பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது.
குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் குறுகலான பார்வையுடன் பயணிப்பவர்கள், அக்கம்பக்கம்
நடப்பதை அறியாமல், இடறிவிழுந்து தோல்வியைத் தழுவுவார்கள் என்பதற்காக சொல்லப்படும் இந்தக்
கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
வாழ்க்கையில் கடினமாக உழைத்து சிரமப்பட்டு முன்னுக்கு
வந்தவன் பிரசன்னா. தன்னுடைய சேமிப்புகளை எல்லாம் ஒன்றுதிரட்டி புத்தம் புதிய கார் ஒன்றை
வாங்கிவந்தான். அந்தக் கார் மீது மிகவும் அன்பை பொழிந்தான். மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தான்.
பிரசன்னாவின் மகன் குட்டிப்பையன் விகேஷுக்கும் அந்த
கார் ரொம்பவும் பிடித்திருந்தது. அதனை சுற்றி விளையாடிக்கொண்டே இருந்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை.
காரை கழுவி முடித்து, வீட்டு வாசலில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தான் பிரசன்னா. காருக்குப்
பின்னே விளையாடிக்கொண்டு இருந்தான் விகேஷ். திடீரென ஏதோ வித்தியாசமாக சப்தம் வரவே நிதானமாக
எழுந்து காருக்குப் பின்னே எட்டிப் பார்த்தான் பிரசன்னா. அங்கே கண்ட காட்சி பிரசன்னாவுக்கு
பெரும் ஆத்திரத்தை உருவாக்கிவிட்டது. ஆம், கீழே கிடந்த ஆணியை எடுத்து காரின் பின்பக்கம்
எதையோ கிறுக்கிக்கொண்டு இருந்தான் விகேஷ். உடனே கையில் கிடைத்த குச்சியை எடுத்து விளாசுவிளாசு
என்று அடித்து தீர்த்துவிட்டான்.
கதறி அழுத விகேஷை, அவன் மனைவி தூக்கிச்சென்ற பிறகுதான்
பிரசன்னாவின் கோபம் தணிந்தது. காரில் எந்த அளவுக்கு கிறுக்கியிருக்கிறான் என்பதை அருகே
சென்று பார்த்த பிரசன்னாவுக்கு, இப்போது மீண்டும் ஓர் அதிர்ச்சி.
ஆம், அந்த காரில் ஐ லவ் யூ டாடி என்று குழந்தைத்தனமாக
கிறுக்கியிருந்தான் விகேஷ். தன் மீதான அன்பை, குழந்தை மொழியில் சொல்லியிருந்த மகனை தண்டித்துவிட்ட கொடுமைக்காக வேதனைப்பட்டான் பிரசன்னா.
மகனுக்கு ஆறுதல் சொல்வதற்கு அருகே சென்றவனைக் கண்டு அலறி நடுங்கினான். தப்பு செய்துவிட்ட குற்றவுணர்ச்சியில் கூனிக்குறுகிவிட்டான்
பிரசன்னா. சிறுவன் என்றதும் கண்டிப்பாக காரை
சேதம் செய்திருப்பான் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் மகனை பார்த்ததுதான் பிரசன்னாவின்
தவறு. அவன் என்ன செய்கிறான் என்று பாசத்துடன் எட்டிப் பார்த்திருந்தால், மகனின் பாசத்தை
கொண்டாடி இருக்கலாம். இந்த உலகத்திலேயே சந்தோஷமான அப்பாவாக மாறியிருப்பான் பிரசன்னா.
ஆனால் பெரும்பாலான நேரங்களில் மக்கள் அவசர கண்ணோட்டத்தில்தான்
அனைத்தையும் பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மனம் ஆசைப்படுவதை அல்லது நினைப்பதை
மட்டுமே கண்கள் பார்க்கின்றன. அதனால்தான் நிஜத்தை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது.
பிரசன்னாவைப் போலவே தன்னுடைய ஆசைப்படி இந்த உலகத்தைப்
பார்ப்பவர்கள்தான் உலகில் அதிகம். சின்ன வயதில் ஒருவனுக்கு அப்பாதான் உலகத்திலேயே பலசாலி,
அறிவாளி என்று தோன்றும். பள்ளிக்கூடம் போகும் நேரத்தில், ஆசிரியர்தான் உலகத்திலேயே
பெரியவர் என்று தோன்றும். வேலைக்குப் போகும் நேரத்தில் தன்னுடைய முதலாளிதான் உலகத்திலேயே
ஜீனியஸ் என்று தோன்றும். இவற்றுக்குக் காரணம் அதிகம் அறிந்துகொள்ளாத குறுகிய பார்வை
மட்டுமே.
அப்படியானால் எப்படி பார்க்கவேண்டும்?
கண்ணையும் காதையும் புத்தியையும் மனப்பூர்வமாக திறந்து
வைத்திருக்க வேண்டும். ஒரு தொழில் ஆரம்பிக்கும்போது தினம் ஆயிரம் ரூபாய் லாபம் வேண்டும்
என்று ஆசைப்பட்டால், மனம் முழுக்க முழுக்க, அந்த ஆயிரம் ரூபாயை அடைவது பற்றித்தான்
சிந்திக்கும். ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு கண்ணுக்கு முன்பு இருந்தாலும்
தெரியாது.
