ஞானகுரு :
ஒரு மிகப்பெரும் யானையை அடக்கிவிட முடிகிறது. புலியை நெருப்பு வளையத்திற்குள் பாயச் செய்ய முடிகிறது. நீர் யானையின் வாய்க்குள் தலையை விட்டு எடுக்கிறார்கள். இவை எல்லாம் சாத்தியம் எனும் போது, ஒரு பெண்ணை உங்களுக்கு இணக்கமாக நடக்க வைக்க முடியாது என்று நினைக்கிறீர்களா..?
திருமணம் முடிக்கும் அத்தனை மணப் பெண்ணுக்கும் தனிக்குடித்தன ஆசை இருக்கிறது. அதனால் கணவனை கைக்குள் போட்டுக்கொண்டு மாமியாரை விரட்டிவிட ஆசைப்படுகிறார்கள். இது வெற்றிக்கான வழி இல்லை என்பதால் தோல்வி அடைந்து காயப்படுகிறார்கள். முதலில் மாமியாரை வசப்படுத்த வேண்டும். ஒரு மகள் போன்று சரண் அடைந்துவிடுங்கள்.
அவரது மகனை நீங்கள் நன்றாக கவனித்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும். அந்த காலம் வரும்வரை காத்திருங்கள். தாய்ப்பசுவை வென்றுவிட்டால், கன்றுக்குட்டி தலையை ஆட்டிக்கொண்டு தானே வந்துவிடும். அதற்காக தனிக்குடித்தன சந்தோஷத்தை அனுபவிக்கவே முடியாதா என்ற ஆதங்கம் வேண்டாம். தனிக்குடித்தனம் என்பது ஒரு மரத்தில் பழம் பழுப்பது போன்று தானாகவே நிகழும்… அதுவரை காத்திருக்க வேண்டும். அப்போது தான் அது இனிக்கும்.