கோபத்தில் பேசுவதை உற்றுக் கவனியுங்கள்… அதில் நிறைய உண்மைகள் ஒளிந்திருக்கலாம்.

மந்திரச்சொல்

மனிதர்கள் எப்போதும் தங்களுடைய உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்துவதில்லை. சமூகத்தில் நல்ல பெயர் வேண்டும், மற்றவர்கள் தங்களைப் பற்றி தவறாக நினைக்கக் கூடாது, உறவுகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மனதிலிருக்கும் அதிருப்தியை மறைத்துக்கொள்கிறார்கள்.

ஆனால், கோபம் அதிகரிக்கும்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது. எனவே, மறைத்துவைத்திருக்கும் எரிச்சல், ஏமாற்றம், பொறாமை, பயம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகள் வார்த்தைகளில் வெளிப்படலாம்.

கோபம் வருவது மனித இயல்பு. ஆனால், கோபத்தில் மற்றவர்களை அவமதிப்பது அவசியமில்லை என்பதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். அதாவது, கோபம் வரும்போது உடனடியாகச் செயல்படாமல், தன்னுடைய உணர்ச்சிகளை எழுதிவைப்பார். அதிருப்தியை கடிதமாக எழுதிவிட்டு அனுப்பாமல் வைத்திருப்பார். பின்னர், அதை அனுப்ப வேண்டுமா அல்லது தேவையில்லையா என்பதை முடிவு செய்வார்.

லிங்கன் நமக்கு ஒரு முக்கியமான விஷயம் கற்றுத்தருகிறார். கோபத்தை வெளிப்படுத்துவது முக்கியம். ஆனால், அது உறவுகளை, எதிர்காலத் திட்டங்களை  அழித்துவிடாமல் பாதுகாக்கும் பண்பாக இருக்க வேண்டும்.

கோபம் அதிகரிக்கும்போது மனிதர்களின் சிந்தனை சில நேரங்களில் குறுகிவிடலாம். அந்த நேரத்தில் அவர்கள் நிகழ்காலப் பிரச்சினையை மட்டும் பேசாமல், பழைய காயங்களையும் தவறுகளையும் சேர்த்துப் பேசலாம். ஒரு சிறிய சம்பவத்தைப் பெரிதாக்கலாம். தற்காப்புக்காகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

எனவே, கோபத்தில் முழு உண்மையும் வெளிப்படலாம். அதற்காக சம்பந்தப்பட்ட மனிதரை வெறுக்கத் தேவையில்லை. அதேநேரம், அந்த வார்த்தைகளை முற்றிலும் புறக்கணிப்பதும் தவறு.

கோபத்தில் தவறாகப் பேசியிருந்தால், பின்னர் அதை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாரா அல்லது தொடர்ந்து குற்றம் சாட்டுகிறாரா என்ற கேள்வி முக்கியம். இதற்கான பதில் அவரது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனையும், உறவுகளில் அவர் கடைப்பிடிக்கும் மரியாதையையும் புரிந்துகொள்ள உதவும்.

குடும்பத்தில் ஒருவர் கோபத்தில் பேசும் வார்த்தைகள் மற்றவர்களின் மனதில் ஆழமான காயங்களை ஏற்படுத்தலாம். தம்பதியரில் ஒருவர் தொடர்ந்து அவமதிப்பது, மிரட்டுவது அல்லது பயத்தை ஏற்படுத்துவது வழக்கமாக இருந்தால், அதைச் சாதாரண தம்பதியர் சண்டை என்று மட்டும் கருதாமல், தேவையான ஆதரவு பாதுகாப்பையும் நாடுவது முக்கியம். அதேபோல், பெற்றோரும் கோபத்தில் பிள்ளைகளிடம் காயப்படுத்தும் வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

பிள்ளைகளுக்குக் கோபப்படக் கூடாது என்று கற்றுக்கொடுப்பதைவிட, கோபப்பட்டாலும் மற்றவர்களைக் காயப்படுத்தாமல் இருப்பது எப்படி என்று கற்றுத்தர வேண்டும்.

ஒருவர் ஒருமுறை கோபத்தில் தவறாகப் பேசியிருக்கலாம். அந்தச் சம்பவத்தை மட்டும் வைத்து அவருடைய குணத்தை முழுமையாக வரையறுக்க வேண்டாம். கோபம் தணிந்த பிறகு அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பாருங்கள். மன்னிப்புக் கேட்பது மட்டும் போதாது. அதற்குப் பிறகு நடத்தை மாறுகிறதா என்பதும் முக்கியம். உண்மையான பொறுப்பேற்பு என்பது தவறை ஒப்புக்கொள்வதுடன், அதை மீண்டும் செய்யாமல் இருப்பதிலே உள்ளது.

மற்றவர்கள் கோபத்தில் பேசும்போது அவர்களின் வார்த்தைகளைக் கவனிப்பது போலவே, நீங்கள் கோபத்தில் என்ன பேசுகிறீர்கள் என்பதையும் கவனியுங்கள். உங்கள் வார்த்தைகள் பிறர் மனதைப் புண்படுத்துகிறதா? பிறரை பலவீனப்படுத்துகிறீர்களா? பின்னர் வருந்துகிறீர்களா என்றெல்லாம் கேட்டுக்கொண்டால், நம்மை மேம்படுத்திக்கொள்ளலாம்.

அன்பு என்பது இனிமையாகப் பேசுவதில் மட்டுமில்லை. கோபம் வந்தாலும் காயப்படுத்தாமல் பேசுவதிலும் இருக்கிறது. நல்ல உறவு என்பது ஒருபோதும் கோபப்படாத உறவு அல்ல. கோபம் வந்தாலும் ஒருவரையொருவர் இழிவுபடுத்தாமல், பிரச்சினையை பேசுவதில் உள்ளது.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment