ஆஸ்துமாவுக்கு எஸ்…. நோ

Image

ஆஸ்துமா எஸ்கேப் டிப்ஸ்

ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் அக்கம்பக்கத்தில் கொஞ்சம் உஷாராக இருந்தாலே போதும், நிறைய தொந்தரவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். அதாவது நிறைய விஷயங்களுக்கு நோ சொல்லவும், நிறைய விஷயங்களுக்கு எஸ் சொல்லவும் கற்றுக்கொண்டால் ஆஸ்துமாவுக்கு நோ சொல்லிவிடலாம்.

நோ சொல்லுங்கள்

  • கார்பட் இருந்தால் தூக்கி வெளியே போடுங்கள். கார்பட்டில் இருக்கும் தூசுக்களை அத்தனை எளிதில் அகற்றிவிட முடியாது, இது எளிதில் ஆஸ்துமாவை அதிகரித்துவிடும்.
  • வீட்டில் இருக்கும் குப்பைக் கூடை ஒருபோதும் திறந்திருக்க வேண்டாம்… மூடியில்லாத குப்பைகூடையை தூக்கிப் போடுங்கள்.
  • வாசனை திரவியங்களுக்கு கும்பிடு போடுங்கள். அதிக மணம் வீசும் வாசனைத் திரவியங்கள் ஆஸ்துமாவுக்கான காரணிகளைத் தூண்டிவிடுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • நாய், பூனை, கிளி, புறா போன்றவைகளை அருகில் அண்ட விடாதீர்கள். எத்தனை பாதுகாப்புடன் வளர்த்துவந்தாலும் விலங்குகளின் முடி, பறவைகளின் இறகுகள் கொட்டுவதை தடுக்க முடியாது. எனவே, இவற்றை வீட்டுக்குள் வளர்ப்பது வேண்டாம்.
  • புகை பழக்கம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் இடையூறு செய்யக்கூடியது. புகை பிடிப்பவர்கள் பக்கத்திலும் நிற்க வேண்டாம். அடுப்பிலும் அதிக புகை வருகிறது என்றால் தள்ளிநில்லுங்கள்.
  • பூக்களில் இருக்கும் மகரந்தம் ஆஸ்துமாவை தூண்டிவிடக்கூடியது. எனவே, பூக்களை எட்ட நின்று ரசிப்பதே போதும்.
  • வானிலை திடீரென மாறும்போது வெளியே நடப்பதை தவிர்த்துவிடுங்கள், ஜன்னலையும் மூடி வையுங்கள்.

எஸ் சொல்லுங்கள்

  • வெளியே செல்லும்போது மாஸ்க் அணிவதற்கு மறக்காதீர்கள். தூசுகளை தடுக்கும் சக்தி மாஸ்கிற்கு உண்டு. தினமும் புதிய மாஸ்க் அணிந்துகொள்வது முக்கியம்.
  • தினமும் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டியது மிகவும் அவசியம். உடற்பயிற்சியை தவிர்ப்பதும் ஆஸ்துமா அறிகுறிகளைத் தூண்டலாம். உடற்பயிற்சி செய்வதில் சிரமம் இருந்தால் மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகள் எடுத்துக்கொள்ளுங்கள்.
  • எதிர்பாராத தருணங்களில், எதிர்பாராத வகையில், எதிர்பாராத இடங்களிலும் ஆஸ்துமா தூண்டப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, எல்லா நேரங்களிலும் ஆஸ்துமா இன்ஹேலர் வைத்திருங்கள்.
  • ஆஸ்துமா தொந்தரவு இல்லையென்றாலும் குறைவாக இருந்தாலும் ஆஸ்துமாவுக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

எல்லா நேரங்களிலும் வெந்நீர் குடிப்பது ஆஸ்துமாவுக்கு இதமாக இருக்கும்.

Leave a Comment