ஞானகுரு பதில்கள்
கேள்வி : சமீபத்தில் தங்களைக் கவர்ந்த பொழுதுபோக்கு படம், சீரியல் எது..?
- டி.தனபாலன், சேலம்.
ஞானகுரு :
சினிமா என்பது காட்சி ஊடகம். அதாவது கண்களுக்கு விருந்தளிக்க வேண்டும். நாம் கற்பனை செய்வதைவிட, சினிமாவில் பிரமாண்டத்தைக் காட்ட வேண்டும் அல்லது நம் பக்கத்து வீட்டில் நடப்பது போன்று நிஜத்தைக் காட்ட வேண்டும். அது உணர்வாக இருந்தாலும் ஃபேன்டஸியாக இருந்தாலும் மனதை தொடும்போது வெற்றி கிடைத்துவிடுகிறது. கண்டதையும் படிக்க வேண்டும் என்பது போல் கண்டதையும் ரசித்துப் பார். சினிமாக்களைவிட இப்போது ஓ.டி.டி.களில் உணர்வுகளும் உருவகங்களும் சிறப்பாக கையாளப்படுகின்றன. நம் வரலாற்றை திரும்பிப்பார்க்க வைக்கும் ஒரு வெப்சீரிஸ் என்றால் The Forgotten Army. நமது காவல் துறையின் இன்னொரு பக்கத்தை Delhi Crime நீதித்துறையின் புதிய பரிமாணத்தை Criminal Justice மருத்துவத்தின் மேன்மையை Grey’s Anatomy ஆகியவற்றில் பார்க்கலாம். இந்த விஷயத்தில் தென் கொரியர்கள் மிகவும் ரசனையாக மாறியிருக்கிறார்கள். அவர்களது Extraordinary Attorney Woo வெப்சீரிஸை பார்த்தால், எப்பேர்ப்பட்ட மனிதருக்கும் பூஸ்ட் கிடைத்துவிடும்.
கேள்வி ; என்னை யாருமே மதிப்பதில்லை, காரணமும் எனக்குத் தெரியவில்லை..?
- செ.அழகேசன், மயிலாடுதுறை.
ஞானகுரு :
பொதுவாக எப்படிப்பட்ட மனிதர்களை மதிக்காமல் தவிர்க்கிறார்கள் தெரியுமா? தேவையில்லாமல் அதிகம் பேசுபவர்களை யாரும் விரும்புவதில்லை. எனவே அமைதியாக இருங்கள். உங்களைப் பற்றிய அத்தனை தகவல்களையும் பிறரிடம் சொல்லிவிடாதீர்கள். அதாவது, திறந்த புத்தகமாக வாழ்பவர்களுக்கு மதிப்பு கிடையாது. உங்களிடம் ஏதோ ஒன்று இருப்பதாக நினைக்கும் பட்சத்திலே மதிப்பார்கள். பிறர் அவமானம், அவமரியாதை செய்வதை பொறுத்துக்கொள்பவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள். எல்லா விஷயத்திலும் சந்தேகம் கேட்பவரை யாருக்கும் பிடிப்பதில்லை. நீங்களே முடிவு எடுப்பவராக இருங்கள். அப்பாவியாக இருப்பவரை யாரும் மதிப்பதில்லை, தெளிவாக இருங்கள். இந்த காரணங்களில் எது உங்களிடம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து தவிர்த்துவிடுங்கள், மதிப்பு தானே வந்துவிடும்.