மந்திரச்சொல்
மனிதர்களைப் புரிந்துகொள்வது ஒரு கலை. அதிலும், உண்மையாக இருப்பவர் யார், நன்மைக்காக நடிப்பவர் யார் என்பதைப் புரிந்துகொள்வது வாழ்க்கையின் மிக முக்கியமான திறன்.
உங்களுக்காகப் பொய் சொல்பவரை நண்பர் என்று அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். ஏனென்றால், பொய் சொல்வது அவரது குணமாக இருக்கும். அவருக்கு தேவை ஏற்படும்போது உங்களுக்கு எதிராகவும் பொய் சொல்வார்.
பொய் என்பது ஒரு வார்த்தை மட்டுமல்ல. அது ஒருவரின் நேர்மையை வெளிப்படுத்தும் கண்ணாடி. குறுகிய காலத்தில் ஆதாயம் தரும் பொய்யைவிட, நீண்ட காலத்தில் நம்பிக்கை உருவாக்கும் நேர்மையே ஒருவரின் மதிப்பை உயர்த்துகிறது.
உறவினர் ஒருவர், உங்கள் மனைவி அல்லது கணவரைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரது பேச்சை உடனே நம்பி சண்டையிடத் தொடங்கினால், உறவில் விரிசல் ஏற்படலாம். பொய் சொன்னவருக்கு எந்த இழப்பும் கிடையாது. இதில் பாதிக்கப்படுவது குடும்ப அமைதிதான்.
குடும்பத்தில் அமைதியை விரும்புபவர், ஒவ்வொரு செய்தியையும் நம்ப வேண்டியதில்லை; உண்மையை அறிந்துகொள்ளும் பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அலுவலகத்தில் திறமையானவராக இருப்பது உங்களை முன்னேற்றலாம். ஆனால், உங்களை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைக்கவேண்டுமென்றால் நற்பெயர் தேவைப்படும். பொய் சொல்பவர் அல்லது பொய் சொல்பவரை நம்புபவருக்கு அத்தகைய நற்பெயர் கிடைக்காது.
வாழ்க்கையில் எல்லோரையும் நம்ப முடியாது. அதே நேரத்தில், யாரையும் நம்பக்கூடாது என்று வாழ்வதும் சரியல்ல. நம்பிக்கைக்கும் கண்மூடித்தனத்திற்கும் இடையே ஒரு வேறுபாடு இருக்கிறது. ஒருவரை நம்புவது நல்லது; ஆனால், அந்த நம்பிக்கையின் பெயரில் உங்கள் சிந்திக்கும் திறனை இழப்பது ஆபத்தானது.
உங்களுக்காகப் பொய் சொல்பவர் உங்களுக்கு எதிராகவும் பொய் சொல்லக்கூடும் என்பது ஒரு எச்சரிக்கை. அது ஒவ்வொருவரையும் சந்தேகிக்கச் சொல்லவில்லை; ஒருவரின் நேர்மையைச் சரியாக மதிப்பிடச் சொல்கிறது.
உங்கள் வாழ்க்கையில் யாருக்கு இடமளிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் முடிவுகளை யாருடைய வார்த்தைகளின் அடிப்படையில் எடுக்கிறீர்கள் என்பதிலும் கவனமாக இருங்கள்.
ஏனெனில், தவறான மனிதரை நம்புவது சில நேரங்களில் ஒரு வாய்ப்பை இழக்கச் செய்யலாம்; ஆனால், தவறான மனிதரின் பொய்யை உங்கள் வாழ்க்கையின் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது உங்கள் எதிர்காலத்தையே பாதிக்கலாம்.
உங்கள் வெற்றிக்கு உழைப்பு தேவை. உங்கள் வளர்ச்சிக்கு அறிவு தேவை. ஆனால், அந்த வெற்றியை நீண்ட காலம் நிலைநிறுத்துவதற்கு நேர்மையும் நம்பகத்தன்மையும் தேவை.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
