மந்திரச்சொல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2016 அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதாகவும், அதற்கான செலவை மெக்சிகோவே ஏற்கும் என்றும் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதி அவரது பிரசாரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறியது. இதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும் வாக்களித்தார்கள்.
வெளிநாட்டில் இருந்து கருப்புப்பணத்தைக் கொண்டுவந்து இந்திய மக்களின் வங்கிக்கணக்கில் போடுவேன் என்று நரேந்திரமோடி வாக்கு சேகரித்தார். இதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும் மக்கள் ஆசைப்பட்டு வாக்களித்தனர்.
நீட் தேர்வை ரத்துசெய்யும் ரகசியம் இருக்கிறது என்று உதயநிதி வாக்கு கொடுத்தார். இதையும் மக்கள் நம்பினார்கள். ஆட்சிக்கு வந்ததும் ஒப்பந்தப் பணியாளர்கள் நிரந்தரப்பணியாளராக மாற்றப்படுவார்கள் என்று விஜய் வாக்களித்தார். வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும் மக்கள் வாக்களித்தனர்.
பொய் என்று தெரிந்தாலும் மக்கள் ஆசைப்படுகிறார்கள். ஏனென்றால், உண்மையைக் கேட்க யாரும் விரும்புவதில்லை. உண்மை சாதாரணமானது. ஆனால், பொய் கவர்ச்சியாக உள்ளது. எனவே, அதை ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் உண்மை கசப்பானது என்பதற்காக மனிதர்கள் அதை வெறுப்பதில்லை; அந்த உண்மை தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் பலவீனங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது என்பதற்காகவே அதை வெறுக்கிறார்கள்.
நாம் நம்புவதை உறுதிப்படுத்தும் தகவல்களை விரும்புவதும், அதற்கு முரணான தகவல்களைப் புறக்கணிப்பதும் மனித மனதில் இயல்பாக நிகழக்கூடியது. அதனால் சிலர் உண்மையைத் தேடுவதில்லை; தாங்கள் நம்புவதே உண்மை என்று உறுதிப்படுத்தும் மனிதர்களைத் தேடுகிறார்கள்.
குடும்பங்களில் பல பிரச்சினைகள் உண்மை தெரியாததால் உருவாவதில்லை. உண்மை தெரிந்திருந்தும் அதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாததால் உருவாகின்றன. தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டால் மதிப்பு குறைந்துவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், தவறை ஒப்புக்கொள்ளத் தெரியாத இடத்தில்தான் உறவுகளின் மதிப்பு குறையத் தொடங்குகிறது.
அழகான பொய் உடனடியாக நிம்மதி தருகிறது. ஆனால் அந்த நிம்மதிக்காக உண்மையைத் தொடர்ந்து மறுத்தால், நாளடைவில் அதே பிரச்சினை பெரிதாகிறது. உண்மை தரும் வலி பல நேரங்களில் தற்காலிகமானது; உண்மையைத் தவிர்ப்பதால் உருவாகும் பாதிப்பு நீண்டகாலமானது.
மக்களுக்குக் கடினமான முடிவுகளை விளக்குவதற்குப் பதிலாக, உடனடியாகக் கவரக்கூடிய வாக்குறுதிகளை வழங்குவது எளிது. ஒரு நிறுவனத்தில் பொருளின் குறைகளை வெளிப்படையாகச் சொல்வதைவிட, அதன் சிறப்புகளை மட்டும் விளம்பரப்படுத்துவது எளிது.
ஆனால் மக்களுக்குப் பிடித்தமான செய்தி என்பதாலேயே அது உண்மையாகிவிடாது. நம்பிக்கையூட்டும் வாக்குறுதி என்பதாலேயே அது நிறைவேறக்கூடியதாகிவிடாது.
ஒரு மனிதரின் உண்மையான வளர்ச்சி அவர் எவ்வளவு அறிவாளி என்பதில் மட்டும் இல்லை; தனக்குப் பிடிக்காத உண்மையைக்கூட எவ்வளவு நேர்மையாக எதிர்கொள்கிறார் என்பதிலும் இருக்கிறது.
நீங்கள் தவறு செய்திருக்கலாம். தவறான மனிதரை நம்பியிருக்கலாம். பணத்தை வீணடித்திருக்கலாம். உறவுகளில் மற்றவர்களைப் புண்படுத்தியிருக்கலாம். ஒரு வாய்ப்பைத் தவறவிட்டிருக்கலாம். இவற்றை ஒப்புக்கொள்வது உங்களைத் தாழ்த்திவிடாது. உங்களைப் பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்ளும்போதுதான், உங்களை மேம்படுத்துவதற்கான கதவு திறக்கிறது.
பொய்யான நம்பிக்கையால் மனதை மகிழ்விப்பதைவிட, உண்மையான நம்பிக்கையால் வாழ்க்கையை மாற்றுவது மேலானது.
உண்மையான அன்பு எப்போதும் காதுக்கு இனிமையாக இருக்க வேண்டியதில்லை; அது வாழ்க்கைக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும். அழகான பொய்களால் மனதை அலங்கரிக்காதீர்கள். கசப்பான உண்மைகளால் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துங்கள்.
அதுவே மனப்பக்குவம். அதுவே சுயமரியாதை. அதுவே உண்மையான வளர்ச்சி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
