மந்திரச்சொல்
பணம் சம்பாதிப்பதை விட, பணத்தை எப்படிச் செலவிடுகிறார் என்பதுதான் ஒருவரது நிதி சுதந்திரத்தைத் தீர்மானிக்கிறது.
பணத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள், யாரை பணம் கட்டுப்படுத்துகிறது என்பதை ஒருவரது ஷாப்பிங் அனுபவத்தில் அறிந்துகொள்ள முடியும். கடைக்குள் நுழைந்தவுடன் ஒருவரது தேவைகள் மட்டுமின்றி, அவரது ஆசைகளும் தூண்டப்படுகின்றன என்றால் அவர் பண மேலாண்மையில் தோற்றுப்போகிறார். வாங்க நினைக்காத அல்லது தேவையில்லாத பொருட்களை கவர்ச்சியான பேக்கிங், தள்ளுபடி சலுகை, ஆஃபர் என்று வாங்குபவரை பணம் ஆட்டுவிக்கிறது.
ஒருவர் சூப்பர் மார்க்கெட்டிற்கு 25 ரூபாய்க்கு பால் வாங்குவதற்கு நுழைகிறார். அங்கே மலிவு விலையில் ஆரஞ்சு பழம் பார்க்கிறார். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சாக்லேட் ஆஃபர் பார்த்து பணம் மிச்சப்படுத்துவதாக நினைத்து ஒட்டுமொத்தமாக 200 ரூபாயை காலி செய்கிறார். அதே சூப்பர் மார்க்கெட்டில் பால் மட்டும் வாங்கிக்கொண்டு வரும் திரும்புபவர் பணத்தைக் கட்டுப்படுத்துகிறார்.
இதுதான் தேவைக்கும் ஆசைக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம்.
மணி மேனேஜ்மென்ட் விதிப்படி, செலவுகளை தேவையின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். விருப்பத்திற்கேற்ப செலவழிக்கக்கூடாது. பலருடைய நிதிச் சிக்கலுக்கு குறைவான வருமானம் காரணமல்ல. கட்டுப்பாடில்லாத செலவுகளால் மாதச் சம்பளம் உயர்ந்தாலும், ஆசைகளும் அதே வேகத்தில் உயரும்போது சேமிப்பு, முதலீஉ ஒருபோதும் உருவாகாது.
பணக்காரர்களுக்கும், நிதி நெருக்கடியில் இருப்பவர்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு வருமானத்தில் மட்டும் இல்லை, பொருட்களை வாங்கும் ஒழுக்கத்தில் இருக்கிறது. நிதி ஒழுக்கம் உள்ளவர்கள், பொருளைப் பார்த்து முடிவு எடுப்பதில்லை; தங்கள் பட்ஜெட்டைப் பார்த்து முடிவு எடுக்கிறார்கள்.
அதனால், என்ன பொருட்கள் வாங்கவேண்டும் என்று லிஸ்ட் எழுதிக்கொண்டு சென்று, அவற்றை மட்டும் வாங்குங்கள். ஆஃபர் என்பது மாய வலை. பணத்தை நிர்வகிக்கத் தெரிந்தவர், வாங்குவதற்கு முன் யோசிப்பார். யோசிக்காமல் வாங்குபவர், பின்னர் கவலைப்படுகிறார்.
நிதிச் சுதந்திரத்துடன் வாழ்வதே நிம்மதியான வாழ்க்கைக்கு வழி.
