எம்.கே.கண்ணன், ஜீவயோகம் யோகா மாஸ்டர்
அரிதான மனிதப் பிறவியை மகத்துவம் நிறைந்ததாக மாற்றுவதற்கு ஆரோக்கியமே அடிப்படை பண்பாக இருக்கின்றது. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதுடன் ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவு, நிறைவான தூக்கம், முறையான உடற்பயிற்சி, விருப்பமான உழைப்பு மற்றும் போதிய ஓய்வு தேவை.
இந்த ஆரோக்கிய பழக்கவழக்க பயிற்சிகளில் யோகாசன பயிற்சியும் ஒன்று. பொதுவாக ஆசனம் என்றால் இருக்கை என பொருள்படும். யோகாசனம் என்றால் யோகத்தோடு இணைந்து இருத்தல் என பொருள்படும். உடல் சீராக இயங்குவதற்கும், சுவாசம் முறையாக இயங்குவதற்கும். மனம் அமைதி பெறுவதற்குமான ஓர் எளிமையான யோகாசனப் பயிற்சியை தெரிந்து கொள்வோம்.
இதன் பெயர் செல்வ குப்தர் ஆசனம். இந்த ஆசனம் என்பது நமக்கு தேவையான அருட் செல்வம் மற்றும் பொருள் செல்வம் வழங்குவதுடன் உடல் மற்றும் மன ஆற்றலையும் அள்ளித்தருகிறது.
செல்வ குப்தர் ஆசனம் செய்முறை
1. சுக ஆசன (சம்மணம்) நிலையில் கண்களை மூடி அமர்ந்து பிரார்த்தனை.
2. உள்ளங்கை கீழ்நோக்க தோள்பட்டை வரை கைகளை மெதுவாக உயர்த்துதல்.
3. அதே நிலையில் உள்ளங்கை மேல் நோக்க கைகளை திருப்புதல்.
4. பின்பு காதருகில் வரை மெதுவாக கைகளை உயர்த்துதல்.
5. கைகளை தலைக்குமேல் நேராக நீட்டிய நிலையில் உள்ளங்கை கீழ்நோக்க விரல்கள் தொடும் நிலையில் மடக்குதல்.

6. கைவிரல்களை கோர்த்து அப்படியே மேல்நோக்கிய நிலையில் திருப்புதல்.
7. கண்களை மூடி சுவாசம் கவனித்தல்.
8. சுவாசம் இயல்பு நிலை அடைகிறவரை சுவாசத்தை கவனித்து முடிந்தவரை இருத்தல்
9. பின்பு மெதுவாக படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வருதல்.
செல்வ குப்தர் ஆசனத்தின் பயன்கள்
* மூளைக்கு சமச்சீரான ரத்த ஓட்டம் கிடைப்பதன் மூலம், மூளை புத்துணர்வு பெறுகின்றது.
* ஐம்புலன்களின் இயக்கம் மேன்மை பெறுகின்றன.
* கேட்கும் திறன் சிறப்படைகின்றது.
* கரங்கள், முதுகெலும்பு மற்றும் முழு உடலும் பலம் பெறுகின்றன.
* வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகள் சுத்திகரிக்கப்பட்டு முறையான செரிமானம் முறைப்படுத்தப்படுகின்றது.
* உடல் கழிவுகள் முறையாக வெளியேற்றப்படுகின்றது.
* எலும்பு மண்டலம் மற்றும் நரம்பு மண்டலம் பலம் பெறுகின்றது.
* உடலின் உள்ளுறுப்புகள் இருதயம் நுரையீரல் முறையாக இயங்குகின்றது.
* உடலின் தட்பவெட்பம் சமச்சீர் ஆக்கப்படுகின்றது.
* உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
* உடல் வளத்தால் மனம் வளம் பெறுகிறது.
* மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிப்பூரகம் போன்ற ஆதார சக்கரங்கள் சுத்திகரிக்கப்பட்டு முறையான இயக்கம் பெறுகின்றது.
* இயற்கையோடு இணைந்து வாழ்வதற்குரிய வலிமை உருவாகின்றது.
ஆகவே நாம் அனைவரும் செல்வ குப்தர் ஆசனம் அனுதினமும் செய்து வாழ்வில் உடல்நலம் மனவளம் பெற்று ஆனந்தமாக வாழ்வோம். ஜீவ யோகத்தில் இந்த செல்வ குப்தர் ஆசனத்தை வழங்கிய எனது குருசாமி அருள்திரு இறை இயல் சிவமதி அவர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
தொடர்புக்கு : 9443598919