அவமானம் என்று எதுவுமில்லை. புதிய வாய்ப்புகளைப் புறக்கணிக்காதீர்கள்

மந்திரச்சொல். எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கை பாடம்

வாழ்க்கையில் சில நேரங்களில் விரும்பிய இடத்தை இழக்க நேரிடலாம். அந்தஸ்து பறிபோகலாம். தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய மனிதர்களே நம்மைத் திரும்பிப் பார்க்காமல் போகலாம். அப்போது பலரும் செய்வது, இழந்த இடத்தை நினைத்து வருந்துவதும், தங்களுக்குக் கிடைக்கும் புதிய வாய்ப்புகளைத் தகுதிக்குக் குறைவானவை என்று கருதி நிராகரிப்பதும்தான்.

ஆனால், வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி என்பது எப்போதும் பழைய இடத்திலேயே நீடிப்பது அல்ல; மாறிவிட்ட சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு தொடர்ந்து பயணிப்பதுதான்.

இதற்கு தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை ஒரு முக்கியமான வரலாற்றுப் பாடம்.

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் பாகவதர். அவருடைய படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு, பாடல்களுக்குக் கிடைத்த புகழ், ரசிகர்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கு ஆகியவை அன்றைய காலத்தில் வேறு எந்த நடிகருக்கும் எளிதில் கிடைக்காதவை. தங்கத் தட்டில் உணவருந்தும் அளவுக்கு செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்.

ஆனால், வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதை அவருடைய வாழ்க்கை மிகக் கொடூரமாக உணர்த்தியது.

1944-ல் நடைபெற்ற லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் கைது செய்யப்பட்டார். நீண்ட சட்டப் போராட்டம், சிறைவாசம், பொருளாதார இழப்புகள் என அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. பின்னர் லண்டனில் பிரிவி கவுன்சில் மேல்முறையீட்டில் வழக்கு ரத்து செய்யப்பட்டு 1947-ல் விடுதலையானார்.

ஆனால், சிறையிலிருந்து அவர் வெளியே வந்தபோது, அவர் விட்டுச் சென்ற திரையுலகம் அப்படியே இல்லை.

திரைப்படத் தொழில்நுட்பம் மாறியிருந்தது. நடிப்பின் பாணி மாறியிருந்தது. பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்த சினிமா, வசனங்களுக்கும் கதையோட்டத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருந்தது. புதிய தலைமுறை நடிகர்கள் உருவாகியிருந்தார்கள். ஒருகாலத்தில் அவருக்காகக் காத்திருந்த திரையுலகம், இப்போது அவருக்காகக் காத்திருக்கவில்லை.

இங்கேதான் அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்பட்டது.

அவருக்கு மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. ‘அம்பிகாபதி’ திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு தந்தையாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. சிவாஜியை விட அதிக சம்பளம் தரவும் தயாராக இருந்தனர்.

ஆனால், கதாநாயகனாகக் கோலோச்சிய தான் இப்போது கதாநாயகனுக்குத் தந்தையாக நடிப்பதா என்ற மனநிலையில் அந்த வாய்ப்பை அவர் ஏற்கவில்லை.  வேறு வேடத்தில் நடிப்பதில்லை என்று அவர் எடுத்த முடிவு அவரது திரையுலகப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.  

அந்த வாய்ப்பை ஏற்றிருந்தால் சினிமாவில் புதிய திருப்பத்தை அவர் அடைந்திருக்கலாம். ரங்காராவ், நாகையா, வி.எஸ்.ராகவன் போன்று காலம் முழுவதும் தொடர்ந்து நடித்திருக்கக்கூடிய வாய்ப்பை இழந்தார்.

இறுதியில், புகழின் உச்சத்தையும் வாழ்க்கையின் வீழ்ச்சியையும் நேரடியாக அனுபவித்த அவர், தனது வாழ்க்கையைப் பற்றிக் கூறியதாகப் பிரபலமாகச் சொல்லப்படும் வார்த்தைகள்:

“என்னைப் போல் வாழ்ந்தவரும் இல்லை;
என்னைப் போல் தாழ்ந்தவரும் இல்லை!”

இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருப்பது வெறும் சோகம் மட்டுமல்ல. புகழ், பணம், அந்தஸ்து, மனிதர்களின் அங்கீகாரம் ஆகிய அனைத்தும் நிரந்தரமானவை அல்ல என்ற வாழ்க்கையின் கசப்பான உண்மை.

’நான் எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டும்’, ‘நான் யாருக்கும் கீழே வேலை செய்யக்கூடாது’, ‘எனக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை குறைந்துவிடக்கூடாது’ போன்ற எண்ணங்கள் நம் வளர்ச்சிக்கே தடையாக மாறிவிடுகின்றன.

ஆனால், எந்த வேலையும் நம்முடைய கௌரவத்தைக் குறைப்பதில்லை. நேர்மையாக உழைத்து வாழ்வதுதான் உண்மையான கௌரவம். புதிய வாய்ப்பை ஏற்றுக்கொள்வது பலவீனமல்ல, அது மனவலிமை.

எந்த சூழலிலும் திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்ள முடியும் என்று நம்புபவர்கள், தோல்வியையும் மாற்றங்களையும் கற்றலுக்கான வாய்ப்பாகப் பார்க்கிறார்கள். இதற்கு மாறாக, தங்களுடைய பழைய திறமையையும் அந்தஸ்தையும் மட்டுமே நம்பியிருப்பவர்கள் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள்.

நேற்றைய அந்தஸ்தை வைத்துக்கொண்டு இன்றைய வாய்ப்புகளை மதிப்பிடக்கூடாது.

மரியாதை குறையும்போது, மற்றவர்கள் நம்மைவிட உயர்ந்த இடத்துக்குச் செல்லும்போது, முன்பு செய்த வேலையைவிடச் சிறிய வேலையைச் செய்ய வேண்டிய சூழல் வரும்போது மனம் அதை அவமானமாகப் பார்க்கிறது.

வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கலாம். ஆனால், சுயமரியாதையை விட்டுக்கொடுக்கக் கூடாது. அதேநேரத்தில், சுயமரியாதைக்கும் ஈகோவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நேர்மையாக உழைப்பது அவமானமல்ல. புதிதாகக் கற்றுக்கொள்வது அவமானமல்ல. தோல்விக்குப் பிறகு மீண்டும் தொடங்குவது அவமானமல்ல. மாறாக, பழைய பெருமையைப் பிடித்துக்கொண்டு புதிய வாழ்க்கையை இழப்பதுதான் வருத்தத்துக்குரியது.

வாய்ப்புகள் எப்போதும் நாம் விரும்பும் வடிவத்தில் வருவதில்லை. சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத கதவுகளின் வழியாகத்தான் புதிய வாழ்க்கை தொடங்குகிறது. அந்தக் கதவு சிறியதாக இருக்கிறது என்பதற்காக அதை மூடிவிடாதீர்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment