தேடாதீர்கள், இருப்பதில் கண்டுபிடியுங்கள்.
‘’நான் தினமும் காலையில் எழுகிறேன், வேலைக்குப் போகிறேன், கடுமையாக உழைக்கிறேன், வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் சாப்பிட்டுவிட்டு தூங்க மட்டுமே நேரம் இருக்கிறது. இந்த சூழலில் நான் எப்படி மகிழ்ச்சி அடைய முடியும்?” என்று ஞானகுருவிடம் கேட்டார் மகேந்திரன்.
‘’மகிழ்ச்சி உனக்குள் ஒளிந்திருக்கிறது. அதை நீ கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை என்பதால் உனக்கு அனுபவிக்க முடியவில்லை…’’ என்றார் ஞானகுரு.
‘’சும்மா எதையாவது சொல்லாதீர்கள்… இன்று நான் செய்த பணிகளுக்கு இடையில் நான் எப்படி மகிழ்ச்சியை கண்டுபிடிக்காமல் கோட்டை விட்டேன்’’ சுர்ரென கோபமாகவே கேட்டார் மகேந்திரன்.
’’உன்னால் தினமும் காலையில் எழ முடிகிறது, அலுவலகம் செல்ல முடிகிறது, குடும்பத்தினருடன் கொஞ்ச நேரம் செலவிட முடிகிறது, இரவு தூங்க முடிகிறது,மீண்டும் விழிக்க முடிகிறது. இவை எல்லாமே மகிழ்ச்சி இல்லையா..?’’
‘’இவை எல்லாம் சாதாரண செயல்தானே, இதில் மகிழ்ச்சி அடைவதற்கு என்ன இருக்கிறது..?’’
’’நீ செய்வதை சாதாரண செயலாக நினைப்பதும், மகிழ்ச்சி அடைவதும் உன் கைகளில்தான் இருக்கிறது. ஆம், சாதாரண செயலை எப்படி மகிழ்ச்சியாக அனுபவிப்பது என்று பார்க்கலாம்.
காலையில் கண் விழித்து எழ முடிகிறது அல்லவா..? அது எத்தனை பெரிய பாக்கியம் தெரியுமா? எத்தனையோ பேருக்கு தூக்கத்திலேயே உயிர் பிரிந்துவிடுகிறது. எத்தனையோ பேருக்கு ஏதேனும் நோய் காரணமாக காலையில் படுக்கையில் இருந்து எழ முடிவதில்லை. இவையெல்லாம் தாண்டி நீ காலையில் எழ முடிவதை ஒரு மனநிறைவாகப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம்.
உணவு சாப்பிட்டதும் பசி மறைகிறது. மனம் நிறைகிறது. அத மன நிறைவை மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம். ஆஹா, இன்று ஒரு நல்ல உணவு சாப்பிட முடிந்தது என்று மகிழ்ச்சி அடையலாம். இப்படி நீ ஒவ்வொரு விஷயத்திலும் மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்க முடியும். அதனை அனுபவிக்கவும் முடியும்.
மகிழ்ச்சி என்பது நீ நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு பரிசாக அல்லது ஏதேனும் ஒரு பொருளில், அங்கீகாரத்தில் இருக்கிறது என்று நினைக்காதே. பார்க்கும் இடத்தில் எல்லாம் மகிழ்ச்சி நிரம்பியிருப்பதாக எடுத்துக்கொள். இப்படி உன் வாழ்க்கையை உற்று நோக்கினால் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை சின்னச் சின்ன விஷயங்களில் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைய முடியும்…’’
’’ஆனால், அப்படி சட்டென எதையும் மகிழ்ச்சியாகப் பார்க்க முடியவில்லையே, இட்லியை பார்த்ததுமே,இன்றைக்கும் இட்லியா என்று எதிர்மறை சிந்தனையே வருகிறதே..?’’
’’மனம் என்பது களிமண் போன்றது. அதனை உன் இஷ்டத்துக்கு நீயே வடிவமைக்க முடியும். அதாவது வாழ்க்கை துன்பமயமானதாகவும் பார்க்க முடியும். காலையில் வழக்கத்தைவிட தாமதமாக எழுந்துவிட்டோமே, அச்சச்சோ பற்பசை தீர்ந்துவிட்டதே, சட்னிக்கு காரம் போதவில்லையே என்று மனதை துன்பமயமாக மாற்றிக்கொள்வதற்கு முடிவு செய்தால், எப்போதும் துன்பமே கிடைக்கும். ஆகவே, முடிவு செய்யவேண்டியது நீ மட்டும்தான்… ஒரு சிற்பத்தை கலையாகப் பார்ப்பதும், கடவுளாகப் பார்ப்பதும் உன் மனசுதான். எனவே, மகிழ்ச்சி அடைவதை ஒரு பயிற்சியாக தினமும் செய்து வா. தினமும் மகிழ்ச்சி அடைவதை தொடர் பயிற்சியாக செய்து வந்தால் உலகமே இன்பமயமாகத் தெரியும்.
ஆம், எல்லாம் இன்பமயம்.