடவு எண்கள் மற்றும் உள்நுழைவு இணைய பயன்பாட்டு கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான தரவுகளை யாருடனும் பகிர வேண்டாம். தனிப்பட்ட தகவல்களுடன் சமூக ஊடகங்கள் மூலமாக வரும் லிங்குகளை தவிர்ப்பது நல்லது. வங்கி பரிவர்த்தனை யின் போது பொது வெளியில் உள்ள Wi-Fi ஐப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- வங்கி பரிவர்த்தனை சம்பந்தமான குறுஞ்செய்திகளில் கவனம் செலுத்த வேண்டும்.
டெபிட், கிரெடிட் கார்டு சம்பந்தப்பட்ட குறுஞ்செய்தி மின்னஞ்சல் பரிவர்த்தனை விழிப்பூட்டல் தகவல்களையும், கார்டு எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும். அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைச் சரிபார்க்க உங்கள் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யவும்.
4.உங்கள் வங்கி அட்டை பரிவர்த்தனையில் கவனம் செலுத்துங்கள்.
ஷாப்பிங் நிறுவனங்கள், உணவகங்கள், எரிபொருள் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அட்டை மூலமாக பணம் செலுத்தும் போது, உங்கள் அட்டையை ஊழியர்களிடம் ஒப்படைக்கும் போது எப்போதும் உங்கள் பார்வையை வங்கி டெபிட் கிரெடிட் கார்டு மீது வைத்திருக்கவும். இது ஸ்கிம்மிங் ஆபத்தைக் குறைக்கும் மற்றும் EMV சிப் கார்டுகளைப் பயன்படுத்தும் போது கார்டு ஸ்லாட் அல்லது பாயின்ட் ஆஃப் சேல் பரிவர்த்தனையில் வழக்கத்திற்கு மாறாக கண்டால் உடனடியாக அந்த ஊழியரிடம் தெரிவிக்கவும்.
- ஆன்லைனில் பாதுகாப்பாக ஷாப்பிங் செய்யுங்கள்.
பாதுகாப்பான கட்டண பரிவர்த்தனை வழங்கும் நம்பகமான மற்றும் வங்கிகள் அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளங்களிலிருந்து ஷாப்பிங் செய்வது நல்லது. கூடுதல் பாதுகாப்பிற்காக உங்கள் கணக்குகளுக்கு இரு காரணி அங்கீகாரத்தை (2 Factor Authentication) இயக்குவது கூடுதல் பலம்.
- அப்டேட் முக்கியம் வங்கி மற்றும் பரிவர்த்தனை அப்ளிகேஷனை தொடர்ந்து அப்டேட் செய்து கொள்ளுங்கள். சமீபத்திய இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக வங்கி மற்றும் பரிவர்த்தனை அப்ளிகேஷன்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் வகையில் பண பரிமாற்ற நிர்வாகத்தின் அப்ளிகேஷனை புதுப்பிப்பு( Update ) செய்து கொள்வது அவசியம்.
- இணைய வழி மோசடியில் விழிப்புடன் இருங்கள்
ஆன்லைன் மோசடி அறிகுறிகளுடன் உங்களுக்கு வரும் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்கள் குறுஞ்செய்திகள் மற்றும் இணையதளங்கள் வாயிலாக வரும் கட்டணக் கோரிக்கைகள், சந்தேகத்திற்கிடமான லிங்குகள் அல்லது வங்கித் தகவல்களுக்கான செய்திகள் போன்ற மோசடிச் செயல்பாடுகள் நடந்தால், உடனடியாக உங்கள் வங்கிக்குத் தெரிவிக்கவும்.
பொதுமக்களின் வங்கி பரிவர்த்தனை சார்ந்த நிதிப் பதிவுகளைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருப்பது மோசடியைக் கண்டறிவதற்கு முக்கியமானது. பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதி செய்வதற்கான பொதுவான மோசடிகள் மற்றும் ஃபிஷிங் முயற்சிகள் பற்றி வங்கி வாடிக்கையாளர்களுக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் கற்பிப்பதும் முக்கியம். இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், வங்கி பரிவர்த்தனை பாதுகாப்பாக நடத்தலாம் மற்றும் மோசடியைத் தடுக்கலாம். உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கோ இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி அல்லது ஆன்லைன் காவல் துறை மூலமாக முதல் தகவல் புகார் அளிப்பது கட்டாயமாகும்
இதனால் மீண்டுமொரு வாடிக்கையாளர் இதுபோன்ற இணைய மோசடியில் இருந்து காப்பாற்றப்படுவர்.
மேற்கண்ட தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருந்து எதிர்கால இணைய வழி மோசடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
- மணியன் கலியமூர்த்தி