நல்லவருக்கு நல்லதும், கெட்டவருக்குக் கெட்டதும் நடக்கும் என்பது உலகின் மிகப்பெரிய மூடநம்பிக்கை.

மந்திரச்சொல்

நல்லது செய்தால் நல்லதே நடக்கும்; கெட்டது செய்தால் கெட்டதே நடக்கும் என்று சிறுவயதிலிருந்தே நம்பிக்கையுடன் வளர்க்கப்படுகிறோம். இந்த நம்பிக்கை மனிதர்களை நல்லவர்களாக வாழத் தூண்டுவதற்கு உதவலாம். ஆனால், இதை வாழ்க்கையின் மாறாத விதி என்று நம்புவது மிகப்பெரிய தவறு.

ஏனென்றால், வாழ்க்கை என்பது நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பரிசுகளையும் தண்டனைகளையும் வழங்கும் கணக்குப் புத்தகம் கிடையாது.

ஒரு நல்ல மனிதர் நேர்மையாக வாழ்ந்தாலும் நோய்வாய்ப்படலாம். உழைப்பாளியாக இருந்தாலும் வறுமையில் சிக்கலாம். அன்பு காட்டியவர்களால் ஏமாற்றப்படலாம். அதேநேரத்தில், பிறரை ஏமாற்றி வாழும் சிலர் செல்வத்துடனும் செல்வாக்குடனும் மகிழ்ச்சியாக வாழலாம்..

ஒருவர் விபத்தில் சிக்குவதற்கு அவர் கெட்டவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவர் நோயால் பாதிக்கப்படுவதற்கு அவர் ஏதோ தவறு செய்திருக்க வேண்டும் என்பதில்லை. எல்லா துயரங்களுக்கும் மனிதர்களின் செயல்களே காரணமல்ல. சூழ்நிலை, வாய்ப்பு, பொருளாதாரம், உடல்நலம், சமூக அமைப்பு, தற்செயல் நிகழ்வுகள் எனப் பல காரணிகள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.

நல்லவராக இருப்பது துயரங்கள் வராமல் தடுக்கும் கவசமல்ல. அதேபோல், கெட்டவராக இருப்பது துயரங்கள் வருவதற்கான உத்தரவாதமும் அல்ல.

இனவெறிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா தனது வாழ்நாளில் 27 ஆண்டுகளைச் சிறையில் கழிக்க வேண்டியிருந்தது. அஹிம்சை போராட்டத்தை அறிமுகப்படுத்திய காந்திஜி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்தோனேசியாவை 32 ஆண்டுகள் ஆட்சி செய்த சுஹார்த்தோ மீது மனித உரிமை மீறல்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக வெளியானது. அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளாமலே இறந்தார். இவரை போன்று எத்தனையோ பேர் தவறுகள் செய்து தண்டனை அனுபவிக்காமல் வாழ்கிறார்கள்.

இதில் அனைவரும் ஒரு முக்கியமான தெளிவைப் பெற வேண்டும். நல்லவராக வாழ்வது நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்புக்காக இருக்கக்கூடாது. நேர்மை என்பது நம்முடைய குணம். அன்பு என்பது நம்முடைய பண்பு. உதவி செய்வது நம்முடைய மனிதநேயம். இவற்றை மற்ற விளைவுகளோடு இணைத்துப் பார்க்கக்கூடாது.

வாழ்க்கையில் நல்லவர்களுக்கும் கெட்டவை நடக்கும். கெட்டவர்களுக்கும் நல்லவை நடக்கும். இதை ஏற்றுக்கொள்வது அவநம்பிக்கை அல்ல, யதார்த்தத்தைப் புரிந்துகொள்தல். நல்லது செய்தாலும் சோதனைகள் வரலாம் என்பதை உணர்ந்து, அவற்றை எதிர்கொள்ளும் வலிமையையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.

Leave a Comment