மந்திரச்சொல்
வீட்டில் ஒரு மின்விசிறி தொடர்ந்து சுழன்றுகொண்டு இருக்கும்போது அதன் முக்கியத்துவம் தெரியாது. அது நின்ற பிறகுதான் அதன் அவசியத்தை உணர்கிறோம். அப்படித்தான், நம்முடன் இருக்கும் நல்ல மனிதர்கள் இருப்பை நாம் அவர்கள் அருகில் இருக்கும்வரை உணர்வதே இல்லை.
நம்முடன் இருக்கும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், உடன் பணியாற்றும் நபர்களில் நல்லவர்களை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். அவர்கள் தினமும் நம்மை கவனிப்பது இயல்பாகத் தோன்றுகிறது. நாம் அழைத்தால் உடனே வருவது அவர்களின் கடமை என்று நினைக்கிறோம். நம்முடைய தவறுகளை பொறுத்துக்கொள்வதை அவர்களின் பலவீனம் என்று புரிந்துகொள்கிறோம்.
ஒருநாள் அவர்கள் இல்லாமல் போகும்போது தான் உண்மை புரிகிறது. அப்போது நாம் தேடுவது ஒரு மனிதரை மட்டுமல்ல, நமக்காக இருந்த ஒரு இதயம். நல்லவர்களை ஏன் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்..?
நல்ல மனிதர்கள் ஒருபோதும் தங்களை விளம்பரம் செய்துகொள்ள மாட்டார்கள். நான் உனக்காக இதைச் செய்தேன், நான் இல்லையென்றால் நீ என்ன செய்வாய்? என்றெல்லாம் கேட்க மாட்டார்கள். அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்து விட்டு அமைதியாக இருப்பார்கள். அதனால்தான் அவர்களின் இருப்பு பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் அவர்கள் விலகிய பிறகு அந்த வெற்றிடம் தெரியும்.
அன்பு தொடர்ந்து கிடைக்கும்போது நமது உணர்வு மங்கிவிடுகிறது. ஒருநாள் அந்த மனிதர் பேசுவதை நிறுத்திவிடுகிறார். கவலைப்படுவதை நிறுத்திவிடுகிறார். உதவுவதை நிறுத்திவிடுகிறார். ஏனென்றால், பல நாட்களாக அவரது அன்பை மதிக்காமல் இருந்ததன் விளைவாக அவர் மெதுவாக விலகியிருக்கிறார்.
ஒரு நல்ல மனிதர் அதிகமாக சண்டையிட மாட்டார். ஒவ்வொரு தவறுக்கும் பதில் சொல்ல மாட்டார். ஒவ்வொரு அவமதிப்புக்கும் எதிர்த்து நிற்க மாட்டார். பல நேரங்களில் உறவைக் காப்பாற்றுவதற்காக அமைதியாக இருப்பார். இந்த அமைதியை பலர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். என்ன செய்தாலும் இவர் விலகிப் போக மாட்டார் என்று அசட்டையாக இருக்கிறார்கள். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அன்புக்கும் ஒரு சோர்வு உண்டு. மன்னிப்புக்கும் ஒரு முடிவு உண்டு என்பதால் நல்ல மனிதர் விலகிவிடுகிறார்.
இந்த இழப்பு சில உண்மைகளை கற்றுத்தருகிறது. ஒருவர் நம்முடன் இருக்கும்போது அவரது குறைகள் மட்டுமே நமக்குத் தெரியும். அவர் இல்லாதபோது அவரது நிறைகள் நினைவுக்கு வருவதுதான் மனித இயல்பு.
அம்மா உயிருடன் இருக்கும்போது எப்போதும் அறிவுரை சொல்கிறார் என்று தோன்றலாம். அம்மா இல்லாதபோது, யாராவது என்னைப் பற்றி இப்படி கவலைப்படுவார்களா என்று மனம் தேடும். ஒரு உண்மையான நண்பர் அருகில் இருக்கும்போது அவரது ஆலோசனை தொந்தரவாகத் தோன்றலாம். அவர் விலகிய பிறகு, நமது வெற்றியை மனதார மகிழ்ந்தவர் ஒருவரும் இல்லை என்பது புரியும். ஒரு நல்ல வாழ்க்கைத்துணை அருகில் இருக்கும்போது அவரது அக்கறையை கட்டுப்பாடு என்று நினைக்கலாம். அவர் இல்லாதபோது தான், நம்முடைய நலனுக்காக உண்மையாக இருந்தவர் என்பது தெரியும்.
எல்லோரும் நம்மை முழுமையாக நேசிப்பதில்லை. சிலர் மட்டும் நம்மை தாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் நாம் தோல்வியடைந்தபோது அருகில் இருப்பவர்கள் மிகக் குறைவு. நாம் தவறு செய்தாலும் திருத்த முயற்சிப்பவர்கள் இன்னும் குறைவு. நம்மிடம் எதுவும் கிடைக்காவிட்டாலும் நம்மை நேசிப்பவர்கள் மிகவும் அரிது. அப்படிப்பட்ட மனிதர்கள்தான் உண்மையான செல்வம். அவர்களை பணத்தால் வாங்க முடியாது. பதவியால் உருவாக்க முடியாது. அதிகாரத்தால் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் வாழ்க்கையில் கிடைப்பது ஒரு அதிர்ஷ்டம். அவர்களை இழப்பது ஒரு பெரிய இழப்பு.
மனிதர்கள் இறந்த பிறகு அவர்களைப் புகழ்வதில் அர்த்தமே இல்லை. உயிருடன் இருக்கும்போது சொல்லாத அன்பை, அவர்கள் இல்லாதபோது கண்ணீராகச் சொல்கிறோம். அவர்கள் அருகில் இருக்கும்போது நன்றி சொல்லாமல், அவர்கள் பிரிந்த பிறகு நினைவுகளைப் பற்றி பேசுகிறோம்.
ஒரு நல்ல மனிதருக்கு நாம் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய மரியாதை அவரது இறப்புக்குப் பிறகு செலுத்தும் அஞ்சலி அல்ல. அவர் உயிருடன் இருக்கும்போதே அவரது மனதை காயப்படுத்தாமல் இருப்பதுதான்.
உண்மையான ஒருவரின் இடத்தை நூறு அறிமுகங்கள் நிரப்ப முடியாது. உண்மையாக நேசித்த ஒருவரின் இடத்தை ஆயிரம் மனிதர்கள் நிரப்ப முடியாது. அதனால், உங்களை நேசிப்பவர்ககளை அலட்சியப்படுத்தாதீர்கள். உங்களை மன்னிக்கிறார்கள் என்பதற்காக மீண்டும் மீண்டும் தவறு செய்யாதீர்கள். உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை எப்போதும் காத்திருக்க வைக்காதீர்கள். கிடைத்த நல்ல மனிதர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