ஓர் அழகான பெண்ணுக்குப் பின்னே வாலிபர் செல்லும்போது,
எதிரே உறவினர்… நண்பர் என யார் வந்தாலும் அவர் கண்கள் பார்க்கவே பார்க்காது. அதனால்
குறுகிய பார்வை கொண்டவர்கள், தங்கள் பாதையையும் பார்வையையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
சகலத்தையும் திறந்த மனதுடன், எந்த முன்முடிவும் இல்லாமல் விசாலமாக பார்க்க கற்றுக்கொள்ள
வேண்டும்.
எதற்காக விசாலமாக பார்க்க வேண்டும்?
வாழ்க்கையில் நிறைய பணம் அடையவேண்டும் என்ற குறுகலான
பார்வையுடன் ஏராளமான நபர்கள் வாழ்கிறார்கள். ஒரே ஒரு வீடு மட்டும் சொந்தமாக வாங்கிவிட்டால்
போதும், ஒரே ஒரு கார் வாங்கிவிட்டால் போதும், சொந்தமாக ஒரு பிசினஸ் தொடங்கினால் போதும்
என்ற ஒற்றைப் பார்வை பலருடைய வாழ்நாள் ஆசையாக இருக்கிறது. பணம், புகழ், சொத்து போன்ற
ஏதேனும் ஒரு குறிக்கோளை நிறைவேறுவதற்காக தன் வாழ்நாளின் பெரும்பாலான நேரத்தை செலவழிக்கிறார்கள்.
ஆனால் வாழ்க்கை என்பது ஏராளமான அனுபவம் நிறைந்த புத்தகம்.
அத்தனை பக்கங்களையும் ரசிப்பதற்கு விசாலமான பார்வை நிச்சயம் வேண்டும்.
விசாலமாக பார்ப்பது எப்படி?
கண்டதையும் பார்க்கவேண்டும். அனைத்தையும் ரசிக்க வேண்டும்.
குழந்தையின் குறும்பு மட்டுமின்றி தாத்தாக்களின் தொணதொணப்பையும் ரசிக்க வேண்டும். கலை, இலக்கியம், அறிவியல், வரலாறு,
கணிதம் என சகலத்தையும் அறிந்துகொள்ள முயல வேண்டும்.
இயற்கை ஏராளமான அதிசயங்களை தன்னில் புதைத்து வைத்துள்ளது. நீர்வீழ்ச்சி, ஆறு, கடல்,
மலை, எரிமலை என்று பார்த்து ரசிக்கவேண்டிய இடங்கள் ஆயிரமாயிரம் உள்ளன. இன்பத்தை கொண்டாடுவதற்கு
உதவும் நட்புகளை பாராட்ட வேண்டும். காலம் காலமாக தொடரும் உறவுகளின் அன்பை மதிக்க வேண்டும்.
அனைவரது அன்பும் ஒத்துழைப்பும் இருந்தால் உன்னால் தொடர்ந்து வேகமாக செல்லமுடியும் என்பதால்
அனைவரையும் பார்க்க கற்றுக்கொள்.
பார்வை சரியாக இருக்கிறது என்பதை எப்படி அறிவது?
உன் கண்ணில் புரை இருந்தால் காட்சிகள் அனைத்தும் மங்கலாகவே
தெரியும். தன்னிடம் குறை உள்ளவர் பார்வைக்கு, எல்லாமே குற்றமாகத்தான் தெரியும். இவர்களால்
எப்போதும் அடுத்த அடியை திடமாக எடுத்துவைத்து நகரமுடியாது. வழியில் நல்லது மட்டும்
அல்ல, தீயவையும் எதிர்படவே செய்யும். அதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீ செல்லும்
வழி சரியாக இருக்கிறது என்றால் உன் பயணம் சந்தோஷமாக இருக்கும். உன் வாழ்க்கைப் பயணம்
இப்போது பதட்டமும் பரிதவிப்புமாக இருப்பது தெரிந்தால், உன் பார்வை குறுகல் என்று அர்த்தம்.
நின்று நிதானமாக அனைத்துப் பக்கமும் பார்வையை செலுத்தி உன் பயணத்தைத் தொடங்கு.
நாலாபக்கமும் கவனத்தை சிதறவிட்டால் குறிக்கோளை அடையமுடியாதே..?
குறிக்கோளை அடைந்தால் உனக்கு கிடைக்கப்போவது வெற்றி
மட்டும்தான். அந்த வெற்றியை யாருடன் கொண்டாடுவாய்? உன்னை தலைமீது வைத்து கொண்டாடுவதற்கு
குடும்பம் வேண்டும். பாராட்டுவதற்கு சுற்றமும் நட்பும் வேண்டும். அதனால் குதிரை போன்று
ஓடாதே… பறவை போல் பறந்து செல். இலக்கையும் அடைவாய், இன்பமும் பெறுவாய்.