கோழி வளர்ப்பது கொஞ்சுவதற்கு அல்ல; ஆடு வளர்ப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல…

மந்திரச்சொல்

தேவை இருக்கும் வரை மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள், கொண்டாடப்படுகிறார்கள். இனி, தேவையில்லை என்றதும் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளப்படுகிறார்கள். இதுவே, மனித வாழ்க்கையின் இன்னொரு பக்கக் குரூரமாக இருக்கிறது.

ஒரு ஊழியர் நிறுவனத்திற்கு லாபம் கொடுக்கும் வரை மதிக்கப்படுகிறார். அவரது திறன் குறைந்ததும், நிறுவனத்தின் நலன் கருதி வெளியேற்றப்படுகிறார். பெற்றோர் குழந்தைகளுக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்கள். ஆனால் வயதாகி அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை வந்தவுடன், புறக்கணிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் விரட்டிவிரட்டி காதலிக்கப்படுகிறாள். அவளை அடைந்தபிறகு அவமதிக்கப்படுகிறார்கள். இதுதான் மனித உறவுகளின் வலிமிகுந்த உண்மை.

நேசிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. ஒருவரை நாம் உண்மையாக நேசிக்கிறோமா அல்லது தேவை இருப்பதால் அவரிடம் அன்பாக இருக்கிறோமா என்ற கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்லும்போது மனித மனதின் நிஜ முகம் வெளிப்படும்.

ஒருவர் பணம் சம்பாதிக்கும்போது அவரைச் சுற்றி நிறைய கூட்டம் இருக்கும். ஒருவர் அதிகாரத்தில் இருக்கும்போது மிகப்பெரும் மரியாதை கிடைக்கும். அவர் ஆனால் அவர்கள் பணத்தை, அதிகாரத்தை இழந்துவிட்டால், சுற்றியிருந்த மனிதர்கள் காணாமல் போய்விடுவார்கள். அவர்களின் தேவை முடிந்ததும் உறவும் முடிகிறது. இது, மனித மனதின் மிகக் கொடூரமான உளவியல்.

மனிதன் அடிப்படையில் ஒரு தேவைகளால் இயக்கப்படும் உயிரினம். பாதுகாப்பு வேண்டும். உணவு வேண்டும். அன்பு வேண்டும். அங்கீகாரம் வேண்டும். பணம் வேண்டும். அதிகாரம் வேண்டும். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் மனிதர்களை மட்டுமே நெருக்கமாக வைத்துக்கொள்கிறோம்.

சில உறவுகள் உணர்ச்சியால் உருவாகின்றன. பல உறவுகள் தேவையால் நிலைத்து நிற்கின்றன. தேவை முடிந்தவுடன் உறவின் உண்மை சோதிக்கப்படுகிறது. அந்தச் சோதனையில் உண்மையான அன்பும் போலியான அன்பும் பிரிகின்றன.

ஒருவரைக் கொல்வது மட்டும் குரூரம் அல்ல. ஒருவரின் உதவி தேவைப்படும்போது மட்டும் உறவு வைத்துக்கொள்வது குரூரம். பணம் இருக்கும் வரை மரியாதை காட்டுவது குரூரம். அழகு இருக்கும் வரை காதலிப்பது குரூரம். உடல் வலிமை இருக்கும் வரை மதிப்பதும் குரூரம். முதிய வயதில் பெற்றோரைத் புறக்கணிப்பது குரூரம்.

உன்னை நான் நேசிக்கிறேன்” என்பதற்கும், நீ எனக்குத் தேவை என்பதற்கும் வித்தியாசம் உண்டு. முதல் வாக்கியம் தேவையின் மொழி. இரண்டாவது வாக்கியம் அன்பின் மொழி. ஒருவர் நமக்கு எதுவும் தர முடியாத நிலையிலும் அவருடைய மனிதத் தன்மையை மதிப்பது உண்மையான உறவு. உண்மையான அன்பு பயன்பாட்டைக் கணக்கிடாது. சுயநலம் மட்டும் எப்போதும் லாபநஷ்டக் கணக்கு பார்க்கும்.

ஒருவர் உங்களுக்கு என்ன கொடுக்கிறார் என்பதை வைத்து அவரை நேசிப்பது எளிது. அவர் எதுவும் தர முடியாத நிலையிலும் அவருடன் இருப்பது கடினம். அதுதான் உண்மையான அன்பு.

கோழி, ஆடு வளர்க்கிறோம், பராமரிக்கிறோம். ஆனால் அவற்றின் வாழ்க்கையின்  இறுதி முடிவை நாம் எடுக்கிறோம். அதுபோல மனிதர்களையும் சிலர் தங்கள் வாழ்க்கையில் வைத்திருக்கிறார்கள்.

உங்களை எல்லோரும் நேசிக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். சிலர் உங்களால் கிடைக்கும் நன்மைகளை மட்டுமே நேசிக்கலாம். இதற்காக மனிதர்களை வெறுப்பதற்கு அவசியம் இல்லை. மனிதர்களைப் புரிந்துகொண்டால் போதும்.  

எனவே, உங்களால் எதுவும் செய்ய முடியாத நாளிலும் உங்களுடன் இருப்பவர்களே உங்கள் உண்மையான உறவுகள். தேவைக்காக வளர்க்கப்படுவது உயிரினங்களின் விதியாக இருக்கலாம். அதேபோன்று தேவை முடிந்ததும் கைவிடும் மனிதர்களைப் புரிந்துகொண்டு, கொஞ்சம் தள்ளி நில்லுங்கள். அதுவே, நிம்மதி தரும்.

Leave a Comment