மந்திரச்சொல்
வாழ்க்கையில் தினமும் எல்லோரும் மகிழ்ச்சியுடன் செய்யும் ஒரு செயல் என்றால், அது அடுத்தவரின் குறைகளைக் கண்டுபிடித்து சுட்டிக்காட்டுவது. உண்மையில் அவர்கள் செய்யவேண்டிய செயல் என்னவென்றால், தன்னுடைய குறைகளைக் கண்டுபிடித்து திருத்திக் கொள்வதுதான். இதை செய்வதற்கு யாரும் விரும்புவதே இல்லை.
ஒருவரை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் எந்தத் திறமையும் தேவையில்லை. ஆனால், ஏன் அவர் அப்படி செய்தார் என்பதைப் புரிந்துகொள்ள அறிவு, பொறுமை, மனிதநேயம் தேவை. பிறரை குறை சொல்லும் தகுதி தனக்கு இருக்கிறதா என்றெல்லாம் யாரும் சிந்திப்பதே இல்லை. அதனால்தான் குறை சொல்லும் மனிதர்கள் அதிகமாக இருக்கிறார்கள், குறையைச் சரிசெய்ய உதவும் மனிதர்கள் மிகக் குறைவாகவும் உள்ளனர்.
ஒரு சினிமா எடுப்பது மிகவும் கடினமான செயல். ஆனால், ’கேவலம்’ என்று ஒரு வார்த்தையில் இயக்குனரை விமர்சனம் செய்வது மிகவும் எளிமையாக இருக்கிறது. இதற்கு சினிமா குறித்த அனுபவம், புரிதல் அவசியமில்லை. அதனாலே சோஷியல் மீடியாவில் ஒரு வார்த்தையில் ஒரு வருட உழைப்பை காலி செய்கிறார்கள்.
தன்னால் ஒரு சினிமா எடுக்க முடியாது என்ற குறையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அதை செய்பவரின் பிழையை மட்டும் பெரிதாகப் பார்க்கிறார்கள். இதனால் மனதுக்கு ஒரு போலியான திருப்தி கிடைக்கிறது.
ஒரு ஆசிரியர் மாணவனிடம், ’நீ முட்டாள், உனக்கு தலையில் எதுவும் ஏறாது’ என்று சொல்வது குறை. அதையே, ‘நீ இன்னும் கவனம் எடுத்து படித்தால் முன்னேறுவாய்’ என்று சொல்வது ஊக்கம் தரும் விமர்சனம். இதை மாணவன் விரும்புவான். குறை கூறுவது ஒரு காயத்தை உருவாக்கும். அதேநேரம்,வழிகாட்டுவது ஒரு மாற்றத்தை உருவாக்கும்.
ஒரு ஓவியத்தை ஆயிரம் பேர் பார்க்கிறார்கள். ஓவியரை பாராட்டுபவர்கள் வெகு குறைவு. இதெல்லாம் ஓவியமா என்று கிண்டலும், கேலியும் செய்பவர்களே அதிகம்.
குறை சொல்லும் பழக்கம் உறவுகளை அழிக்கிறது. ஒரு குடும்பத்தில் தினமும் ஒருவரையொருவர் குறை மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தால், அங்கே அன்பு மெதுவாக மறைந்து விடும். ஒரு அலுவலகத்தில் மேலதிகாரி எப்போதும் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டினால், பணியாளர்களின் தன்னம்பிக்கை குறைந்து விடும். ஒரு நண்பன் எப்போதும் விமர்சனம் மட்டுமே செய்தால், நட்பு நீண்ட காலம் நிலைக்காது.
மனிதர்கள் குறை சொல்வதை விரும்புவதில்லை. ஆனால், திருத்தம் சொன்னால் ஏற்றுக் கொள்கிறார்கள். அதனாலே, நல்ல மனிதர்கள் யாரையும் குறை சொல்வதில்லை. அவருடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்கிறார்கள். தேவைப்படும் நேரத்தில் மட்டும் திருத்தம் சொல்கிறார்கள்.
குறை சொல்லும் மனிதர்களை எதிரியாகப் பார்க்கிறார்கள். குறையைப் புரிந்துகொண்டு திருத்தம் சொல்பவர்களை வழிகாட்டியாக மதிக்கிறார்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
