மந்திரச்சொல்
பயணமாக இருந்தாலும் லட்சியமாக இருந்தாலும் சீக்கிரம் அடைவதற்கு மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள். எனவே, நேர்வழியில் செல்வதை விட குறுக்கு வழி தெரிந்தால் நல்லது என்று நினைக்கிறார்கள்.
பொதுவாக யாரும் தோல்வியை விரும்புவதில்லை. ஒரு தோல்வி ஏற்பட்டவுடன், ’நம்மால் முடியாது’, ’மீண்டும் அவமானப்பட வேண்டாம்’ என்றெல்லாம் சிந்தித்து முயற்சி செய்வதை நிறுத்திவிடுகிறார்கள். தோல்வியை ஒரு முடிவாகப் பார்க்காமல், அதை பாடமாகவும், திருப்பமாகவும் பார்க்கும் மனிதர்களே தொடர்ந்து முன்னேறுகிறார்கள்.
உண்மையில் தோல்வி யாரையும் தடுத்து நிறுத்துவதில்லை. எந்த இடத்தில் தவறு நடந்தது என்பதை கற்றுக்கொடுக்கிறது. ஒவ்வொரு தோல்வியும், அடுத்த முயற்சியை இன்னும் துல்லியமாக மாற்றும் புரிதலைக் கொடுக்கிறது. அதனால் மீண்டும் முயற்சி செய்பவர், முதல் முயற்சியை விட புத்திசாலித்தனமாக செயல்படுகிறார். அதனால் வெற்றி அடைகிறார்.
வெற்றிக்கு நேர் வழி மட்டுமே உண்டு. குறுக்கு வழி என்று ஒன்று கிடையவே கிடையாது. குறுக்குவழி என்பது சிரமத்தைத் தவிர்ப்பது அல்ல; தோல்விக்குப் பிறகு நேரத்தை வீணாக்காமல் மீண்டும் செயல்படுவது.
ஒரு தொழில் தொடங்கி நஷ்டமடைந்ததும், தொழில் நடத்தத் தெரியவில்லை என்று தொழிலே வேண்டாம் என்று ஒருவர் முடிவு செய்கிறார். மற்றொருவர், எங்கே தவறு நடந்தது என்பதைக் கற்றுக்கொண்டு மீண்டும் தொடங்குகிறார். முதல் தோல்வி அவரது மிகப் பெரிய வணிகப் பாடமாக மாறுகிறது.
ஒருவர் இண்டர்வியூவில் தோல்வி அடைகிறார். ஆனால், நேர்முகத் தேர்வில் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்படும் என்பதை அறிந்துகொள்கிறார். இது, அடுத்த நேர்முகத் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள உதவுகிறது.
ஒரு குழந்தை நடக்கும்போது பத்து முறை விழுந்தாலும் முயற்சி செய்யாமல் இருப்பதில்லை. ஆனால், மனிதர்கள்தான் ஒரு முறை விழுந்தாலே அதை அவமானம் என்று எழுந்தரிக்க அஞ்சுகிறார்கள்.
தோல்வி வெற்றிக்கு எதிரி அல்ல; வெற்றிக்கான பயிற்சியாளர். தோல்வி ஒருவரது வேகத்தை குறைக்கலாம்; ஆனால் பயணத்தை நிறுத்த முடியாது.
வெற்றிக்கான உண்மையான குறுக்குவழி, தோல்விக்குப் பிறகு தாமதிக்காமல் மீண்டும் முயற்சி செய்வது மட்டும்தான்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
