மந்திரச்சொல்
ஒரு மலையேற்ற வீரர் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் மூச்சுத் திணறி ஏறுகிறார். கால்கள் வலிக்கின்றன. குளிர் தாங்க முடியவில்லை. ஆபத்து அச்சமூட்டுகிறது. ஆனாலும் அவர் ஏன் திரும்பி வராமல் முன்னோக்கி போகிறார்.
ஏனென்றால், உச்சியை அடைய வேண்டும் என்ற இலக்கு, அவரது வலியை விட பெரியதாக இருக்கிறது.
இலக்கு இல்லாத மனிதர் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைப்பார். ஆனால் முன்னேற்றம் இருக்காது. இலக்கு உள்ள மனிதர் சில நேரங்களில் மெதுவாகச் சென்றாலும், அவர் முன்னேறிக் கொண்டே இருப்பார். வேகத்தைவிட திசை முக்கியம்.
எனவே, வாழ்க்கை உங்களுக்கு உதவவில்லை என்று வருந்துவதற்கு முன், உங்களையே ஒரு கேள்வி கேட்டுப் பாருங்கள்.
உண்மையில் எங்கே செல்ல விரும்புகிறேன்?
இந்தக் கேள்விக்கு பதில் தெளிவானவுடன், இதுவரை எதிராக வீசியது போலத் தோன்றிய காற்றும் ஆதரவாக வீசுவது புரியும். உலகம் மாறுவதற்கு முன், உங்கள் திசை மாற வேண்டும்.
உலகில் வெற்றி பெற்ற பெரும்பாலான வெற்றியாளர்கள் ஒவ்வொரு நாளும் சிறிதளவு முன்னேறிக்கொண்டே இருந்தார்கள், தோல்வியைச் சந்தித்தார்கள். விமர்சனங்களை எதிர்கொண்டார்கள். கேலி, கிண்டலை சந்தித்தாலும் தங்கள் திசையை மாற்றவில்லை. அதனால்தான் அவர்கள் வாழ்க்கையை மாற்ற முடிந்தது.
காற்று அவர்களுக்கு மட்டும் வேறு விதமாக வீசவில்லை. அவர்கள் தங்கள் பாய்மரத்தை சரியான திசையில் விரித்தார்கள்.
தனிப்பட்ட இலக்கு இல்லாதவர்கள், பிறரது இலக்குகளைத் தங்களுடையதாக நினைத்து வாழ்கிறார்கள். எல்லோரும் வாங்குகிறார்கள் என்பதற்காக வாங்குகிறார்கள். எல்லோரும் படிக்கிறார்கள் என்பதற்காக படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், தனது பாதையைத் தேர்ந்தெடுத்தவர், பிறருடன் ஒப்பிடுவதில் நேரத்தை வீணடிக்காமல் முன்னேறுவதில் நேரத்தை முதலீடு செய்வார்.
நம்மால் எல்லா சூழ்நிலைகளையும் கட்டுப்படுத்த முடியாது. காற்றின் வேகத்தை மாற்ற முடியாது. மழையை நிறுத்த முடியாது. அலைகளை அமைதிப்படுத்த முடியாது. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நிச்சயமாக செய்ய முடியும்.
அது, நம் இலக்கைத் தேர்ந்தெடுக்க முடியும். பயணிக்கும் இலக்கு தெளிவாக இருப்பவருக்கே காற்று ஆதரவாக வீசுகிறது என்பது வெறும் பழமொழி அல்ல, அது வாழ்க்கைக்கு வழிகாட்டும் தத்துவம்.
நல்ல காலம் வருவதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. முதலில் நம் வாழ்க்கையின் திசையைத் தெளிவுபடுத்த வேண்டும். இலக்கு தெளிவாகும் போது மனம் உறுதியாகும். மனம் உறுதியாகும் போது செயல் மாறும். செயல் மாறும் போது பழக்கங்கள் மாறும். பழக்கங்கள் மாறும் போது வாழ்க்கையும் மாறத் தொடங்கும்.
காற்று யாருக்கும் எதிரி அல்ல. அது எப்போதும் வீசிக்கொண்டே இருக்கிறது. ஆனால் எந்தக் கப்பல் தன் பாய்மரத்தை இலக்கை நோக்கி விரிக்கிறதோ, அந்தக் கப்பலுக்குத்தான் காற்று துணையாக மாறுகிறது. வாழ்க்கையும் அப்படித்தான்.
இலக்கு தெளிவாக இருந்தால், சூழ்நிலைகளும் ஒருநாள் உங்களுக்காக வேலை செய்யத் தொடங்கும்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
