ஞாயிறு என்பது ரீசெட் பட்டன்

என்ஜாய் பண்ணுங்கள்.

வாரத்தின் ஏழு நாட்களிலும் மனிதர்கள் அதிகம் எதிர்பார்ப்பது ஞாயிற்றுக் கிழமை.  ஏனென்றால், ஞாயிறு என்பது ஒரு நாள்காட்டி நாளல்ல; அது மனதுக்கான ஓய்வு, உடலுக்கான சுகம்.

திங்கள் முதல் சனி வரை வாழ்க்கை ஒரு ஓட்டப்பந்தயம் போல செல்கிறது. அலாரம் சத்தம், அலுவலக அழுத்தம், படிப்பு சுமை, போக்குவரத்து நெரிசல், பொறுப்புகள் – இவை அனைத்தும் மனிதரை இயந்திரமாக மாற்றிவிடுகின்றன. ஆனால் ஞாயிறு மட்டும் மனிதருக்கு இந்த சக்கரத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. .

உண்மையான மகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை காலை வேகமாக எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிறிது நேரம் கூடுதலாக தூங்கலாம். குடும்பத்தோடு அமைதியாக தேநீர் குடிக்கலாம். குழந்தைகளின் சிரிப்பைக் கேட்கலாம். நண்பர்களுடன் பேசலாம். பிடித்த உணவை சாப்பிடலாம். மனதிற்கு பிடித்த பாடலைக் கேட்கலாம். இந்த சிறிய விஷயங்களே வாழ்க்கையின் பெரிய மகிழ்ச்சிகள் என்பதை ஞாயிறு நமக்குக் கற்றுத்தருகிறது.

உளவியல் ரீதியாக பார்த்தால், மனித மனதிற்கு ஓய்வு மிகவும் அவசியம். தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருந்தால் உடலும் மனமும் சோர்ந்து விடும். அதனால் தான் ஓய்வு நாள்கள் மன அழுத்தத்தை குறைத்து, புதிய ஆற்றலை உருவாக்குகின்றன. ஒரு நல்ல ஞாயிறு, ஒரு நல்ல வாரத்திற்கான எரிபொருள் போன்றது.

 ரீசெட் பட்டன்

மொபைல் போன் கூட சில நேரம் “ரீஸ்டார்ட்” செய்தால் வேகமாக வேலை செய்யும். அப்படியிருக்க மனித மனதிற்கு ஓய்வு தேவையில்லையா?
ஞாயிறு என்பது வாழ்க்கையின் ரீசெட் பட்டன்.
கடந்த வார தோல்விகளை மறந்து, புதிய வாரத்தை நம்பிக்கையுடன் தொடங்க மனதை தயார்படுத்தும் நாள்.

சிலர் ஞாயிற்றுக்கிழமையையும் கவலைகளில் கழிக்கிறார்கள். நாளை மீண்டும் வேலை, மீண்டும் அதே பிரச்சனை என்று நினைக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையை மாற்றுவது நாட்கள் அல்ல; நமது மனநிலையே. ஞாயிற்றுக்கிழமையை மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொண்ட மனிதன், வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்கிறான்.

பணத்தில் தேடாதீர்கள்

பலருக்கு மகிழ்ச்சி என்றால் பெரிய சம்பளம், பெரிய வீடு, பெரிய பதவி என்று தோன்றுகிறது. ஆனால் உண்மையான மகிழ்ச்சி எங்கே தெரியுமா?
உணவை அமைதியாக சாப்பிடும் நேரத்தில்.
குடும்பத்துடன் சிரித்து பேசும் நிமிடத்தில்.
பிடித்த புத்தகத்தை படிக்கும் அமைதியில்.
ஒரு மாலை தூக்கத்தில்.
ஒரு தேநீர் கோப்பையுடன் மழையை ரசிக்கும் தருணத்தில்.இந்த எளிய மகிழ்ச்சிகளை நினைவூட்டும் நாள்தான் ஞாயிறு.

வாழ்க்கை பாடம்

ஞாயிறு நமக்கு சொல்லும் மிகப்பெரிய பாடம் என்னவென்றால், “வேலை மட்டும் வாழ்க்கை அல்ல; வாழ்வதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.” என்பதுதான்.

மனிதன் வெற்றியை அடைய ஓட வேண்டும். ஆனால் எப்போது நிற்க வேண்டும் என்பதையும் தெரிந்திருக்க வேண்டும். ஓய்வில்லாத வாழ்க்கை வெற்றியாக தோன்றலாம்; ஆனால் அது மகிழ்ச்சியாக இருக்காது.

அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை,
மனதை சுமையிலிருந்து விடுவியுங்கள்.
உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்கள்.
குடும்பத்துடன் சிரியுங்கள்.
உங்களையே நேசியுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment