பெருவெள்ளத்தில் ஒயர்லஸ் கருவியின் பயன்பாடு

என்ன செய்தார் சைதை துரைசாமி – 453

2015ம் ஆண்டு சென்னையை புரட்டிப்போட்ட மழை நேரத்தில் அத்தனை செல்போன் தொடர்புகளும் செயலிழந்து போயின. அதனால் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள முடியாத நிலை உருவானது. அதனை சென்னை பெருநகர மாநகராட்சி எப்படி சமாளித்தது என்று விளக்கினார் மேயர் சைதை துரைசாமி.

பெருமன்றத்தில் இதுகுறித்து பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’சென்னை மாநகராட்சி அனைத்து களப்பணியாளர்கள் மற்றும் இதர முக்கிய துறைகளுக்கு கையடக்க ஒயர்லஸ் கருவிகள் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 5 நாட்கள் தொலைபேசி மற்றும் கைபேசி போன்ற இதர தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்தும் செயலிழந்து விட்ட நிலையில் இந்த கையடக்க ஒயர்லஸ் கருவிகளின் பயன்பாட்டால் மட்டுமே  வெள்ள நிவாரணப் பணிகள் அனைத்தும் எந்தவித தொய்வும் இன்றி செய்யப்பட்டது என்றால் அது மிகையாகாது. 

நமது நிதிநிலை அறிக்கையில்   களப்பணியாற்றும் உதவி பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆகியோரில் தொடங்கி உயர் அதிகாரிகள், துணை மேயர் மற்றும் மேயர்  வரை  கையடக்க வயர்லஸ் கருவிகள்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேயர் மற்றும் உயர் அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் அலுவலகங்களிலும் புதிய ஒயர்லஸ் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசாங்கத்திடம் அனுமதி பெறுதல்  போன்ற அதிக காலதாமதம் ஏற்படக்கூடிய  முக்கியப் பணிகளைக் கூட மாநகராட்சியே நேரடியாக மேற்கொண்டு, மத்திய அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியுடன் தொடர்பு கொண்டு  ரூ.2.11 கோடி செலவில் 1096 ஒயர்லஸ் கொள்முதல் செய்து  அனைத்து களப்பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.  மேலும்,  உயர்  அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும்  அலுவலகங்களில்   38   ஒயர்லஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.  ஆக மொத்தம்   1,134  ஒயர்லஸ் கருவிகள் கடந்த கனமழை மற்றும் வெள்ளத்தின்போது முழு பயன்பாட்டில் இருந்தது.

கனமழை மற்றும் வெள்ளத்தின்போது, தொலைத் தொடர்பு சாதனங்களான, தொலைபேசி, கைபேசி போன்றவை முற்றிலும் செயலிழந்த நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஒயர்லஸ் கருவிகள் மட்டுமே தொடர்பு சாதனங்களாக பயன்படுத்தப்பட்டன.  ஒயர்லஸ் கருவிகள் பயன்படுத்தப்பட்டதால் மட்டுமே, மேயர், துணை மேயர், உயர் அதிகாரிகள் முதல்   கீழ்மட்ட அதிகாரிகள்  வரை தொடர்ந்து  தகவல் பரிமாற்றங்களை செய்து,  பொதுமக்களுக்கு உடனுக்குடன் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள  முடிந்தது. 

தொலைபேசி மற்றும் கைபேசி   இணைப்புகளை மட்டுமே நம்பியிருந்தால்,  மேயர், துணை மேயர் மற்றும் உயர் அதிகாரிகளால் தங்களுக்குக் கீழ் பணிபுரியும்  களப்பணி  அதிகாரிகளுக்கு   தக்க ஆணை மற்றும் அறிவுரைகளை  உடனுக்குடன் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு  நிர்வாகத்தில் சுணக்கம் ஏற்பட்டிருக்கும். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  வழங்கப்பட்ட  வயர்லஸ் கருவிகள் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டதால், நிர்வாகத்தில் எந்தவித சுணக்கமும் இன்றி,   அனைத்து அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் வெள்ள நிவாரண மேற்பார்வை அதிகாரிகள் மற்றும்  சென்னைக் குடிநீர் வாரியத்தின் உயர் அதிகாரிகள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், காவல்துறை மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகள்  ஆகியோருக்கும் ஒயர்லஸ் கருவிகள் வழங்கப்பட்டு இருந்ததால், அனைத்து வகையான  நிவாரண நடவடிக்கைகளும் மிகுந்த ஒருங்கிணைப்புடன் உடனுக்குடன் போர்க்கால அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்டது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகராட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக மேலே குறிப்பிடப்பட்ட பல்வேறு  அரசுத் துறை அதிகாரிகளுக்கும்,  சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும் ஒயர்லஸ் கருவிகள் வழங்கப்பட்டு  அந்தத் துறை சம்பந்தப்பட்ட பணிகளையும் மாநகராட்சிப் பணிகளுடன் ஒருங்கிணைத்து  செய்து முடிக்கப்பட்டது என்பதைத்  தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். கையடக்க ஒயர்லஸ் தொடர்பு கருவிகள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு  வழங்கப்பட்டிருக்கவில்லை என்றால், அம்மா உணவகங்கள் அமைக்கப்படாமல் இருந்திருந்தால், கற்பனை செய்து பார்க்க முடியாத துன்பத்தை  நாம்  சந்தித்திருப்போம்.  ஆனால்,  அந்த நிலை ஏற்படாமல்  தடுக்கப்பட்டு,  பேரிடர் நிவாரணம் மேற்கொள்வதில் ஒரு புதிய  சாதனையை  சென்னை மாநகராட்சி உருவாக்கியிருக்கிறது….’’ என்றார்.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment