மந்திரச்சொல்
ஒருவரின் உண்மையான குணம், மற்றவர்கள் பார்க்கும்போது அவர் எப்படி நடக்கிறார் என்பதில் இல்லை; யாரும் பார்க்காதபோது அவர் என்ன செய்கிறார் என்பதில்தான் இருக்கிறது. பாராட்டு பெறுவதற்காக நல்லவராக இருப்பது எளிது. யாரும் பார்க்காதபோதும் நல்லவராக இருப்பதே உயர்ந்த மனிதப் பண்பு.
மற்றவர்கள் பாராட்டுவதற்காக செய்யப்படும் நல்ல செயல்கள் தற்காலிகமானவை. இதை எல்லோருமே செய்வார்கள். ஆனால், ஒரு தனிமனிதரின் உண்மையான குணத்தை, அவர் பிறர் முன்னிலையில் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை விட, அவர் தனிமையில் இருக்கும்போது எப்படி நடந்துகொள்கிறார் என்பதைக் கொண்டே அளவிட முடியும்
சாலையில் யாரும் இல்லாதபோதும், குப்பைத் தொட்டிக்குள் குப்பையை போடுகிறார் என்றால், அவர் எப்போதும் சரியான செயல்களைச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார் என்று அர்த்தம். இந்த செயல் ஒரே நாளில் வருவதில்லை. தொடர்ச்சியாக நல்ல மனநிலையில் இருக்கிறார். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்குப் பதிலாக, தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கிறார். எனவே, சூழ்நிலை மாறினாலும், கூட்டம் மாறினாலும், அவர் இயல்பு மாறாது.
தேர்வு அறையில் கண்காணிப்பாளர் கவனிக்காத நேரத்திலும் காப்பியடிக்காமல் எழுதும் மாணவர், மதிப்பெண்ணை விட நேர்மையை வெற்றியாகக் கருதுகிறார்.
அலுவலகத்தில் யாரும் இல்லாதபோதும் நிறுவனத்தின் பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லாதவர், தன் ஒழுக்கத்தைப் பாதுகாக்கிறார்.
சாலையில் கிடக்கும் நகையை யாரும் பார்க்காத நேரத்திலும் காவல் நிலையத்தில் ஒப்படைப்பவர், தனது மனசாட்சிக்கு உண்மையாக வாழ்கிறார்.
இப்படிப்பட்ட செயல்கள் யாராலும் பாராட்டப்படாமல் இருந்தாலும், மனதில் நம்பிக்கை, அமைதி, தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சி கொடுக்கிறது.
பொதுவாக ஒவ்வொரு நல்ல செயலும் மூளையில் பாதையை உருவாக்குகிறது. ஆரம்பத்தில் சாதாரண செயலாக இருந்தாலும், தொடர்ந்து யாரும் பார்க்காத நேரத்திலும் நேர்மையாக நடப்பது, இயல்பான குணமாக மாறிவிடுகிறது.
யாரும் கவனிக்காத நேரத்தில் ஒருவர் என்ன செய்கிறாரோ, அதுவே உண்மையில் அவர் யார் என்பதை அவருக்குக் காட்டுகிறது. பாராட்டுக்காகச் செய்யும் செயல்கள் சலுகையைப் பெற்றுத்தரலாம். ஆனால் யாரும் பார்க்காதபோது செய்யும் செயல்களே உண்மையான மதிப்பு தரும் மகிழ்ச்சியின் திறவுகோல்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
