திறமை, அறிவு இருந்தால் மட்டும் போதாதுங்க….

Image

ராமானுஜனே உதாரணம்

கணித மேதை சீனிவாச ராமானுஜன் ஓர் அரிதான மனிதப்பிறவி. அவருடைய கணித அறிவுக்கு இணையாக இந்த உலகில் எவரையும் சொல்ல முடியாது. ஆனால், அவர் வாழ்ந்த காலத்திலும் வாழ்க்கைக்குப் பிறகும் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, அமைதியான வாழ்க்கை கிடைக்கவில்லை, போதிய வசதிகள் கிடைக்கவில்லை. வயிறு நிறைய சோறு கூட அவருக்குக் கிடைக்கவில்லை. நோய் துன்பத்துடன் போராடிக்கொண்டே இருந்தார்.

அறிவு, திறமை இருந்தும் ராமானுஜனால் ஏன் வெற்றி அடைய முடியவில்லை, மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை.

இந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன்பாக அவரது வாழ்க்கையையும் சாதனைகளையும் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம்.

இந்த உலகில் கணித மும்மூர்த்திகள் என்று மூவரை கணிதவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். முதலாமவர் ராமானுஜன். மற்றவர்களான லியோனார்டு ஆய்லர் மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி ஆகிய இருவரும் முழுமையாக கல்லூரிப்படிப்பு முடித்தவர்கள். ஆய்வுக்குத் தேவையான ஊக்கமும் வழிகாட்டுதலும் பெற்றவர்கள். இவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு தனி மனிதனாக புதிய விண்மீனாகத் திகழ்ந்தவர் ராமானுஜன்.

1887, டிசம்பர் 22 அன்று தமிழ்நாட்டின் ஈரோடு நகரத்தில் பிறந்தவர் ராமானுஜன். அவரது தந்தை நாராயணசாமி அய்யங்கார் ஏழ்மையான நிலையிலிருந்த கம்பள வியாபாரி. தாய் கோமளம் இசை ஆர்வம் கொண்டவர். சிறுவயதிலே காரணம் எதுவுமின்றி ராமானுஜனுக்கு கணிதத்தில் மிகுந்த ஈர்ப்பு இருந்தது. பத்தாம் வயதில் உயர்நிலை கணிதங்களை சுயமாக எழுதத் தொடங்கினார்.

ராமானுஜனின் கணித வல்லமையும் நினைவாற்றலும் அவரது ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் கும்பகோண்டம்  டவுன் மேல்நிலைப் பள்ளியில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. பள்ளியில் படித்தபோதே கல்லூரி மாணவர்களின் கணித புத்தகத்தை படித்து விடை கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

ராமானுஜத்துக்கு 16வது வயதில் G.S. Carr எழுதிய A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics என்ற புத்தகம் கிடைத்தது. 5000க்கும் மேற்பட்ட முடிவுகளை உள்ளடக்கிய இந்த புத்தகம் ராமானுஜத்தின் கணித ஆர்வத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இந்த புத்தகத்தைப் படித்தபிறகு முழுக்க முழுக்க கணிதத்தில் ஈடுபாடு காட்டினார். அதனால் கணிதம் தவிர மற்ற பாடங்களில் தோல்வி அடைந்தார். இந்த காரணத்தால் பட்டப்படிப்பு பெற முடியாமல் போனது.

சீனிவாச இராமானுஜன் தனது 22வது வயதில் ஒன்பதே வயது நிரம்பியிருந்த ஜானகியைக் கைப்பிடித்தார். 1910ம் ஆண்டு இந்திய கணிதக் கழகம் பற்றி கேள்விப்பட்டு அதனை தொடங்கிய பேராசிரியர் வி.ராமஸ்வாமி அய்யரை சந்தித்தார். ராமானுஜத்தின் மேதமையை அங்கீகரித்த ராமஸ்வாமி மூலம் சென்னை துறைமுக அலுவலகத்தில் எழுத்தர் வேலையை ஏற்றுக் கொண்டார். அதேநேரம் கணிதத்தில் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1911ம் ஆண்டு இந்தியக்கணிதக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் (Journal) இராமானுஜனின் முதல் ஆய்வுக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது.

ராமஸ்வாமியின் பரிந்துரையின் பேரில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஜி.ஹெச்.ஹார்டிக்கு கடிதம் எழுதிய ராமானுஜன் அவரது சொந்தக் கண்டுபிடிப்பாக 120 தேற்றங்களையும் அனுப்பிவைத்தார். ராமானுஜத்தின் தேற்றங்கள் ஹார்டிக்கு கொஞ்சம் விநோதமாகத் தெரிந்தது. கொஞ்சம் தவறுகளும் நிறைய மேதமையும் தென்பட்டஹு. உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ்க்கு அழைத்தார்கள்.

கடல் தாண்டிச் செல்வது அவருக்கு மிகப்பெரும் தடையாக இருந்தாலும் 1914ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் சென்றார். அங்கிருந்த நான்கு ஆண்டுகளும் தினம் தினம் புதிய தேற்றங்களைக் காட்டி ஆச்சர்யப்படுத்தினார். நான்கு ஆண்டுகளில் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்து சாதனை படைத்தார். இதையடுத்து 1918ம் ஆண்டு ஃபெல்லோ ஆஃப் த ராயல் சொசைட்டி என்ற கெளரவம் கிடைத்தது.  

ராமானுஜத்தின் பெருமை இந்தியாவுக்கும் பரவியது. எனவே, சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உருவானது. இந்த நேரத்தில் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். இங்கிலாந்து உணவு ராமனுஜத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் பட்டினி கிடந்து பெரும் சிக்கலுக்கு ஆளாகி காச நோயில் சிக்கிக்கொண்டார். அதோடு சீதோஷ்ணம், தனிமையும் அவரை தொந்தரவு செய்ததால் 1919ம் ஆண்டு இந்தியா திரும்பினார். நிறைய நிறைய கனவுகளுடன் இந்தியா திரும்பிய ராமானுஜன் அவரது 32வது வயதில் அதாவது 1920ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

ராமனுஜம் 3 நோட்டுகள் முழுக்க தேற்றங்கள் எழுதியிருக்கிறார். பின்னாளில் அவற்றை வரிசைப்படுத்தி புத்தகமாக வெளியிட்டார்கள். அதில் 3542 தேற்றம் அவர் நிறுவினார், 2000 தேற்றங்கள் உலகுக்கு அவர் புதிதாய்ச் சொன்னவை. இன்னும் பல தேற்றங்களுக்குக் கேள்விகளை விட்டுச் சென்றிருக்கிறார். விடை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இப்போது ராமானுஜத்தின் நோட்டுப் புத்தகங்கள் உலகம் முழுவதும் கணித ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்திய அரசால் அவரது பிறந்த நாள் “தேசிய கணித நாள்” என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் உலகத்திற்கு அளித்த அறிவுப் பொக்கிஷம் நூற்றாண்டுகளுக்குப் பின்னும் ஆச்சர்யம் அளிப்பவையாகவே இருக்கின்றன.

இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் உலக அளவில் பேரும் புகழும் பெற்றிருப்பார் என்பது உண்மை. அதேநேரம், வாழும் காலத்தில் அவர், “எனது மூளை சோர்வடைகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எனக்கு உணவு வேண்டும். அதுதான் எனக்கு முன் இருக்கும் மிகப்பெரும் சவால். வயிற்றுக்கு மட்டும் ஒரு வழி கிடைத்துவிட்டால் உற்சாகமாக இரவு பகலாக ஆராய்ச்சி செய்வேன்’ என்று கூறியிருப்பதைப் படிக்கும்போது வேதனை உருவாகிறது.

ராமானுஜத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட கணிதக் கல்வி கிடைக்கவில்லை. முறையான வழிகாட்டிகள் இருக்கவில்லை. ஆனாலும் அவர் கணக்கியல், எண்ணியல் கோட்பாடுகள், தொகை வரிசைகள், continued fractions, elliptic integrals, modular functions, mock theta functions போன்ற முக்கியமான துறைகளில் ஆயிரக்கணக்கான முடிவுகளை கண்டுபிடித்தார். இவர் கூறிய பல முடிவுகள் நிரூபணமின்றி இருந்தாலும், பின்னாட்களில் அந்த முடிவுகள் உண்மையானவை என்று நிரூபிக்கப்பட்டன. இவரது நோட்டுப் புத்தகங்களில் உள்ள பல சூத்திரங்கள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படாதவையாகவே உள்ளன. ராமானுஜத்தின் கணித முறையான கிரிப்டாலாஜி இன்று பல்வேறு அறிவியல் தொழில்நுட்பங்களில் பயன்பட்டு வருகிறது. ஆனால், அதை உருவாக்கியவர் ராமானுஜன் என்பது யாருக்கும் தெரியவில்லை.

அதேநேரம், இத்தனை அறிவு, திறமை, மேதமை இருந்தும் ராமானுஜத்தால் ஏன் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ இயலவில்லை என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

அங்கீகாரத்துக்கும் வெற்றிக்கும் அறிவு, திறமை மட்டும் போதாது. வாழ்க்கைச் சூழலும் சமுதாய ஒத்துழைப்பும் இருக்கும் இடத்தில் மட்டுமே சாதனையாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அடிமைப்பிடியில் இந்தியாவும் உலகம் முழுக்க போர் அபாயமும் சூழ்ந்திருந்த காலகட்டத்தில் ராமானுஜத்தின் திறமையைப் புரிந்துகொள்ளவும் கொண்டாடவும் யாரும் இருக்கவில்லை.

ஆனால், கொண்டாட்டங்களிலும் மரியாதையிலும் மட்டும் சாதனை இல்லை என்பதற்கு உதாரணம் ராமானுஜன். கணிதம் இருக்கும் வரை ராமானுஜத்தின் பெயரும் இருக்கும். இதுவே அவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

Leave a Comment