தமிழரின் குச்சி விளையாட்டு

Image

நடுங்காதே… அலுங்காதே..!


தமிழர்களின் பாரம்பரிய  விளையாட்டுகள் எல்லாமே நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாசாரம்,பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை,விடாமுயற்சி போன்றவற்றை கற்றுத்தருவதாகவும், மனதிற்கும், உடலிற்கும் நன்மைகளை வழங்கக்கூடியதாகவும் இருக்கின்றன. மேலும், தமிழர்களின் மரபு வழி விளையாட்டு என்பது குழு உணர்வை மையப்படுத்தியதாகும்.
தமிழர்களின் விளையாட்டு மரபுகளைப் பட்டியலிட்டாலே அதுபுரியும். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளைப் பகுத்துப் பார்த்தால் 22% நடிப்பு, 21% தொடுதல், 20% உடல்-திறன், 15% குறி-அடித்தல், 13% ஒளிவு-மறைவு, 10% உல்லாசத் திளைப்பு, 7% மூளையைப் பயன்படுத்தும் உத்தி, 5% ஊழ்-அமைவு, 5% போர்த்திறம் என்னும் வகைப்பாட்டில் அமையும்.
இன்றளவும் கிராமப்புறங்களில் விளையாடப்பட்டுவருவது குச்சி விளையாட்டு. இதை தாத்தா குச்சி, நூறாங்குச்சி என்றும் சொல்வர். குச்சி விளையாட்டு என்பது எல்லா வயதினரும் விளையாடும் கைத்திறன் விளையாட்டு. இந்த விளையாட்டில், சிதறிய குச்சிகளை ஒவ்வொன்றாக, ஒன்று மற்றொன்றின் மீது மோதிவிடாமல் எடுக்க வேண்டும். அதாவது, மிகவும் கவனத்துடன் விளையாடக்கூடிய விளையாட்டாகும்.
இந்த விளையாட்டை இரண்டு நபர் முதல் எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.

இந்த விளையாட்டை விளையாட, ஒரே அளவில் 10 குச்சிகள் தேவை. அதாவது, விளக்குமாறில் உள்ள சீவக்குச்சிகளை ஒரே அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதவிர, இக்குச்சிகளைவிட சற்று நீளமுள்ள குச்சி ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இந்த 11 குச்சிகளையும் ஒருசேரப் பிடித்து, அதாவது நடுவில் பெரிய குச்சியைப் பிடித்து, அதற்கு மேலேயும் கீழேயும் தலா 5 சிறிய குச்சிகளை ஒன்றாக வைத்து, அவற்றை நிலத்தில் ஒரேவீச்சில் எறிய வேண்டும் அல்லது உள்ளங்கையால் உருட்டியும் போடலாம். பின், கீழே விழுந்துகிடக்கும் குச்சிகளை ஒவ்வொன்றாக அலுங்காமல் எடுக்க வேண்டும். அலுங்காமல் எடுத்த குச்சிகள் வெற்றிப் புள்ளிகளாக எடுத்துக்கொள்ளப்படும். அப்படி, குச்சி எடுக்கும்போது அலுங்கினால் ஆட்டம் கைமாறும். அடுத்தவர் அந்த ஆட்டத்தைத் தொடர்வார்.
இதில் பெரிய குச்சியை எடுத்தால் 10 புள்ளிகள் கிடைக்கும். இவ்வாறு புள்ளிகள் கணக்கிடப்பட்டு கூட்டிக்கொள்ள வேண்டும். இதில், யார் அதிக புள்ளிகள் பெற்றாரோ அவரே வெற்றியாளர் ஆவார். இவ்விளையாட்டு பொறுமையை வெளிப்படுத்தும். விரல் நடுக்கத்தைக் குறைக்கும். சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும்.
இதுகுறித்து விளையாட்டு ஆசிரியர் ஒருவர்,  ‘இந்த மரபுவழி விளையாட்டுகள், எதிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்துடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க உதவும். ஆசிரியர் – மாணவர்கள் இடையேயான இடைவெளி குறைந்து கற்பித்தல் எளிதாக நடைபெற இத்தகைய விளையாட்டுகள் உதவும். மேலும், மாணவ, மாணவிகள் கூடி விளையாடுவதால் பாலின சமத்துவம் பிறக்கும்’ என்கிறார்.

நாகரிகம், பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பாரம்பரிய விளையாட்டுகள் சிதைந்துவருகின்றன. அதனால், குழந்தைப் பருவத்தில் விளையாடும்போது கிடைக்கவேண்டிய தன்னம்பிக்கை கிடைப்பதில்லை. தோல்வியை, விமர்சனத்தை ஏற்றுக்கொள்கின்ற மனவலிமையும் தற்போதைய மாணவர்கள், இளைஞர்களுக்கு குறைந்துவருகிறது. வாழ்க்கையை எளிமைப்படுத்துகிற பல்வேறு வசதிகள் கிடைத்துள்ள இக்காலகட்டத்திலும் தற்கொலைகள் அதிகரித்துள்ளதற்கும், குடும்ப வன்முறைகள் பெருகியுள்ளதற்கும் இதுவே மூலகாரணமாக உள்ளது. இந்நிலையை மாற்ற வேண்டுமானால் நாம் மறந்துபோன மரபுவழி விளையாட்டுகளை மீட்டெடுப்பதுதான் ஒரே வழி.

வாரம் ஒரு நாளாவது விளையாடிப் பார்ப்போமே.

Leave a Comment